வவுனியாவில் மகப்பேற்று விசேட வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபரை குற்றவாளியாக இனங்கண்ட வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நெடுமாறன் என்ற குறித்த நபர் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தார்.

மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காக வியாழக்கிழமை (08) தவணையிடப்பட்டிருந்தது.

உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிரூபிக்கப்பட்ட நிலையில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கு மரணதண்டை விதித்து தீர்ப்பளித்தார்.

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தநிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்திருந்த நிலையில் தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொலை செய்யப்பட்ட வைத்தியர் பிரபலமான மகப்பேற்று விசேட வைத்தியர் என்பதோடு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு பல மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொண்டு நற்பெயர் பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version