ilakkiyainfo

ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா? எதிர்க்கட்சி தலைவர் ஆசனமா?

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அரசாங்கம் பல நகர்வுகளை முன்னெடுத்துள்ளது.

இதனை உணர்ந்துக்கொண்ட எதிர்க்கட்சிகளும் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகின்றமையை காண முடிகிறது.

குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஏனைய பிரதான அரசியல் கட்சிகளும், வேட்பாளர் தெரிவு மற்றும்  கூட்டணிகள் குறித்து கலந்துரையாடல்களில் ஈடுப்படுவதை காணக்கூடியதாக உள்ளன.

குறிப்பாக  ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரனமுன, தனித்து  ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தாது,  தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளர் என்ற வகையில் ஆதரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் ஐ.தே.க மற்றும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு பொதுஜன பெரமுனவினர் கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவி குறித்து கோரிக்கை விடுத்ததாக வார இறுதி சிங்கள பத்திரிகைகள் பல செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஆனால் கட்சியின் பொது செயலாளர் என்ற வகையில் பிரதமர் பதவியை பொதுஜன பெரமுன கோர வில்லை என சாகர காரியவசம் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் பிரதமர் பதவியை வைத்தே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு குறித்து பேசப்படுவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெற்றுக்கொடுப்பதற்கான அரசியல் போராட்டத்தை பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்துள்ளனர்.

ஆனால் பொதுஜன பெரமுனவிற்குள் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவிற்கு மீண்டும் வழங்குவது தொடர்பில் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

அதாவது, மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவியை வழங்காது, அதனை சஜித் பிரேமதாசவிற்கு வழங்கவும், அதன் பின்னர் எதிர்க்கட்சி ஆசனங்களில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அமர்வதுடன், எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ அல்லது  நாமல் ராஜபக்ஷவிற்கு பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளையே முன்னெடுத்திருந்தனர். இந்த திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் பொதுஜன பெரமுனவின் சிலர் கலந்துரையாடியுள்ளனர்.

ஆனால்  எதிர்க்கட்சி தலைவர் பதவியை இத் தருணத்தில் பெறுவது குறித்து ராஜபக்ஷர்கள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்க வில்லை என கூறப்படுகிறது.

இதன் பின்னரே மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவிளை வழங்கவும், அமைச்சுக்களை பொறுப்பேற்கும் தீர்மானம் வலுப்பெற்றது.

ஆனால்  தற்போதைய சூழலில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்குவதை பஷpல் ராஜபக்ஷ விரும்ப வில்லை.

மாறாக அடுத்த தேர்தல் ஊடாக மீண்டும் அதிகாரத்திற்கு பொதுஜன பெரமுனவை கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணிலின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான நகர்வுகளையே பஷpல் ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார்.

டுபாய் செல்வதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பிரதமர் பதவி விவகாரம் மற்றும் ஆளுநர்கள் மாற்றம் குறித்தும் பஷpல் ராஜபக்ஷ கலந்துரையாடியிருந்ததாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் பிரதமர் பதவி மாற்றம் குறித்து தற்போதைய பிரதமர் தினேஷ; குணவர்தனவும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி அலுவலக பிரதாணி ஆகியோருடன் டுபாயில் உள்ள பஷpல் ராஜபக்ஷ தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு, பிரதமர் பதவி பொதுஜன பெரமுவிற்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுனவை பொறுத்த வரையில்,  அதன் முழு அதிகார மையமாக இருப்பது பஷpல் ராஜபக்ஷவாகும்.

அவரது தீர்மானங்களை அறிவிக்கும் நபராக சாகர காரியவசம் உள்ளார். பிரதமர் பதவியை பொதுஜன பெரமுன கோர வில்லை என்று சாகர காரியவசம் கூறியது, பஷpல் ராஜபக்ஷவின் நிலைப்பாட்டையாகும்.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கை பொதுஜன பெரமுவின் தீர்மானத்திற்கு  அப்பால்பட்ட விடயமாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மையப்படுத்தி பொதுஜன பெரமுனவிற்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இதன் தாக்கம் ராஜபக்ஷ குடும்பத்திற்குள்ளும் எதிரரொலித்துள்ளது. நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்கால நலன் சார்ந்த விடயங்களில் மஹந்த ராஜபக்ஷ எப்போதும் முன்னுரிமையளித்து செயல்படுவது உண்டு.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்று, அதனூடாக பெரும் அரசியல் பாய்ச்சலுக்கான தருணத்தை நாமல் ராஜபக்ஷ விரும்புகிறார்.

ஆனால் ஜனாதியாக ரணிலை வைத்துக்கொண்டு அந்த முயற்சி சாத்தியப்படுமா? என்பது மஹிந்த ராஜபக்ஷவின் சந்தேகமாக இருந்திருக்க கூடும். எனவே தான் பிரதமர் பதவியை பெறுவதில் காட்டிய ஆர்வத்தை நாமல் ராஜபக்ஷவின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான விருப்பத்தில் காண்பிக்காது இருந்துள்ளார்.

எவ்வாறாயினும் அடுத்த வருடம் முதல் காலாண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடுகளும் இல்லை.

ஜனாதிபதி ரணிலை தேசிய வேட்பாளராக ஏனைய கட்சிகள் ஏற்க வேண்டும் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் கோரிக்கையாக உள்ள நிலையில், பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகியவை எவ்வாறான திட்டங்களை வகுத்து வருகின்ற என்பது இனிவரும் நாட்களில் அறியக்கூடிய வகையில் இருக்கும்.

அதே போன்று  உத்தேச ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவும் தாக்கம் செலுத்தும் என்பதால் அரசியல் கூட்டணிகளுக்குள்  சிறுபான்மை கட்சிகளை உள்வாங்க  பிரதான கட்சிகள் ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.

(லியோ நிரோஷ தர்ஷன்)

Exit mobile version