ரஷ்யாவின் பல்கொரோட் பிராந்தியத்தில் மோதல் வெடித்தை அடுத்து அங்குள்ள குடியிருப்பாளர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு அவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் இருந்து நாசகார ஆயுதக் குழு ஒன்றே எல்லை மாவட்டமான கிராவ்யோர்ஸ்கியில் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மோதல்கள் நீடித்து வரும் நிலையில் ரஷ்யா பயங்கரவாத புலன் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதற்கு பொறுப்பேற்க உக்ரைன் மறுத்துள்ளதோடு இரு துணைப் படையைச் சேர்ந்த ரஷ்ய பிரஜைகளே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த மோதலில் உயிரிழப்புகள் பதிவாகாதபோதும் பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த திங்கட்கிழமை இரவு ஆளில்லா விமானம் ஒன்று வான் பாதுகாப்பு அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பிராந்திய ஆளுநர் வியாசெஸ்லெவ் கிளாக்டோவ் குறிப்பிட்டுள்ளார்.
பல கிராமங்களின் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தப்பிச் சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். ரஷ்ய படையினர் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுத்து கடந்த 15 மாதங்களில் எல்லை கடந்து ரஷ்யாவில் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இது அமைந்துள்ளது.
இது ரஷ்யப் படையினர் பல்கொரோட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள துண்டி இருப்பதோடு தொடர்பாடல்களை துண்டிக்கவும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.