யாழ்ப்பாணம் – தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்ப்புக்களுக்கு மத்தியில் விகாரை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டத்தை முறியடிக்க காவல்துறை பெரும் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

தையிட்டிப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் ஒன்று கூடி விகாரை அமைக்கப்பட்டமைக்கும், காவல்துறையின் அராஜகத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

இந்தப் போராட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ் மற்றும் நான்கு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் கைது பலாலி காவல்துறையினரால் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் தொடர்ந்து நேற்று இரவு முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே இன்று அதிகாலை வெளி மாவட்டத்திலிருந்து மக்கள் அழைத்து வரப்பட்டு விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகளவான மக்கள் ஒன்று கூடி சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா?, இனப்படுகொலை இராணுவமே வெளியேறு போன்ற எதிர்ப்பு கோசங்களுடன் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version