டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஷ்ரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பொதுமக்கள் இன்னும் முழுமையாக மறக்காத நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தின் மீரா ரோடு சிட்டியில் நடந்துள்ள ஒரு கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 3 ஆம் தேதி, 32 வயதான சரஸ்வதி வைத்யா படுகொலை செய்யப்பட்டார் என்பதுடன், அவரது உடல் 20 க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டப்பட்டது. மேலும், பிரஷர் குக்கரில் அந்த உடல் பாகங்களை வேகவைத்து பின்னர் அதை அப்புறப்படுத்தும் முயற்சியிலும் கொலையாளி ஈடுபட்டுள்ளார்.

மீரா ரோட்டில் உள்ள ‘கீதா ஆகாஷ்தீப்’ என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 3ம் தேதி இந்த கொடூர கொலை நடந்துள்ளது. சரஸ்வதி வைத்யாவுடன் வசித்து வந்த நபர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

56 வயதான மனோஜ் சானே மற்றும் 32 வயதான சரஸ்வதி வைத்யா ஆகியோர் 2015 ஆம் ஆண்டு முதல், மீரா சாலையில் உள்ள ‘கீதா ஆகாஷ்தீப்’ கட்டிடத்தில் வசித்து வந்தனர்.

இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த சரஸ்வதி வைத்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வந்த சரஸ்வதி வைத்யா, 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என அவர் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.

மீரா ரோட்டில் உள்ள கீதா ஆகாஷ்தீப் கட்டிடத்தை நாங்கள் அடைந்தபோது, ​​எல்லா இடங்களிலும் இந்த விஷயம் குறித்து தான் பொதுமக்கள் விவாதித்துக்கொண்டிருந்தனர்.

காவல்துறையினரின் நடமாட்டம் காணப்பட்டது மட்டுமின்றி, அப்பகுதி குடியிருப்பாளர்களின் முகங்களில் திகைப்பும் அச்சமும் மட்டுமே கலந்திருந்தன.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஏழாவது மாடியில் உள்ள 704 எண்ணுடைய வீட்டில் மனோஜ் சானே மற்றும் சரஸ்வதி வைத்யா ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர்.

நாங்கள் அந்த இடத்தை அடைந்த போது, அந்த வீட்டுக்கு போலீசார் சீல் வைத்திருந்தனர். ஏழாவது மாடியில் மொத்தம் நான்கு வீடுகள் உள்ளன.

இந்த அறையைத் தவிர மீதமுள்ள மூன்று வீடுகளில் வசித்து வரும் அண்டை வீட்டாருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.

அக்கம்பக்கத்து இளைஞர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்

எங்களிடம் பேசிய பக்கத்து வீட்டுக்காரர், “திங்கட்கிழமை (ஜூன் 3) முதல் ஏதோ ஒரு துர்நாற்றம் வீசியதை நான் அறிந்தேன்.

அந்த துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் வீடுகளில் ஏதாவது எலியோ அல்லது பறவையோ இறந்து கிடக்கலாம் என்ற சந்தேகத்துடன் நாங்கள் அது போல் ஏதாவது கிடக்கிறதா எனத்தேடினோம்.

ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் அந்த துர்நாற்றம் தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தது. அது மட்டுமின்றி அது வேகமாக அதிகரித்தும் வந்தது.”

7வது மாடியில் உள்ள அந்த வீட்டைத் தவிர, எல்லா இடங்களிலும் அவர்கள் தேடியுள்ளனர், ஆனால் எலியோ, அல்லது வேறு ஏதாவது இறந்து கிடந்ததாகவோ எதுவும் கிடைக்கவில்லை.

மனோஜ் சானேவும் சரஸ்வதி வைத்யாவும் பொதுவாக யாருடனும் பேசிப் பழகவில்லை என்றும், அவர்களது வீட்டுக் கதவுகளும் எப்போதும் மூடியே இருக்கும் என்றும், இதனால் அவர்களது வீட்டில் இதுபோல் துர்நாற்றம் வீசக்கூடிய ஏதாவது கிடக்கிறதா என பார்க்கவில்லை என்றும் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்கள் கூறினர்.

ஆனால், அடுத்த நாள் அந்த துர்நாற்றத்தை தாங்கவே முடியாத அளவுக்கு அதிகரித்திருந்தது.

