ilakkiyainfo

தமிழக செங்கோல்: ஆட்சி மாற்ற அடையாளமாக நேருவிடம் மவுன்ட்பேட்டன் அளித்ததாக சொல்வது உண்மையா?

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிகாரம் கைமாறுவதன் அடையாளமாக, மவுன்ட்பேட்டனிடம் இருந்து அதைப் பெற்று அளித்ததாகச் சொல்லப்படும் தகவல் உண்மையா?

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம் 2023ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், செங்கோல் ஒன்று பிரதானமான இடத்தில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த செங்கோலின் பின்னணி குறித்து, செய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில் ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, “இந்தியா சுதந்திரமடையும் நாள் நெருங்கியபோது, மவுன்ட்பேட்டன் பிரபு பண்டித ஜவஹர்லால் நேருவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு ஆட்சியைக் கை மாற்றியளிப்பதைக் குறிக்க எந்த நிகழ்வை மேற்கொள்ளலாம்

இதையடுத்து நேரு, ராஜாஜியின் உதவியை நாடினார். ராஜாஜி, சோழ மன்னர்கள் தங்கள் ஆட்சியை உயர் குருமார்களின் ஆசியுடன் ஒரு மன்னனிடமிருந்து மற்றோர் மன்னனுக்கு மாற்றிய வழிமுறையை அடையாளம் கண்டார்.

ஒரு மன்னனிடமிருந்து மற்றோர் மன்னனுக்கு ஆட்சி ஒப்படைக்கப்பட்டதற்கு செங்கோல் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.

ராஜாஜி தஞ்சாவூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தை அணுகினார். ஆதீனகர்த்தர் உடனடியாக ஐந்தடி நீளத்தில் செங்கோல் தயாரிக்க உத்தரவிட்டார். சென்னையின் உம்மிடி பங்காரு செட்டி ஜுவல்லர்ஸ் செங்கோலை வடிவமைத்தார்கள்.

ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று மூன்று பேர் செங்கோலை எடுத்துக்கொண்டு பிரத்யேகமான விமானத்தில் வந்தார்கள். ஆதீனத்தின் துணைத் தலைவர், நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை, ஓதுவார் ஆகியோர்தான் அந்த மூவர்.

மடாதிபதி மவுன்ட்பேட்டன் பிரபுவிடம் கொடுத்து பின்பு அவரே வாங்கிக்கொண்டார். பிறகு நேருவிடம் கொடுப்பதற்காக அந்தச் செங்கோல் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உயர் குருமார்களால் குறிப்பிடப்பட்ட தேவாரப் பாடல் பாடப்பட்டது. நேரு இதைப் பெற்றுக் கொண்டார்,” என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜவாஹர் லால் நேருவுக்கு செங்கோல் அளித்த ஆதீனம்

ஆதீனத்தால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலின் தமிழ் எழுத்துகளில் செங்கோல் பற்றிய விவரம் இடம்பெற்றுள்ளது.
படக்குறிப்பு,

ஆதீனத்தால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலில், தமிழ் எழுத்துகளில் செங்கோல் பற்றிய விவரம் இடம்பெற்றுள்ளது

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை மடம் ஒரு செங்கோலை நேருவுக்கு வழங்கியது. இதுதொடர்பான பத்திரிகைச் செய்தி ஆதாரங்களும் புகைப்பட ஆதாரங்களும் உள்ளன.

இந்தப் புகைப்படத்தில் நெற்றியில் திருநீற்றுடன் செங்கோலைப் பிடித்தபடி நேரு நிற்கிறார்(முதல் படம்).

ஆனால், இந்திய நிர்வாகத்தின் அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு கைமாறுவதன் அடையாளமாக செங்கோல் மவுன்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டு, அது நேருவிடம் கொடுக்கப்பட்டதா என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை. இது போன்றதோர் ஆலோசனையை ராஜாஜி வழங்கினார் என்பதற்கும் தெளிவான ஆதாரங்கள் கிடையாது.

இந்த செங்கோல் நேருவுக்கு வழக்கப்பட்டது குறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் Time பத்திரிகையின் 1947 ஆகஸ்ட் 25ஆம் தேதியிட்ட இதழ் பின்வருமாறு விவரிக்கிறது:

“கடவுள் நம்பிக்கை குறித்து உறுதியான நிலைப்பாடில்லாத ஜவாஹர்லால் நேரு, இந்தியாவின் பிரதமராவதற்கு முந்தைய நாள் மாலையில், ஆன்மிக உணர்வில் வீழ்ந்தார்.

