ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இல்லாவிட்டாலும், அவர் தொடக்கி வைத்த வௌ்ளிக்கிழமை விவகாரப் பயம், இலங்கையர்களிடம் தொடர்வதாகவே தெரிகிறது!

கடந்த வௌ்ளிக்கிழமை (12) சமூக ஊடகங்களில் தீயாகப் பரவிய வதந்தி, மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்படப் போகிறார் என்பதுதான்!

அரசியலமைப்பின் படி, தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன பதவி விலகினாலோ, ஜனாதிபதியால் அவர் பதவி விலக்கப்பட்டாலோ, அல்லது அவர் எம்.பி பதவியை இழந்தாலோ, பாராளுமன்றத்தின் நம்பிக்கையைத் தக்கவைக்கக் கூடியவர் என்று ஜனாதிபதி நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, பிரதமராக நியமிக்க முடியும்.

ஆகவே, இதன் நடைமுறை ரீதியிலான இரத்தினச் சுருக்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பாராளுமன்றத்தில் இன்னமும் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் விரும்பினால், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகலாம் என்பதுதான்! நிற்க!

கடந்த வருடம், இதே மாதமளவில் இலங்கை தனது சுதந்திர வரலாற்றில் மோசமான பொருளாதாரப் பிறழ்வைச் சந்தித்து ‘திக்கி விக்கி’ நின்றது.

மின்வெட்டுகள், எரிபொருள் தட்டுப்பாடு, பொருட்களுக்கான தட்டுப்பாடு, அதீத பண வீக்கம், பொருட்களின் விலைகளில் அதிரடி உயர்வு என இலங்கை மக்கள் திண்டாடி நின்றனர்.

அதனால் வந்த கோபத்தின் விளைவாக மக்கள் வீதிக்கு இறங்கினர்.

நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் தள்ளிய ஜனாதிபதி கோட்டாவை பதவி விலகக் கோரிய போராட்டங்கள், அதிரடியாக தலை தூக்கின. விளைவாக முதலில் ராஜபக்‌ஷர்கள் பதவி விலகினர்.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகினார். தொடர்ந்து, தனி ஆளாக பாராளுமன்றத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரமரானார். பிறகு கோட்டா பதவி விலகி, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானமை யாவரும் அறிந்த கதை.

உண்மையில், ஜனாதிபதியாகிய பின்னர், ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க செய்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இன்றைய அரசியல் சூழலில், அவருடைய அந்தச் செயல்களுக்கான அங்கிகாரம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், வரலாறு அவரை சரியாக அங்கிகரிக்கும்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஒன்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். இலங்கை பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள், ராஜபக்‌ஷர்கள் மீது கடும் விசனமும் கோபமும் கொண்டிருக்கிறார்கள்.

2022ஆம் ஆண்டு வரை ராஜபக்‌ஷர்களை தமிழர்களும் முஸ்லிம்களும், தாராளவாத சிங்களவர்களும்தான் வெறுத்தார்கள்.

ராஜபக்‌ஷர்களின் பேரினவாத அரசியலும், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் அதற்கு முக்கிய காரணங்களாகும்.

ஆனால், பெரும்பான்மைச் சிங்கள-பௌத்த மக்களிடம், ராஜபக்‌ஷர்களுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தது. அவர்கள் தமது பெரும் சாதனையாகச் சொல்லிக்கொள்ளும் ‘யுத்த வெற்றி’ அதற்கு முக்கிய காரணம்.

ஆனால், 2022ஆம் ஆண்டு, பொருளாதாரப் பிறழ்வு, ராஜபக்‌ஷர்கள் மீது கடும் கோபத்தையும் விசனத்தையும் அவர்களை ஆதரித்த சிங்கள-பௌத்த மக்களிடையேயே ஏற்படுத்தியது.

அதனால்தான், அவர்களுடைய வழமையான தகிடுதத்தங்களால் கூட, தமது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் போனது. அவர்கள் பதவிகளை விட்டு விட்டு, ஓடினார்கள் என்பதுதான் உண்மை.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானபோது, அவரை அந்தப் பதவிக்கு தெரிவுசெய்ய அரசியலமைப்பு அடிப்படையிலான பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது, பெரும்பான்மையாக வாக்களித்தவர்கள் ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவினர்தான்.

அதனால், ‘ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்‌ஷர்களைக் காப்பாற்ற வந்தவர்’ என்ற விமர்சனத்தை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்.

ராஜபக்‌ஷர்களைப் பொறுத்தவரையில், ரணில் என்பவர் பாதுகாப்பான தெரிவு. அதற்கு முக்கிய காரணம்,

அவரது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஓர் ஆசனம் மட்டுமே இருந்தது. அவருக்கு பெரும்பான்மையின மக்களிடையே பெரும் செல்வாக்கு இருக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியின் தலைமைப்பீடம், அவரது வைரியாக இருந்தது.

ஆகவே, ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருந்தாலும், பாராளுமன்றத்தின் ஊடாகத் தனக்கு வேண்டியவற்றை ஆற்றிக்கொள்ள, ஜனாதிபதி ரணில் முழுமையாக பொதுஜன பெரமுனவில் தங்கியிருக்க வேண்டியதாக இருக்கும்.

இந்தக் கணக்கில்தான் ராஜபக்‌ஷர்கள், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு ஆதரவளித்தனர்.

இந்த முடிவு, ராஜபக்‌ஷர்களின் ஆஸ்தான ஆதரவாளர்களாக இருந்து இனவாத அரசியலை முன்னெடுத்த பலரையும், ரணில் விக்கிரமசிங்கவோடு தனிப்பட்ட குரோதம் கொண்ட பலரையும் அதிருப்தியடையச் செய்தது.

