இலங்கை கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்ட காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் கடன் வசதித் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த ஆண்டு மார்ச்சில் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் கடனுதவியின் காலம், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாகவே, இந்திய ஸ்டேட் வங்கியால் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த கால நீடிப்புக்கான திருத்த உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கைக்கமைய, 2024 மார்ச் வரையிலான மற்றொரு வருட காலப்பகுதிக்கு இந்த கடன் வசதியினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இந்தியாவின் இந்த உதவி மிக முக்கியத்துவம் மிக்கதாகவே அமைந்திருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது இந்தியா மட்டுமே இவ்வாறு இருதரப்பு நேரடி கடன்களை இலங்கைக்கு வழங்கியது.

நெருக்கடிகளின்போது…

பொதுவாக இலங்கை மக்கள் மிக நெருக்கடியான சூழ்நிலைகளை சந்தித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இலங்கைக்கு இந்தியா உதவி வந்திருக்கிறது.

பல விடயங்களில்  எவ்வாறான மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் கூட இந்தியா இலங்கைக்கு பல வழிகளில்   தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவி செய்து வருகின்றது. எந்தக் காரணத்துக்காகவும் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்குவதை இந்தியா ஒருபோதும் தவிர்க்கவில்லை என்பதே யதார்த்தமாகும்.

இந்த உதவித் திட்ட நீடிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையின் துரித பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்கும் எமது நிலையான அர்ப்பணிப்புக்கான ஒரு சாட்சியமாகவே இலங்கைக்கான இந்தியாவின் இந்த ஆதரவு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

எவ்வாறு இந்தியா உதவியது? 

2022ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளை  சந்தித்தபோது அயல்நாடான இந்தியா இலங்கைக்கு சுமார் 3.8 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கடன் உதவியை வழங்கியது.

தெற்காசிய நாணய பரிமாற்று ஏற்பாடுகள் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்கள், 500 மில்லியன் டொலர்கள் கடன் ஒன்றை செலுத்துவதற்கான உதவி, 1.5 பில்லியன் டொலர்கள் கடனுதவி, இலங்கை இந்தியாவுக்கு செலுத்த வேண்டியிருந்த ஒரு பில்லியன் டொலர் கடனுதவி நீடிக்கப்பட்டமை, 500 மில்லியன் டொலர் விசேட கடன் என்பன இந்தியாவினால் 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு வழங்கப்பட்டன.

இந்தியாவின் இந்த உதவிகள் மூலமாகவே இலங்கை மக்கள் மூச்சுவிடக்கூடிய சூழல் உருவானது. இலங்கை 2022ஆம் ஆண்டின்  நடுப்பகுதியில் தனது கைவசம் இருந்த  எரிபொருளை மக்களுக்கு பகிர்ந்து வழங்குவதற்காக கியூ.ஆர். கோட்டா முறையை பின்பற்றியது.

அவ்வாறு கியூ.ஆர். கோட்டா முறையை பின்பற்றி எரிபொருளை  வழங்குவதற்கும் ஓரளவு எரிபொருள் இலங்கையிடம் இருந்தமைக்கு இந்தியாவின் உதவிகளே காரணமாக அமைந்திருந்தது.

இந்தியா எரிபொருள், மருந்து, அத்தியாவசிய பொருட்களுக்கான கடன்களையே இலங்கைக்கு வழங்கியது.

அவற்றின் ஊடாகவே இலங்கை மக்கள் 2022ஆம் ஆண்டில் குறைந்தபட்சமாவது எரிபொருளை பயன்படுத்தி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து கொண்டுசெல்லக்கூடிய சூழல் காணப்பட்டது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவின் இந்த உதவி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்திய உதவிகள் இலங்கைக்கு கிடைத்திருக்காவிடின், இலங்கையின் நிலைமை இதனை விட எவ்வாறு உக்கிரமடைந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.

வதைத்தெடுத்த வரிசை யுகம்

டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் இறக்குமதியில் சிக்கல், எரிபொருள் விலை உயர்வு, மின்சார நெருக்கடி, அத்தியாவசியப்  பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சிக்கல்கள், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டன. பல்வேறு பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. இதனால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.

2021ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பமான இந்த நெருக்கடிகள் 2022 ஆரம்பத்தில் தீவிரமடைந்தது.

அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள்,  காத்திருத்தல், ஏமாற்றங்கள், பொருளாதார பிரச்சினைகள், பாடசாலை ஸ்தம்பிதம், வர்த்தக செயற்பாடுகள் பாதிப்பு, மின்வெட்டு நெருக்கடி, தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் பாதிப்பு, போக்குவரத்து ஸ்தம்பிதம், எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் விலை அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் தோற்றம் பெற்றன.

இந்தியாவிலிருந்து வந்த எரிபொருள் கப்பல்கள் 

எனினும், இவ்வாறான தீவிர நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவ்வப்போது இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகளினால்  குறிப்பிடத்தக்களவு மக்களால் நிலைமையை சமாளித்துக்கொள்ள முடியுமாக இருந்தது.  மக்கள் மூச்சுவிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்திய உதவிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்துள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள், வளைகுடா நாடுகள், தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கி, விஸ்தரிக்கப்பட்ட அயலகத்தை உருவாக்குவது குறித்து இந்திய பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. இலங்கையில் கடந்த வருடத்தில் இடம்பெற்ற விடயங்களை விட வேறு எதுவும் வியத்தகு விதத்தில் இதனை வெளிப்படுத்த முடியாது என்று  குறிப்பிட்டிருக்கிறார்.

