தஞ்சை: தனியார் பாரில் சட்ட விரோதமாக மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை கலெக்டர், எஸ்பி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழஅலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைக்கு எதிரே தனியார் நிறுவனத்தின் பாரும் செயல்பட்டு வருகிறது. இங்கே இன்று காலை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே மது விற்பனை நடந்துள்ளது.
டாஸ்மாக் கடையில் 12 மணிக்குத் தான் மது விற்பனை தொடங்கும் நிலையில், அதற்கு முன்னரே இந்த தனியார் பாரில் சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்துள்ளனர்.
அதைத் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (60) மற்றும் விவேக் (35) ஆகியோர் வாங்கிக் குடித்துள்ளனர்.
இந்த மதுவைக் குடித்த சில நொடிகளில் குப்புசாமி வாயில் நுரை தள்ளியுள்ளது. மேலும், அவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், குப்புசாமி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அதேபோல விவேக்கும் மயங்கிய நிலையில், அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுதமிக்கப்பட்டார்.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் கொஞ்ச நேரத்தில் உயிரிழந்தார். டாஸ்மாக் கடைக்கு எதிரே பாரில் மது குடித்துக் கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் பார் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
சட்டவிரோதமாக மதுவை விற்ற தனியார் பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாகத் தகவல் வெளியானது.
இது குறித்து தஞ்சை கலெக்டர், எஸ்பி கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இருவர் உயிரிழப்புக்குக் காரணமான மதுவில் சயனைடு இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்த தஞ்சை ஆட்சியர், தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் சயனைடு உள்ளது உறுதியாகியுள்ளது என்றும் தற்கொலை அல்லது கொலையாக இருக்க வாய்ப்பு எனக் கருதுகிறோம் என்றும் தெரிவித்தார்.
இருவரில் ஒருவருக்கு குடும்பப் பிரச்சினை இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அவர்கள் குடித்த மதுவில் எரிசாராயம் இல்லை. மேலும், உயிரிழந்த விவேக்கிற்கு குடும்பப் பிரச்சினை இருப்பதால் அவர் தனியாக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருவரும் ஒரே ஆபீசில் வேலை செய்து வருகிறார்கள். சயனைடு இருப்பதால் தற்கொலையாகவும் இருக்கலாம். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். பொதுவாகத் தங்க வேலையில் இருப்போர் சயனைடு பயன்படுத்துவார்கள்.
எனவே, அந்த கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். சிசிடிவி மற்றும் மொபைல் வீடியோக்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.