இதன் விளைவாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டளஸ் அழகப்பெரும, ஜீ.எல் பீரிஸ், சரத் வீரசேகர போன்றோர், ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து இயங்கத் தொடங்கினர்.

இதேவேளை, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டயானா கமகே ஆகிய ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வந்த முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியினர், மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவோடு கைகோர்த்துக்கொண்டனர்.

ராஜபக்‌ஷர்கள் இல்லாத அமைச்சரவையைக் கொண்டு, இதுவரை காலமும் ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொருளாதாரப் படுகுழியிலிருந்து மீட்கும் கடும்பணியை முன்னெடுத்து வருகிறார்.

அதில் கணிசமான அடைவுகளையும் அவர் பெற்றிருக்கிறார். மின்வெட்டுகள் இல்லாமல் போயின; எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடர்ந்து அனைவருக்கும் கிடைக்கிறது;

பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன; பணவீக்க வீதம் கணிசமாகக் குறைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், இலங்கையின் பொருளதாரத்துக்குப் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி போன்றோரின் கடும் விமர்சனங்களுக்கு நடுவே, ஜனாதிபதி ரணில், மேற்சொன்ன அனைத்து அடைவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக சாதித்ததன் விளைவாக, கட்சிசாரா பொதுமக்களிடையே, அவருக்கு கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில்தான், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகப் போகிறார் என்ற வதந்தி உலா வருகிறது.

பொதுஜன பெரமுனவுக்குள் பசில் ராஜபக்‌ஷ, தன்னை முன்னிறுத்தத் தொடங்கி இருக்கிறார். ராஜபக்‌ஷர்கள் இல்லாத அமைச்சரவையைக் கொண்ட ஆட்சியில், ஆளும்கட்சியினராக இருந்தும் தமக்கு வேண்டியவற்றை செய்துகொள்ள முடியாமல்,

ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த அதிருப்தி, பசில் ராஜபக்‌ஷவை முன்னிறுத்தும் அவர்களது அரசியலுக்கு அச்சாரமாக மாறியிருக்கிறது. பசில் ராஜபக்‌ஷ முன்னிறுத்தப்படுவதுதான், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்படுவது பற்றிய பேச்சின் தோற்றுவாயாக இருக்கிறது.

இதற்கு இரண்டு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று, ராஜபக்‌ஷர்களுக்கு இடையிலான போட்டி. ராஜபக்‌ஷர்கள் தமது உள்வீட்டுப் பிரச்சினைகளை வௌியில் கொண்டுவருவதில்லை.

ஆனால், அதன் அர்த்தம் உள்வீட்டுப் பிரச்சினைகள் இல்லை என்பதல்ல. பசில்-நாமல் பனிப்போரில், பசிலின் பக்கம் ஆதரவாளர்கள் காற்று வீசத்தொடங்கி உள்ளது.

மஹிந்த பிரதமரானால், அந்தக் காற்று மஹிந்த பக்கம் வரும். அதன்வழியாக நாமல் பக்கம் வரும் என்பது ஒரு கணக்கு. இதற்காக, மஹிந்த பிரமராக முயலலாம்.

மற்றைய பரிமாணம், பொதுஜன பெரமுன, பசில் ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் முழுமையாகப் போவதை ரணில் விரும்பாமை. பசிலுக்கும் ரணிலுக்கும் இடையில் நட்புக் கிடையாது;

புரிந்துணர்வும் கிடையாது; நம்பிக்கையும் கிடையாது. ஆகவே, பொதுஜன பெரமுன, முழுமையாக பசிலின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதை ரணில் விக்கிரமசிங்க விரும்பமாட்டார்.

ரணிலின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட, பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவினரின் ஆதரவு அவசியம். பசில் வந்தால், அந்த ஆதரவுக்காக அவர் விதிக்கும் நிபந்தனைகள் சிக்கலானவையாக அமையும்.

ஆகவே, பொதுஜன பெரமுனவுக்குள் பசில் தலையெடுப்பதைத் தடுக்க, மஹிந்தவைப் பலப்படுத்த அவரை பிரமராக்கலாம்.

எது எவ்வாறாயினும், மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டால், அது கட்சி சாராப் பொதுமக்களிடையே, அதிலும் குறிப்பாக தாராளவாத சிங்களவர்களிடையேயும் சிறுபான்மையின மக்களிடையேயும் ரணில் மீதான நம்பிக்கையைக் குறைப்பதாகவே அமையும். அந்த முடிவை எடுக்க முதல், ஜனாதிபதி ரணில் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களில் அவர் சம்பாதித்த நற்பெயரை அவர் இழக்க வேண்டியிருக்கும். இதுதான் ராஜபக்‌ஷவை பிரதமராக்குவதற்கு ரணில் கொடுக்கும் விலையாக அமையும்.

அதனால்தான், மஹிந்தவை விட, ஜனாதிபதி ரணிலை விட, ராஜபக்‌ஷர்களை விட, மஹிந்த பிரதமராக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஜே.வி.பியினரும் உள்ளுக்குள் வேண்டிக்கொண்டிருப்பார்கள்.

மஹிந்தவின் நியமனத்தைக் காரணம் காட்டி மீண்டும் ‘அறகலய’ எழலாம்; பொருளாதார மீட்சி ஸ்தம்பிக்கலாம். இது பற்றி ஜனாதிபதி ரணில் கவனம் கொள்வது அவசியம்.

-என்.கே அஷோக்பரன்-

Share.
Leave A Reply

Exit mobile version