விபரிக்க முடியாத நெருக்கடி 

ஆம். 2022ஆம் ஆண்டு இலங்கை எவ்வாறான  பொருளாதார நெருக்கடியில் இருந்தது என்பதை வார்த்தைகளினால், சொற்களினால் விபரிக்க முடியாது. அந்தளவு தூரம் ஒரு நெருக்கடி நாட்டில் காணப்பட்டது. நாட்டுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதே ஒரு கேள்விக்குறியாக இருந்தது.

ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியா 2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு 3 – 8 பில்லியன்  டொலர்களை கடன் உதவியாக வழங்கியது.

அந்த கடனின் அடிப்படையிலேயே எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள் என்பன கிடைத்தன. அவற்றை வரையறுக்கப்பட்ட நிலையிலும், அதிகரித்த விலையிலுமாவது  குறிப்பிடத்தக்களவில் மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில், பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையிலும், இலங்கை மிக நெருக்கமான அயல்நாடு என்ற வகையிலும் இலங்கையின் எந்தவொரு நெருக்கடியாக இருந்தாலும் முதலாவதாக முன்வந்து உதவி செய்யும் நாடாக இந்தியா தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

முக்கியமாக, 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோதும், இலங்கைக்கு இந்தியா முதலாவது நாடாக உதவிகளை செய்தது.

அத்துடன் 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டபோதும் கூட   முதலாவதாக இலங்கைக்கு உதவிய வெளிநாடு என்ற அடிப்படையில் இந்தியாவே முன்வந்து உதவி செய்தது. அத்துடன் இயற்கை அனர்த்தங்களின்போதும் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையிலேயே  2022ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டபோது இந்தியா உதவிகளை வழங்கியது.

ஏற்றத் தாழ்வுகள் 

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு நட்புறவில் கடந்த காலங்களில் ஏற்றத் தாழ்வுகள் இருந்திருக்கின்றன.

பல முரண்பாடான நிலைமைகள் கூட அவ்வப்போது தோன்றியிருக்கின்றன. ஆயினும் கூட இலங்கைக்கான இந்த அவசர நேர உதவிகளை செய்வதில் இந்தியா எப்போதும் பின்நின்றதில்லை.

அதேபோன்று இலங்கையின் அரசாங்கங்களும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், இலங்கை பயன்படுத்தப்படுவதற்கு எந்த தரப்புக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது என்ற விடயத்தை தொடர்ச்சியாக தெரிவித்தும் வந்திருக்கின்றன.

அந்த வகையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சில சந்தர்ப்பங்களில் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டாலும் கூட, இரண்டு தரப்பினரும் ஏதோ ஒரு வகையில்   மிகவும் நெருக்கமாகவே  செயற்பட்டிருக்கின்றனர். நெருக்கடியான நேரங்களில் கை கொடுக்கும் வகையிலே செயற்பட்டு வந்திருக்கின்றனர்.

கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி நாட்டின் புதிய ஜனாதிபதியாக பாராளுமன்றத்தில் தெரிவான ரணில் விக்ரமசிங்க சில தினங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தினார்.

அப்போது இந்தியாவுக்கு பிரத்தியேகமாக நன்றி தெரிவித்தார். அதாவது இலங்கை மக்கள் மூச்சு விடுவதற்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்று அறிவித்தார். இதனூடாக இந்தியாவின் 4  பில்லியன் டொலர் கடனுதவி எந்தளவு தூரம் முக்கியத்துவமானது என்பதனை புரிந்துகொள்ள முடிகின்றது.

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் முந்திக்கொண்டு உதவிய இந்தியா 

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு  மற்றும் சர்வதேச நாணயத்திடம் பெற்றுக்கொள்கின்ற உதவி ஆகியவற்றிலும் இலங்கைக்கு பாரிய உதவிகளை இந்தியா செய்தது. அதாவது இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின்  கடன் உதவி கிடைப்பதற்கு சர்வதேச கடன் வழங்குநர்களின் உத்தரவாதம் தேவைப்பட்டிருந்தது.

இலங்கைக்கு கடன்களை வழங்கியிருக்கின்ற  ஒவ்வொரு நாடுகளும் அமைப்புகளும் அந்த உத்தரவாதத்தை நாணய நிதியத்துக்கு வழங்க வேண்டியிருந்தது. அந்த உத்தரவாதத்தை முதலில் வழங்கியது இந்தியாவாகும்.

இந்தியா, இலங்கைக்கு கடன் உத்தரவாதம் வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு அறிவித்தது. அது சர்வதேச மட்டத்தில் மிக பரவலாக பேசப்பட்ட ஒரு விடயமாக அமைந்தது.

அதன் பின்னர், பல நாடுகள் இலங்கைக்கு கடன் உத்தரவாதம் வழங்கின. எனவே, சர்வதேச நாணயத்தின் 2.9 பில்லியன் கடன் உதவியை இலங்கை பெற்றுக்கொள்வதிலும் இந்தியாவின் வகிபாகம் மற்றும் உத்தரவாதம் மிக முக்கியமானதாகவே காணப்பட்டது.

அந்த வகையில், பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட மக்கள் சற்றேனும் மூச்சு விடுவதற்கு இந்தியா உதவியது என்பதனை யாரும் மறுக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.

Share.
Leave A Reply

Exit mobile version