காஞ்சிபுரத்தில் கணவனைக் கொலைசெய்த மனைவி, தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (32). இவரின் மனைவி வேண்டா (26). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. தற்போது வேண்டா, ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

மது அருந்தும் பழக்கமுள்ள சந்தானம், போதையில் மனைவி வேண்டாவை அடித்து, துன்புறுத்தி வந்திருக்கிறார். அதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

சம்பவத்தன்று சந்தானத்துக்கும் வேண்டாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆத்திரமடைந்த வேண்டா, கல்லை எடுத்து சந்தானத்தின் தலைமீது போட்டிருக்கிறார்.

இதில் ரத்தவெள்ளத்தில் சந்தானம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு வேண்டா, வீட்டுக்குள் சென்று தற்கொலை செய்துகொண்டார்.

இந்தத் தகவல் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்குத் தெரியவந்ததும், சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். சந்தானம், வேண்டா ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இரண்டு குடும்பத்தினரிடமும் விசாரித்தபோது கணவன், மனைவிக்குமிடையே ஏற்பட்ட தகராறில் இந்த விபரீதச் சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள். சந்தானத்தின் மதுப்பழக்கத்தால் அவரின் குடும்பம் சீரழிந்துவிட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அடிக்கடி தகராறில் ஈடுபட்டு துன்புறுத்திய கணவனை, கர்ப்பிணி மனைவி கல்லைப்போட்டு கொலைசெய்ததோடு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version