இறுதியில் 704-ம் எண் வீட்டுக்கு எதிரில் வசிக்கும் இளைஞர், பொறுமையிழந்து அந்த வீட்டுக் கதவைத் தட்டினார். ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தானேவில் கிடைத்த பெண்ணின் உடல் பாகங்கள்

அப்போது மனோஜ் சானே அந்த கட்டடத்தின் கீழ் நடந்து சென்றதை எதிர்வீட்டு இளைஞர் பார்த்துள்ளார். முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்தபடி அவர் நடந்து சென்றுகொண்டிருந்ததாக எதிர்வீட்டு இளைஞர் தெரிவிக்கிறார்.

உடனே மனோஜ் சானேவிடம் இந்த துர்நாற்றம் குறித்து எதிர்வீட்டு இளைஞர் கேட்டிருக்கிறார். “இப்பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த நாற்றம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.

இங்குள்ள எல்லா வீடுகளிலும் முழுமையாக தேடிப்பார்த்தோம். துர்நாற்றம் வீசக்கூடிய எதுவும் இல்லை.

உங்கள் வீட்டில் தான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் நீங்கள் வந்தால் அங்கே ஏதாவது கிடக்கிறதா என நாம் பார்த்து விடலாம் என்று கூறினேன்.

ஆனால் மனோஜ் சானே ‘நான் வெளியே செல்கிறேன். 10:30 மணிக்குப் பின்னர் தான் வரமுடியும்’ என்று சொன்னார்.

மேலும், பக்கத்து கட்டிடத்தில் இருந்தோ அல்லது சேற்றுத் தண்ணீரில் இருந்தோ நாற்றம் வந்திருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.”

“அத்துடன் நான் என் பேச்சை நிறுத்திக்கொண்டேன்.”

ஆனால், அந்த துர்நாற்றம் எல்லோரையும் மிகவும் சங்கடத்துக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் சங்கத் தலைவருக்கு அந்த இளைஞர் இது பற்றி தகவல் அளித்துள்ளார்.

அவர் வந்த பின் எல்லோரும் கலந்து பேசி, மனோஜ் சானேவுக்கு வீடு பெற்றுத் தந்த ஏஜென்டுடன் தொடர்பு கொண்டனர். அவரும் அடுத்த அரைமணிநேரத்தில் அங்கு வந்தார்.

அந்த மனோஜ் சானே இதுவரை யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்ற நிலையில் எல்லோருக்கும் அவர் மீது இலேசாக ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க முடிவெடுத்தனர்.

இதன் பேரில் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் உடனடியாக நயா நகர் காவல் நிலையத்திற்கு போன் செய்து, துர்நாற்றம் குறித்து தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

“அதைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சியாக இருந்தது”

போலீசார் வந்த பின் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞரும் போலீசாருடன் இருந்தார்.

அந்த இளைஞர் எங்களிடம் பேசிய போது, ​​”நாங்கள் அறைக்குள் நுழைந்தவுடனேயே சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது.

மனோஜ் சானேவுடன் வசித்த பெண்ணைக் காணவில்லை. அழுகிய நாற்றம் மிகவும் அதிகமாக இருந்ததால் போலீஸாருக்கு உடனடியாக சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அந்த வீட்டுக்குள் இருந்த காட்சிகளை அவர்கள் வீடியோ பதிவு செய்யத் தொடங்கினர். நாங்கள் முதலில் ஹாலில் சோதனை செய்தோம்.

ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகு, படுக்கையறையில் பார்த்தோம். அங்கே இருந்த படுக்கையில் கருப்பு பிளாஸ்டிக் பேப்பர் விரிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் ஒரு உடல் இருக்குமோ என நான் பயந்தேன். ஆனால் அங்கும் எதுவும் இல்லை.”

“இரண்டாவது படுக்கையறையிலும் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் நாங்கள் சமையலறைக்குச் சென்றோம். அங்கே நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சியில் உறையவைத்தது.

சமையலறையில் அடையாளம் தெரியாத அளவுக்கு 4 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்தன.

சமையலறை பேசினுக்குள் எலும்புகள் இருந்தன. அந்த காட்சி மிகவும் பயங்கரமாக இருந்தது. இதையடுத்து, போலீசார் சட்டப்படியான நடவடிக்கைகளைத் தொடங்கினர்.”

