உக்ரேனுக்கு அமெரிக்காவின் நான்காம் தலைமுறைப் போர்விமானமான F-16 வழங்கப்படுவதை அமெரிக்கா தடுக்க மாட்டாது என அதன் உச்ச அதிகார நிலையமான வெள்ளை மாளிகையில் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

உக்ரேனுக்கு வல்லூறு என்னும் குறியீட்டுப் பெயர் கொண்ட F-16 போர் விமானங்களை வழங்கும் நாடுகள் பெரும் இடர்களை எதிர் நோக்கும் என இரசியாவின் துணைப் பாதுகாப்பு சமைச்சர் அலெக்சாண்டர் குருக்ஷோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரேன் போர் முனையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்பட்ட அமெரிக்காவின் HIMARS செலுத்திகளில் இருந்து வீசப்படும் ஏவுகணைகளின் செயற்படு திறன் இரசியாவின் இலத்திரனியல் குழப்பிகளால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உக்ரேன் தனக்கு நான்காம் தலைமுறைப் போர் விமானம் தேவை என்பதை நேட்டோ நாடுகளிடம் கடந்த பல மாதங்களாக வலியுறுத்தி வந்தது.

உக்ரேன் போர் 2022 பெப்ரவரி தொடங்கிய போது அது 145 போர் விமானங்களை வைத்திருந்தது. இதுவரை போரில் 45 விமானங்களை இழந்துவிட்டது.

போலந்து, எஸ்தோனியா ஆகிய நாடுகள் தம்மிடமிருந்த MIG-29 போர் விமானங்களை உக்ரேனுக்கு வழங்கியிருந்தன.

அமெரிக்காவிடமிருந்து F-16 போர் விமானங்களை வாங்கிய நாடுகள் அவற்றை இன்னொரு நாட்டுக்கு விற்பனை செய்வதாயின் அதை அமெரிக்காவின் முன் அனுமதியுடனேயே செய்ய முடியும்.

விமானங்களின் தலைமுறைகள்

போர்விமானங்கள் அவற்றின் தொழில்நுட்பத் தரங்களுக்கு ஏற்ப தலைமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.

ஒலியிலும் குறைந்த வேகத்தில் பறப்பவை முதலாம்தலைமுறை என்றும், ஒலியின் வேகத்தில் பறப்பவை இரண்டாம் தலைமுறை என்றும், ஒலியின் வேகத்திலும் இரண்டு மடங்கு அல்லது அதற்கு அதிக வேகத்தில் பறப்பவை நான்காம் தலைமுறை என்றும் சிலர் வகுத்துள்ளனர்.

ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் ரடாருக்கு புலப்படாதவையாகும். அமெரிக்கா தனது ஆறாம்தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கிவிட்டது.

அமெரிக்காவின் F-22 Raptor, F-35 Lightening ஆகியவை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களாகும்.

F-35

சீனா  தனதுJ-20ஐயும் இரசியா தனது SU-35ஐயும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் என்கின்றன.

திரண்ட மேற்கு (Collective West) நாடுகளின் போரியல் ஆய்வாளர்கள் அவற்றின் புலப்படாத்தன்மை போதியன அல்ல என்பதால் அவற்றை நான்கரையாம் தலைமுறைப் போர்விமானம் என்கின்றனர். F-16 போர்விமானம் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவை. அவற்றின் புதிய வகைகள்

சாதனை படைத்த F-16

1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒன்றை இருக்கை ஒற்றைப் பொறி (இயந்திரம்) கொண்ட F-16 போர்விமானம் களம்பல கண்ட போர்விமானமாகும்.

இதுவரை 4500இற்கு மேற்பட்ட F-16 போர்விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு பட்ட மேம்படுத்தல்கள் செய்யப்பட்டன.

அவை பற்பணிப் போர்விமாங்களாகும். பற்பணிப் போர்விமானமான F-16 வான் பாதுகாப்பு, வானில் இருந்து வானிற்கு தாக்குதல், வானில் இருந்து தரை/கடல் தாக்குதல், இலத்திரனியல் போர்முறைமை, எதிரியின் வான்பாதுகாப்பை அழித்தல் ஆகியவற்றைச் செய்யக் கூடியன.

