முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 7 பேரும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
முதலில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து சிறையிலிருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதில் நளினி, ரவிச்சந்திரனை தவிர முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
சிறையிலிந்து விடுதலையான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நால்வர் காவல்துறையினர் பாதுகாப்புடன் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
6 மாதங்களுக்கு மேலாகியும் இவர்கள் 4 பேரும் திருச்சியில் சிறப்பு முகாமில் ஏன் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்புகின்றனர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.
சிறப்பு முகாமில் வாழ்க்கை
திருச்சியில் இருக்கும் இந்தச் சிறப்பு மூகாம் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு முகாம் அல்ல. குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்டு, பிணையில் இருக்கும் வெளிநாட்டினரை தங்க வைக்க இந்தச் சிறப்பு மூகாம் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற நாட்டினரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சொந்த நாட்டுக்கு செல்லவேண்டுமா அல்லது இந்தியாவிலே தங்கியிருக்க விருப்பமா என்பதைக் கேட்டு அவர்களைத் திருப்பியனுப்ப அரசு முடிவெடுக்கும் என விடுதலைக்குப் பிறகு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டபோது திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நால்வரும் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
“கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலிருந்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையிலிருந்தும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் அங்கிருந்து திருச்சியிலுள்ள வெளிநாட்டினர் தங்க வைக்கப்படும் சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் சிறப்பு முகாமிலேயே தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.”
விடுதலை ஏன் தாமதம்
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இந்த நால்வரும் ராஜிவ் காந்தி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் என்பதால் அவர்களை மீண்டும் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்புவது தொடர்பாக சில நடைமுறைகள் உள்ளன.
குறிப்பாக இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சொந்த நாட்டுக்கு செல்ல விருப்பமிருந்தால் இலங்கை அரசுடன் பேசி அனுமதி பெறவேண்டும். இந்தியாவிலேயே தங்க விரும்பினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்குரிய நடைமுறை செய்யவேண்டும்.
இதுமட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்தவர்களைத் திருப்பியனுப்பும் விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் முருகன் உள்ளிட்ட 4 பேரும் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிறப்பு மூகாமில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
முருகனின் மனைவியான நளினி, சிறப்பு முகாமிலிருந்து தனது கணவர் விடுதலை செய்யப்பட்ட பிறகு அவரை அழைத்துக்கொண்டு லண்டனில் வசிக்கும் மகளைக் காணத் திட்டமிட்டுள்ள நிலையில் 6 மாதங்களுக்கு மேலாகியும் தனது கணவரை விடுதலை செய்யாமல் வைத்திருப்பது குறித்து கவலை தெரிவித்தார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய நளினி, “30 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்தாலும் என் கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. சிறப்பு முகாமில் உள்ள என் கணவரை அடிக்கடி சந்தித்துப் பேசி வருகிறேன்.
நான் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் நாம் எப்போது மகளுடன் இணைந்து ஒரே குடும்பமாக வாழப் போகிறோம் என்ற கேள்வியை மட்டுமே என்னிடம் கேட்கிறார். அவரை விரைவாக விடுதலை செய்ய அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்று கூறினார்.
கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆர்வலர்கள்
பல ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்களை சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பளரான திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
“31 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்த நபர்களை சாதாரண நபர்களைப் போலக் கருதி, அரசு நடைமுறைகளை தாமதம் செய்யக்கூடாது.
நீண்ட நாட்களாக தாமதம் ஏற்படுவதைப் பார்க்கும்போது பின்னணியில் அரசியல் அழுத்தம் ஏதுமுள்ளதா என்ற கேள்வி எனக்கு எழுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
ஏழு தமிழர் விடுதலை கூட்டியக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான முத்துகுமார் பிபிசி தமிழிடம் பேசும்போது, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரை சிறப்பு முகாமில் நீண்ட நாள் வைத்திருப்பது அவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுதலையின் பயனை கேள்விக்குள்ளாக்குவதாகத் தெரிவித்தார்.
“இந்தியாவிலேயே மிக நீண்ட நாட்களாக சிறையிலிருந்த கைதிகளில் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த 7 பேரும் அடங்குவர்.
பெரிய அரசியல், சட்ட போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் விடுதலைக்குப் பிறகு குடும்பத்துடன் கழிக்கவேண்டிய நாட்களை என்னவென்று தெரியாத ஏதோவொரு காரணத்திற்காக மீண்டும் சிறப்பு முகாமில் கழிக்கும் வகையில் காவல்துறை கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டிருப்பது இந்த நால்வருக்கும் வழங்கப்பட்ட விடுதலைக்கு முரணானது,” என்று அவர் தெரிவித்தார்.
பிபிசி தமி