தென்னிந்தியாவின் தஞ்சாவூரிலிருந்த ஒரு மடத்தின் தலைவரான ஸ்ரீ அம்பலவான தேசிகரின் இரண்டு தூதர்கள் வந்திருந்தார்கள்.

இந்தியர்களின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவாஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனிதத் துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென அம்பலவான தேசிகர் கருதினார்.

அந்தத் தூதர்களுடன் நாதஸ்வர வித்வான் ஒருவரும் வந்திருந்தார். ஒரு பழைய ஃபோர்டு காரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை நேருவின் வீட்டை நோக்கி அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு நூறடிக்கும் இடையில் நின்று சுமார் 15 நிமிடங்கள் நாதஸ்வரத்தை வாசித்தார். மற்றொருவர் ஒரு பெரிய வெள்ளித்தட்டைத் தாங்கி வந்தார். அந்த வெள்ளித்தட்டில் ஜரிகையுடன்கூடிய பீதாம்பரம் இருந்தது.

நேருவின் வீட்டை இறுதியில் அடைந்தவுடன் நாதஸ்வர வித்வான் தனது நாதஸ்வரத்தை வாசிக்க ஆரம்பித்தார். மற்றவர்கள் நேருவின் அழைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

பிறகு அவர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு மானின் ரோமத்தால் செய்யப்பட்ட விசிறியைக் கொண்டு இருவர் விசிறினார்கள்.

ஒரு சன்னியாசியிடம் ஐந்தடி உயரமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 2 அங்குலம் கனமான செங்கோல் இருந்தது. தஞ்சாவூரிலிருந்து எடுத்து வந்த புனித நீரை நேருவின் தலையில் ஒருவர் தெளித்தார்.

நேருவின் நேற்றியில் விபூதி பூசப்பட்டது. நேருவுக்கு பீதாம்பரத்தைப் போர்த்தி, செங்கோலை அவர்கள் வழங்கினார்கள்.

அன்று காலையில் நடராஜருக்குப் படைக்கப்பட்டு, விமானத்தில் கொண்டுவரப்பட்ட பிரசாதமும் அவருக்கு வழங்கப்பட்டது,” என விவரிக்கிறது Time இதழ்.
இந்தியா சுதந்திரமடைந்த தருணம் குறித்து Time இதழில் வெளியான கட்டுரை.
படக்குறிப்பு,

இந்தியா சுதந்திரமடைந்த தருணம் குறித்து Time இதழில் வெளியான கட்டுரை

Time இதழின் விவரிப்பின்படி, அதிகாரம் கை மாறியதன் அடையாளமாக துறவிகளிடமிருந்து செங்கோலை நேரு பெற்றுக்கொள்ள வேண்டுமென ஸ்ரீ அம்பலவான தேசிகர்தான் கருதியிருக்கிறார்.

அதேபோல, நேரடியாக அம்பலவான தேசிகரிடமிருந்து செங்கோல் நேருவிடம்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தை மிக நுணுக்கமாக விவரிக்கும் நூல் டொமினிக் லாப்பியரும் லாரி காலின்சும் சேர்ந்து எழுதிய The Freedom at Midnight.

இந்தப் புத்தகத்திலும் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்ட தகவல் இடம்பெற்றுள்ளது. “14 ஆகஸ்ட் 1947” என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், Time இதழில் கூறப்பட்டது போன்றே இந்தச் சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிலும் ராஜாஜியின் ஆலோசனை குறித்தோ, மவுன்ட்பேட்டனிடம் செங்கோலை அளித்து, திரும்பவும் நேருவிடம் கொடுத்ததாகவோ தகவல் இல்லை.

ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான The Hindu நாளிதழ், ஆகஸ்ட் 14ஆம் தேதி என்னவெல்லாம் நடந்தது என்பதை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 14ஆம் தேதி, வியாழக்கிழமை நள்ளிரவு இந்திய அரசமைப்பு அவையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டம் கூடியது.

அதில் அரசமைப்பு அவையின் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் உரையாற்றினார். இதற்குப் பிறகு, அவையின் உறுப்பினர்கள் தங்களது சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்து உரையாற்றினார்.

அந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு இந்திய பெண்களின் சார்பாக திருமதி ஹன்சா மேத்தா, தேசியக் கொடியைக் கையளித்தார்.