ஒலியிலும் பார்க்க இரு மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய F-16 20மிமீ பீராங்கி குண்டுகளை எதிரியின் விமானத்தின் மீது பாய்ச்சக் கூடியது. உலக வரலாற்றில் 13மில்லியன் பறப்புக்களைச் செய்த விமானம் என்ற சாதனையை F-16 தனதாக்கிக் கொண்டுள்ளது.

அத்துடன் உலகில் பல போர்களில் பரந்த அளவில் பாவிக்கப்பட்ட விமானமும் F-16தான். இதன் பற்பணிச் சிறப்பு அம்சங்களால் F-16ஐ வானில் பறக்கும் Swiss Army Knife என்பார்கள்.

அதிக F-16 வைத்திருக்கும் நாடுகள்.

உக்ரேனுக்கு F-16 போர் விமானங்களை இலவசமாக விநியோகிக்க கூடிய நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே. எகிப்த்திடம் இருநூற்றி இருபது F-16கள் உள்ளன, துருக்கியிடம் இருநூற்றி எழுபது F-16கள் உள்ளன, இஸ்ரேலிடம் 362 F-16கள் உள்ளன.

பாக்கிஸ்த்தானிடம் எண்பதிற்கும் அதிகமான F-16கள் உள்ளன. இவை எதுவும் உக்ரேனுக்கு F-16களை வழங்க மாட்டாது.

அமெரிக்காவிற்கு வெளியே எனப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் குறைந்த அளவு F-16 போர் விமானங்கள் உள்ளன. F-16 A/Bஇல் இருவகை F-16 C/Dஇல் இருவகை F-16 E/F என ஏழிற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன.

இவற்றில் உக்ரேனுக்கு போலந்திடமுள்ள F-16 C/Dவகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாகவுள்ளன. போலந்திடம் 48 F-16 உள்ளன.

போலந்தைப் போலவே எஸ்தோனியாவும் உக்ரேனுக்கு படைக்கலன்கள் வழங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றது.

எஸ்தோனியா தேவை ஏற்படின் அமெரிக்காவிடமிருந்து F-16களை வாங்கி உக்ரேனுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தன்னிடமுள்ள F-16 விமானங்களை அகற்றிவிட்டு F-35 விமானங்களை பாவிக்க திட்டமிட்டுள்ள பெல்ஜியம் தன்னிடமுள்ள F-16களை உக்ரேனுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெல்ஜியத்திடம் எட்டுF-16 B, நாற்பத்தி எட்டு F-16 A ஆகியவை இருக்கின்றன. டென்மார்கிடம் முப்பது F-16, நோர்வேயிடம் அறுபத்தி நான்கு F-16கள் உள்ளன. இவற்றில் எத்தனை உக்ரேன் போரில் பாவிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளன எத்தனை அனுப்பப்படும் என்பவை பற்றி உறுதியாகச் செல்ல இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம்.

அமெரிக்கா உக்ரேனுக்கு F-16 வழங்க மாட்டாது?

ஜேர்மன் அதிபர் Olaf Scholz உக்ரேனுக்கு F-16 வழங்கும் திட்டம் தம்மிடமில்லை என்றார். G-7 மாநாட்டின் போது அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் உக்ரேன் விமானிகளுக்கு F-16 செலுத்தும் பயிற்ச்சியை மட்டுமே குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் நட்பு நாடுகள் தம்மிடமுள்ள F-16களை உக்ரேனுக்கு வழங்கலாம் என்ற பைடன் அமெரிக்கா உக்ரேனுக்கு F-16களை வழங்குவது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. F-16 போர் விமானங்களால் உக்ரேன் போரில் பாரிய மாற்றம் ஏற்படாது என பைடன் கருதுகிறார்.

இரசியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு முறைமை F-16களை இலகுவில் அடையாளம் காணக் கூடியவை. எஸ்-400ஐ அழிக்கக் கூடிய தொலைதூர ஏவுகணைகள் அல்லது ஆழ ஊடுருவும் அணிகள் உக்ரேன் போரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

F-16 Block 70 மிகவும் மேம்படுத்தப்பட்டவையாகும். அவை நான்கரையாம் தலைமுறைப் போர்விமானங்களாகும். அவை இப்போது உக்ரேனுக்கு கிடைக்காது. உக்ரேனுக்கு F-16 போர் விமானங்கள் வழங்குதல் போரை மேலும் தீவிரமாக்கும் என சில நேட்டோ கூட்டமைப்பின் உறுப்புரிமை கொண்ட நாடுகள் கரிசனைச் கொண்டுள்ளன.

கிறிமியாவிற்கு ஆபத்து

F-16 போர்விமானங்கள் மிகத்தொலைவில் உள்ள இலக்குகளை அறிந்து கொள்ளக் கூடிய உணரிகளைக் கொண்டுள்ளன.

இரசியாவின் SU-35 என்னும்புதிய விமானம் இரசியாவின் பழைய விமானமான MIG-29இலும் பார்க்க ஐந்து மடங்கு தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியன.

உக்ரேனிடம் 1991இற்கு முன்னர் (சோவியத் கால) உருவாக்கப்பட்ட MIG-29கள் உள்ளன. இரசியக் கடற்படையின் இதய நிலமாக கருதப்படும் கிறிமியாவின் எப்பகுதியிலும் உக்ரேனியர்களால் தாக்கக் கூடிய வலிமையை F-16 வழங்குகின்றது.

இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமைகளான எஸ்-400, எஸ்-300 ஆகியவை இல்லாத இடங்களாகப் பார்த்து உக்ரேனியர்கள் தாக்கலாம். அல்லது எஸ்-300, எஸ்-400 ஐ அழிக்க வல்ல ஏவுகணைகளை அமெரிக்கா உக்ரேனில் தேர்வுக்கு உள்ளாக்கிப் பார்க்கலாம்.

சிரியப் போரில் இருந்து இரசியாவின் வான் பாதுகாப்பை உடைக்கும் வழிகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருகின்றது.

உக்ரேன் போரில் இரசிய இலக்குகளை இலகுவில் வீசி அழிக்கும் திறன் F-16 போர்விமானத்திடம் உண்டு. இரசியா ஆக்கிரமித்துள்ள உக்ரேனின் நிலப்பரப்புக்கள் மீது F-16 துல்லியமாகத் தாக்குதல் செய்யும்.

போலாந்து வழங்கும் என எதிர் பார்க்கப்படும் F-16இல் எல்லா புதிய ஏவுகணைகளை எடுத்துச் செல்லலாம். எந்த வகையான F-16, எத்தனை F-16 உக்ரேனுக்கு வழங்கப்படவிருக்கின்றது என்பதும் அவற்றுடன் எந்த வகையான ஏவுகணைகள் உக்ரேனுக்கு வழங்கப்படவிருக்கின்றன என்பதும் தான் உக்ரேனின் போரில் F-16 செய்யவிருக்கும் தாக்கத்தை முடிவு செய்யும்.

அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது F-16மூலம் செய்யும் தாக்குதல்களைப் போல் உக்ரேனால் இரசியாமீது தாக்குதல் செய்ய முடியாத அளவிற்கு இரசியாவின் வான் பாதுகாப்பு முறைமை உன்னதமானவை.

விமானிகளின் திறன் விமானங்களையும் தாண்டி போர்முனையின் முடிவுகளைச் செய்யக் கூடியவை என்பதை இஸ்ரேலியப் வான்படையினர் பல தடவைகள் உறுதி செய்துள்ளனர்.

உக்ரேன் விமானிகளின் திறன் முக்கிய பங்கு வகிக்கும். F-16 போர் விமானங்களை ஓட்டும் பயிற்ச்சியை ஒரு தேர்ச்சி பெற்ற விமானிக்கு போதிக்கவே மூன்று மாதத்திற்கு மேல் எடுக்கும்.

உக்ரேன் தனது Spring Offensiveஇல் F-16 போர் விமானங்களை களத்தில் இறக்கி சண்டை செய்ய முடியாது Spring பருவகாலம் ஜூன் மூன்றாம் வாரத்துடன் முடிந்துவிடும்.

Share.
Leave A Reply

Exit mobile version