“நாங்கள் பின்னர் மனோஜ் சானேவுக்காகக் காத்திருந்தோம். இந்த சம்பவம் குறித்து நீங்கள் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரிடமும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

போலீசாரும் இருசக்கர வாகனத்தில் வந்ததால் அவர்களுடைய ஜீப் போன்ற வாகனங்கள் அங்கு இல்லை. இதனால் அங்கு போலீசார் வந்ததே யாருக்கும் தெரியாது. இரவு சுமார் 8.30 மணியளவில் மனோஜ் சானே அங்கு வந்தார்.

அங்கு போலீசார் இருந்தது அவருக்கும் தெரியாது என்பதால் எப்போதும் போல வழக்கமாக அவர் தனது வீட்டுக்கு வந்தார்.”

“அந்த அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தின் லிஃப்ட்டில் அவர் ஏழாவது மாடிக்குச் வந்தார். லிஃப்ட்டின் கதவு திறந்தவுடன் அவருக்கு எதிரில் நின்றிருந்த ஏஜென்ட் அவரை அடையாளம் கண்டு போலீசாருக்கு அடையாளம் காட்டினார். உடனே போலீசார் அவரைப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.”

பின்னர் கதவை மூடிவிட்டு போலீசார் அங்கேயே அப்போதே விசாரணையை தொடங்கினர். முதலில், “அவை ஒரு விலங்கின் உடல் பாகங்கள்,” என மனோஜ் சானே கூறினார்.

“லிஃப்ட்டில் என்னைப் பார்த்ததும் சிரிக்கும் அந்த முகம்”

சரஸ்வதி வீட்டின் எதிரே உள்ள வீட்டில் வசித்துவரும் ஸ்ரீவத்ஸவா குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நாங்கள் உரையாடினோம்.

“இரண்டு நாட்களாக நான் தூங்கவில்லை. அந்தப் பெண்ணின் சிரித்த முகம் கண் முன்னே வந்துகொண்டே இருக்கிறது,” என அவர் உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார்.

“அந்தப் பெண் ஏன் துன்புறுத்தப்பட்டார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் உதவி கேட்டிருந்தால், அவர் எங்களிடம் பேசியிருந்தால் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள் அவருக்கு நிச்சயமாக உதவியிருப்போம்,” என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், “அந்தப் பெண் என்னிடமோ அல்லது வேறு யாரிடமோ ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.

அதே நேரம் லிஃப்ட்டில் வரும்போதெல்லாம் என்னைப் பார்த்துச் சிரிப்பார். ‘பாபி எப்படி இருக்கிறாள்?’ என்று நான் கேட்டாலும், அவள் தலையை அசைத்து சிரித்ததைத் தவிர வேறு எதுவும் பேசியதில்லை.

என்னிடம் மட்டுமல்ல, இந்த குடியிருப்புக்களில் உள்ள யாரிடமும் அவர் பேசியதில்லை. அதே போல் அந்த வீட்டில் ஒரு நாளும் சண்டை நடந்த சத்தம் கூட வந்ததில்லை. அவருக்கு ஏதாவது பிரச்சனை இருந்ததா என்று கூட யாரும் கூறமுடியாது. அந்த அளவுக்கு எந்த சந்தேகமும் எங்கள் யாருக்கும் வந்ததில்லை,” என்றார்.
சம்பவம் நடந்த வீட்டின் எதிர்வீட்டைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸவா குடும்பத்தினர்

இந்த கட்டிடத்தில் ஸ்ரீவத்ஸவா குடும்பத்தினர் பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து வசித்து வருகின்றனர். 2015ம் ஆண்டு முதல் அவர்கள் இருவரும் இங்கு வாடகைக்கு வசித்து வந்திருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் யாருடனும் பேசுவதோ, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அது திருவிழா, அல்லது கொண்டாட்டம் என எதிலும் இருவரும் பங்கேற்றதில்லை.

“எங்கள் வீட்டு கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். பக்கத்து வீட்டு குழந்தைகள் உள்ளே வந்து விளையாடுவார்கள்.

மாலையில் கூட கதவுகள் திறந்திருக்கும். நாங்கள் மூன்று குடும்பங்களும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். தீபாவளி, ஹோலி, நவராத்திரி போன்ற அனைத்து பண்டிகைகளையும் நாங்கள் ஒன்றாகக் கொண்டாடுவோம்.