இதையடுத்து அவை, வெள்ளிக்கிழமை காலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் மவுன்ட்பேட்டனிடமிருந்து நேரு செங்கோல் பெற்ற நிகழ்வு ஏதும் இடம்பெறவில்லை.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய சில தினங்களில், இந்தியாவின் முக்கியத் தலைவர்களின் மனதில் பிரிவினையால் ஏற்படும் கலவரம் குறித்த கவலைகளே பெரும்பாலும் இருந்தன.

தேசப் பிரிவினையை எப்படி எதிர்கொள்வது, அதனால் புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு என்ன வசதிகளைச் செய்வது,

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலைகளே மவுன்ட்பேட்டன், நேரு, வல்லபாய் படேல், ராஜாஜி ஆகியோருக்கு இருந்தது.

சுதந்திர தினத்தன்று வெளியான தி இந்து நாளிதழின் புகைப்பட மறு அச்சுப் பிரதி.

ராஜாஜியின் சரிதையை ராஜ்மோகன் காந்தி எழுதியிருக்கிறார். அதில் சுதந்திரத்திற்கு முந்தைய சில தினங்களைப் பற்றிப் பின்வருமாறு சொல்லப்படுகிறது:

சுந்திரத்திற்குச் சில நாட்கள் முன்பாக வங்கம் பெரும் கொந்தளிப்பாக இருந்தது. அப்போதைய ஆளுநரான பரோஸ் இங்கிலாந்து திரும்ப முடிவுசெய்து விட்டார்.

புதிய ஆளுநராக யாரை நியமிப்பது என்ற விவாதம் தீவிரமாக இருந்தது. ராஜாஜி கோபாலசாமி ஐய்யங்கார் பெயரைச் சொன்னார்.

ஆனால், அவர் சொந்தப் பிரச்னைகள் காரணமாக அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து வல்லபபாய் படேல், ராஜாஜிதான் வங்கத்தின் புதிய ஆளுநராக இருக்க வேண்டும் என்றார். இதற்கு நேருவும் மகாத்மாவும் ஒப்புக்கொண்டனர்.

ஆனால், அதிகாரமற்ற பதவி என்பதால் இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியுமென யோசித்தார் ராஜாஜி. இதற்கிடையில் மறுபடியும் வங்கத்தில் வெடித்த கலவரத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

நேருவை அணுகிய ராஜாஜி, நிர்வாக அதிகாரமின்றி கலவரங்களை தன்னால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என மீண்டும் கேட்டார். “என்ன இப்படிப் பேசுகிறீர்கள்? இந்த நாட்டில் எந்தக் காரியமானாலும் ஏற்று வெற்றிபெறக் கூடியவர் நீங்கள்” என்று பதிலளித்தார்.

இதையடுத்து வங்கத்தின் ஆளுநராகப் பதவியேற்க ஆகஸ்ட் 14ஆம் தேதியே புறப்பட்டுச் சென்றுவிட்டார் ராஜாஜி.

சுதந்திர தினத்தன்று அவர் கல்கத்தாவில் இருந்த ஆளுநர் மாளிகையில்தான் இருந்தார். இதில் எங்கேயுமே, அதிகாரத்தை எப்படி கைமாற்றுவது என்பது குறித்த விவாதங்கள் நடந்ததாகக் குறிப்பிடவில்லை.

வி.பி. மேனனின் The Transfer Of Power In India நூல். அந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை, தேசப் பிரிவினையின் சிக்கலான தருணங்களையும் இடைக்கால அரசையும் பற்றி மட்டுமே பேசுகிறது. அதில் எந்த இடத்திலும் அதிகாரத்தைக் கைமாற்ற செங்கோல் தருவது குறித்த குறிப்புகள் இல்லை.

ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள் விமானத்தில் சென்று, செங்கோலை நேருவிடம் அளித்ததாகத் தெரிய வருகிறது. கோவில் பிரசாதத்தையும் அவர்கள் நேருவுக்கு அளித்துள்ளனர். ஆகவே, அவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதிதான் விமானத்தில் தில்லி வந்திருக்க வேண்டும்.

அன்றைய தினம், இந்தியாவின் வைசிராயின் நிகழ்ச்சி நிரலின்படி அவர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்தார். அன்று பாகிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதால், அவர் அந்த விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தார்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கப்படவுள்ள ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் வைசிராயின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது ஜூலை 10ஆம் தேதியே முடிவு செய்யப்பட்டது.

சதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள இது தொடர்பான மவுன்ட்பேட்டன் பிரபு ஆவணங்களின்படி, காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு, 11.30 மணிக்கு கராச்சியை வந்தடைந்தார் வைசிராய்.

