புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைக்கிறார். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தயாரிக்கப்பட்ட செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்காக, அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த செங்கோலை பிரதமரிடம் வழங்க திருவாவடுதுறை ஆதீனம் தலைமையிலான குழு டெல்லி சென்றது.
இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
செங்கோல், பிரதமர் நரேந்திர மோதி, திருவாவடுதுறை ஆதீனம்
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் இங்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவ பக்தர்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது,” என்று ஆதீனம் மற்றும் குழுவினரிடம் தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டடம்
செண்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மொத்த திட்டத்திற்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்பத்திற்கு அருகேயுள்ள பகுதி சென்ட்ரல் விஸ்டா என அழைக்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், நார்த் பிளாக், சவுத் பிளாக், துணை ஜனாதிபதி இல்லம் ஆகியவையும் சென்ட்ரல் விஸ்டாவின் கீழ் வருகின்றன.
பழைய மக்களவையில் அதிகபட்சமாக 552 பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், புதிய அவையில் 888 இருக்கைகள் உள்ளன.
நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வின்போது 1272 பேர் அமரும் வகையில் புதிய கட்டடம் உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வேறு சிறப்புகள்
‘காகிதமில்லா அலுவலகங்கள்’ என்ற இலக்கை நோக்கி நகரும் வகையில், நவீன டிஜிட்டல் வசதிகளுடன் புதிய கட்டடத்தில் அனைத்து எம்.பி.க்களுக்கும் தனி அலுவலகம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய கட்டடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை சித்தரிக்கும் வகையில் பிரமாண்ட அரசியலமைப்பு மண்டபம் இருக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் அங்கு வைக்கப்படும்.
இந்த முழு திட்டத்தின் கட்டுமானப் பகுதி 64,500 சதுர மீட்டர். புதிய நாடாளுமன்றத்தின் பரப்பளவு தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தை விட 17,000 சதுர மீட்டர் அதிகம்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டியது யார்
புதிய கட்டடத்தை கட்டும் ஒப்பந்தத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் பெற்றது. 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ. 861.90 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை அவர்கள் ஏலம் எடுத்திருந்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டடம் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் வரைபடத்தை குஜராத்தை சேர்ந்த கட்டடக்கலை நிறுவனமான ஹெச்.சி.பி. டிசைன்ஸ் உருவாக்கியது.
புதிய நாடாளுமன்ற கட்டடம் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் வரைபடத்தை குஜராத்தை சேர்ந்த கட்டடக்கலை நிறுவனமான ஹெச்.சி.பி. டிசைன்ஸ் உருவாக்கியது.
இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் சிபிடபிள்யூடி மூலம் டெண்டர் கோரப்பட்டது. இதற்கான செலவினம் ரூ.229.75 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ஹெச்.சி.பி. டிசைன்ஸ் இந்த ஏலத்தை வென்றது.
இதற்கு முன் குஜராத்தின் காந்திநகரில் உள்ள மாநில செயலகம், அகமதாபாத் சபர்மதி நதி முகப்பு மேம்பாடு, மும்பை துறைமுக வளாகம், வாரணாசியில் மந்திர் வளாக மறுவடிவமைப்பு, ஐஐஎம் அகமதாபாத்தின் புதிய வளாக மேம்பாடு போன்ற திட்டங்களில் ஹெச்.சி.பி. டிசைன்ஸ் பணியாற்றியுள்ளது.