ஆனால் அவர்கள் இருவரும் ஒருபோதும் வீட்டுக் கதவுகளைக் கூட திறந்ததில்லை. பல நேரங்களில் நாங்களாகவே அவர்களை ஏதாவது ஒரு கொண்டாட்டத்துக்கு அழைத்தாலும் அவர்கள் வருவதில்லை.

இது போன்ற அனுபவங்கள் அதிகமானதால் அவர்களுடன் தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டோம். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நாங்கள் அவர்களை கூப்பிடவில்லை.”

அவர்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. உறவினர்கள் யாரும் அவர்களைப் பார்க்க ஒரு போதும் வந்ததில்லை என்றும் அவர் சொன்னார்.

கோவிலில் நடந்த திருமணம்… ஆனால்…

இந்த கொலை சம்பவம் குறித்து மீரா ரோடு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சானேவிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டு, அதைப் பதிவு செய்யும் பணிகளையும் போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.

போலீஸ் விசாரணையில் மனோஜ் சானே முன்னுக்குப்பின் முரணாகப் பேசிவருவதாகவும், தனது பதிலைத் திரும்பத் திரும்ப மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சரஸ்வதி தற்கொலை செய்துகொண்டதாக முதலில் அவர் தெரிவித்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டாலும், போலீசார் தம்மை விசாரிப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவே உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் மனோஜ் சானே தெரிவித்துள்ளார்.

சரஸ்வதியின் பெற்றோர் சிறுவயதிலேயே பிரிந்துவிட்டனர். இதையடுத்து சரஸ்வதி தனது தாயாருடன் வசித்து வந்தார். ஆனால் சில வருடங்களில் அவரது தாயும் இறந்து போனார்.

நான்கு சகோதரிகளில் இளையவரான சரஸ்வதி பின்னர் தனிமையில் விடப்பட்டார். இதன் காரணமாக அவர் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வந்தார்.

அவுரங்காபாத் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த சரஸ்வதி, சிறுவயதிலேயே அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தபடியே அவர் 1 முதல் 10ம் வகுப்பு வரை படித்து முடித்தார். பின்னர் 18 வயது நிறைவடைந்ததும் அங்கிருந்து அவர் வெளியேற வேண்டியிருந்தது.

அதனால் அவர் தனது சகோதரியுடன் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வசித்துவந்தார். பின்னர், அவர் வேலை தேடி மும்பை நகருக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜெயந்த் பஜ்பலே, காவல் துணை ஆணையர், மீரா ரோடு

மும்பையில் வேலை தேடிக்கொண்டிருந்த போது தான் போது மனோஜ் சானேவை அவர் சந்தித்துள்ளார். அவர் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து போரிவலியில் உள்ள மனோஜ் சானேவின் குடியிருப்பில் சில நாட்கள் சரஸ்வதி தங்கியிருந்தார். பின்னர் இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு மீரா சாலையில் உள்ள இந்த குடியிருப்புக்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து மீரா ரோடு காவல் துணை ஆணையர் ஜெயந்த் பஜ்பலே கூறுகையில், “இறந்த சரஸ்வதி வைத்யாவுக்கும், குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சானேவுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.

 

அவர்கள் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சரஸ்வதியின் மூன்று சகோதரிகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்,” என்றார்.

சரஸ்வதியின் மூன்று சகோதரிகளிடமும் போலீசார் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளனர். சரஸ்வதி தனது சகோதரிகளுடனும் தொடர்பில் இருந்ததால் இந்த வாக்குமூலம் விசாரணைக்கு முக்கியமானது.

குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சானேவின் வயதுக்கும் சரஸ்வதியின் வயதுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதால் திருமணம் செய்த விஷயத்தை அவர் யாருக்கும் தெரிவிக்கவில்லை.

இதனாலேயே, சரஸ்வதியை யாருக்காவது அறிமுகப்படுத்தும் போது, தன்னை அவரது மாமா என அறிமுகப்படுத்திக்கொள்வது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

இதற்கிடையே சரஸ்வதியின் உயிரிழப்புக்கான சரியான காரணம் குறித்து போலீசார் இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

தற்போது சரஸ்வதியின் சகோதரிகளுடைய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை அறிக்கை வந்தவுடன், சரஸ்வதியின் உடல் அவரது சகோதரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

 

Share.
Leave A Reply

Exit mobile version