திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர். தாம்பூல பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவாட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர்.

புதுச்சேரி: திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு உணவு அருந்தி செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த தாம்பூல பையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், லட்டு, சாக்லேட், சாத்துக்குடி, மாம்பழம், போட்டு கொடுப்பார்கள். வசதி படைத்தவர்கள் சிலர் சில்வர் தட்டு, கிப்ட் பாக்ஸ்கள் வைத்து கொடுப்பார்கள்.

ஆனால் புதுச்சேரியில் மணமகள் வீட்டார் திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் சேர்த்து மது பாட்டிலையும் கொடுத்துள்ளனர். இது திருமணத்துக்கு வந்தவர்களை முகம் சுளிக்க வைத்தாலும் குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

சென்னையை சேர்ந்த மணமகன் ஒருவருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமகள் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுவை நகர பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர். அதில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவாட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர்.

திருமணத்திற்கு வந்த குடிமகன் விருந்தாளிகளை இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திருமண மண்டபத்தில் இருந்த சில குடிமகன்கள் ஓடோடி சென்று போட்டி போட்டுக்கொண்டு தாம்பூல பையுடன் மதுபாட்டிலையும் வாங்கினர்.

இதற்காக அவர்கள் பெட்டி பெட்டியாக மதுபாட்டில் வாங்கி வைத்திருந்தனர். ஆனால் சென்னையில் இருந்து வந்த மணமகன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். திருமணத்துக்கு வந்த பெண்கள் மற்றும் சிலர் முகம் சுளித்து சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version