சுதந்திர தின நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மூன்றரை மணிக்கு கராச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை ஏழு மணிக்குத்தான் தில்லி வந்தடைந்தார் மவுன்ட்பேட்டன்.

அதிகாரம் கைமாறும் நிகழ்வுகளைப் பொறுத்தவரை, யூனியன் ஜாக் கொடியை இறக்குவது, இந்தியாவின் புதிய தேசியக் கொடியை ஏற்றுவது குறித்தே பல ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

அதன்படியே, இந்தியா சுதந்திரம் பெற்று, டொமினியன் அந்தஸ்து பெற்ற நாடாக மாறியதைக் குறிக்கும் விதமாக யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

புகைப்பட ஆதாரங்களைப் பார்த்தாலும், ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள் நேருவிடம் செங்கோல் அளிக்கும் புகைப்படங்கள் உள்ளனவே தவிர, மவுன்ட்பேட்டனிடம் செங்கோலை அளித்து, திரும்பப் பெறுவது போன்ற புகைப்படங்கள் இல்லை.

அதற்குப் பிறகு இந்தச் செங்கோல் என்ன ஆனது?

செங்கோலைச் செய்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் அமரேந்திரன் உம்மிடி

செங்கோலைச் செய்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் அமரேந்திரன் உம்மிடி

பொதுவாக பிரதமர்களுக்கு அளிக்கப்படும் செங்கோல், அரசிடம் அளிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்தச் செங்கோல் என்ன ஆனது என்பது குறித்து நீண்ட நாட்களாகத் தெரியாமல் இருந்தது. 2018இல் திருவாவடுதுறை ஆதீனத்தில், நேருவிடம் செங்கோல் வழங்கும் புகைப்படத்தைப் பார்த்த சிலர்,

அதை வெளிப்படுத்த வார இதழ் ஒன்றில் அதுதொடர்பான கட்டுரை ஒன்று வெளியானது. அந்தக் கட்டுரையில், இந்தச் செங்கோல் சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் கடையில் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸை சேர்ந்தவர்கள், இந்த செங்கோல் எங்கே உள்ளது எனத் தேட ஆரம்பித்தனர்.

இது தொடர்பாக இந்தியாவில் உள்ள பல அருங்காட்சியகங்களுக்கும் கடிதங்களை அனுப்பினர். பல மாதங்கள் கழித்து, அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகம் அதுபோன்ற செங்கோல் ஒன்று தங்களிடம் இருப்பதாகக் கடிதம் ஒன்றை அனுப்பினர். பிறகு, மூன்று மாதம் கழித்து அதன் புகைப்படத்தையும் அனுப்பினர்.

இதைப் பார்த்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்சை சேர்ந்தவர்கள், அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்றனர். அங்கே இந்தச் செங்கோல் நேருவின் கைத்தடி என்று குறிப்பிடப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அந்தச் செங்கோலின் பின்னணியை அருங்காட்சிகத்திற்கு விளக்கிய நகைக்கடை நிறுவனத்தார், சென்னை திரும்பிய பிறகு அது தொடர்பான வீடியோ ஒன்றை உருவாக்கி வாட்ஸ்அப்பில் பகிர்ந்தனர்.

“இந்த வீடியோ வைரலானது. அதை முக்கியமான சிலர் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் பிரதமரின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றுள்ளனர்.

பிரதமர் அலுவலகம் இதன் உண்மைத் தன்மையை விசாரித்துவிட்டு, தற்போது இதை நாடாளுமன்றத்தில் வைக்க முடிவு செய்துள்ளது,” என்கிறார் உம்மிடி பங்காரு ஜுவல்லர்சின் மேனேஜிங் பார்ட்னரான அமரேந்திரன் உம்மிடி.

இந்தச் செங்கோலை உருவாக்க எவ்வளவு செலவானது, எவ்வளது தங்கம் தேவைப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸிடம் தற்போது இல்லை. தற்போது, அதேபாணியில் ஒரு செங்கோலை செய்திருக்கிறது உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்.

உம்மிடி பங்காருவைச் சேர்ந்த அமரேந்திரன் உம்மிடி சொல்லும் கட்டுரை, ஒரு வார இதழின் இணையத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது.

அந்தக் கட்டுரையில், இந்தியாவின் கடைசி ஆளுநராக இருந்த மவுன்ட்பேட்டன், நேருவை அழைத்து, “இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது?” என்று கேட்க, குழப்பம் அடைந்த நேரு, உடனடியாகப் பதில் கூறவில்லை.

அடுத்து மூதறிஞர் ராஜாஜியை அணுகி, “இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாராம். உடனே ராஜாஜி, ‘‘கவலை வேண்டாம். தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சிமாற்றம் செய்யும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பார்.

அதுபோல நாமும் மகான் ஒருவர் மூலம் செங்கோல் பெற்று ஆட்சிமாற்றம் அடையலாம்” என்று கூறியிருக்கிறார்.

அப்போது இந்தியாவின் சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20-வது குருமகா சந்நிதானமாக இருந்தவர் அம்பலவாண தேசிகர் (1937 – 1951). அவரைத் தொடர்புகொண்ட ராஜாஜி, ஆட்சி மாற்றத்துக்கான சடங்குகளைச் செய்துதரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அம்பலவாண தேசிகரிடம் மாசிலாமணி பிள்ளை என்பவரின் கருத்தும் அந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. “ஆதீனம் அந்த நேரத்தில் கடும் காய்ச்சலில் இருந்தார்.

ஆனாலும், சென்னையில் பிரபலமாக இருந்த உம்மிடி பங்காரு செட்டியார் நகைக் கடையில் சைவச் சின்னம் பொறித்த தங்கத்திலான செங்கோல் ஒன்றைத் தயாரித்துத் தரும்படிக் கேட்டுக்கொண்டார்.

அதன் எடையும் விலையும் தற்போது எனக்கு நினைவில் இல்லை. ராஜாஜி ஏற்பாடு செய்த தனி விமானத்தில், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டளை சாமியாக இருந்த சடைச்சாமி என்றழைக்கப்படும் திருவதிகை குமாரசாமி தம்பிரானையும், மடத்தின் ஓதுவார்களையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் கூடவே மங்கள இசை முழங்க மடத்து வித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை குழுவினரும் சென்றிருந்தனர்.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.45 மணிக்கு, தேவாரத்தில் கோளறு பதிகத்திலுள்ள 11 பாடல்களைப் பாடுமாறு குருமகா சந்நிதானம் அருளியிருந்தார். அதன்படி ‘வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தின் 11-வது பாடலில் கடைசி அடியான ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்று பாடி முடிக்கும்போதே மவுண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலை சடைச்சாமி பெற்று, அதன்மீது புனிதநீர் தெளித்து,

இறைநாமம் உச்சரித்து, நேருவிடம் கொடுத்தார். இது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த விஷயமாகும். நேரு கையில், செங்கோலை சடைச்சாமி தரும் அரிய புகைப்படம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் உள்ளதை இன்றும் காணலாம்” என்று அவர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம்.

அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

இதற்கிடையில், இந்த விவகாரம் இந்திய அரசின் கலாச்சாரத் துறையை எப்படி சென்றடைந்தது என்பது குறித்து, தி இந்து நாளிதழின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது.

2021ஆம் ஆண்டு மே மாதம் வெளியான துக்ளக் இதழின் இதேபோன்ற கட்டுரை வெளியானதைப் பார்த்த, நடனக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம், இந்திய அரசின் கலாசார அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தக் கடிதத்தில் துக்ளக் இதழின் கட்டுரையை மேற்கோள்காட்டி, அந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது இந்த விஷயத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தும்படி கூறியிருந்தார்.

இதற்குப் பிறகு கலாசார அமைச்சகத்தின் வேண்டுகோளின்படி, இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் ஆர்ட்ஸ் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தியது. அதன்படி 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு முன்பாக இந்த நிகழ்வு நடந்ததாக முடிவுசெய்யப்பட்டது.

அதற்குப் பிறகு இந்தச் செங்கோல், அலகாபாதில் (பிரயாக்ராஜ்) நேருவின் வீடாக இருந்து தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தி இந்து நாளிதழின் கட்டுரை கூறுகிறது.

மேலும், “தேசம் பிரிவினையாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்டிருந்ததால், இந்த நிகழ்வு வேகவேகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டபூர்வமான நிகழ்வாக இல்லை என்பதால் பதிவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக, இந்திய அரசின் நினைவிலிருந்தே இந்தச் செங்கோலும் இந்தச் சம்பவமும் மறைந்துவிட்டது” என இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் ஆர்ட்ஸின் உறுப்பினர் செயலர் சச்சிதானந்த் ஜோஷி கூறியதாகவும் தி ஹிந்து நாளிதழ் கட்டுரை கூறுகிறது.

Exit mobile version