தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த அமலாக்கத்துறை இப்போது அவரைக் கைது செய்திருக்கிறது. இவ்விஷயத்தில் நேற்று இரவிலிருந்து பரபரப்பான பல காட்சிகள் அரங்கேறின. அவை இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன.

ஜூன் 13, செவ்வாய்க்கிழமை காலை: சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல இருந்த நிலையில் காரில் இருந்த செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாகக் கூறி, கதறி அழுது துடித்ததால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

செந்தில் பாலாஜி, தி.மு.க., ஸ்டாலின்

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.

 

ஜூன் 14, புதன்கிழமை காலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார்.

இதன்பிறகு, ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டார்: “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? … சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”

ஜூன் 14, புதன்கிழமை காலை: சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய ரத்தநாளப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு மூன்று ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாகவும் ஒரு அறிக்கையை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வெளியிட்டது. மேலும் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைத்தது.

ஜூன் 14, புதன்கிழமை மதியம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அளித்த அறிக்கையில் “இது விசாரணை அல்ல; பழிவாங்கும் நடவடிக்கை,” என்று கூறினர்.

ஜூன் 14, புதன்கிழமை மதியம்: செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி வந்து விசாரணை நடத்தினார்.

ஜூன் 14, புதன்கிழமை மாலை: அமலாகத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

ஜூன் 14, புதன்கிழமை மாலை: ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க கோரிய செந்தில் பாலாஜி தரப்பிலான மனு உட்பட, மூன்று மனுக்களின் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. இவற்றின்மீதான தீர்ப்பை நீதிமன்றம் நாளைக்கு (ஜூன் 15, வியாழக்கிழமை) ஒத்திவைத்தது.

யார் இந்த செந்தில் பாலாஜி?

ஒன்றிய கவுன்சிலராக தி.மு.கவில் தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய மீண்டும் திமுகவிலேயே இணைந்து ஒரு முழுச் சுற்றை முடித்தவர் செந்தில் பாலாஜி.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, அவரது அமைச்சரவையில் இருந்த ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொருவிதமாக தன் விசுவாசத்தை நிரூபிக்க முயன்றுகொண்டிருக்க, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியோ பல கோவில்களில் அங்கப்பிரதட்சணம், அம்மன் கோவில் ஒன்றில் காவடி என பலரையும் பிரமிக்கவைத்தார்.

ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து இவர்தான் என்றெல்லாம் மற்ற அமைச்சர்களே மிரண்டுபோய் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2015 மே மாதம் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா ஜூலை மாதம் செந்தில் பாலாஜியின் பதவியைப் பறித்தார். அவரிடமிருந்த கரூர் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

ஆனால், அசராமல் அமைதியாக இருந்தார் செந்தில் பாலாஜி. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார் ஜெயலலிதா.

கரூரில் உள்ள ராமேஸ்வரப் பட்டியைச் சேர்ந்த வி.செந்தில் குமார் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படிக்கும்போது, படிப்பை பாதியில் விட்டுவிட்டு அரசியலில் குதித்தவர்.

1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்தார். பிறகு நியூமராலஜிப்படி தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார்.

அதற்குப் பிறகு அமைச்சராகும்வரை அ.தி.மு.கவில் அவரது பயணம் தொடர்ந்து மேல் நோக்கியதாகவே இருந்தது.

கட்சியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளரானார்.

2004ல் மாவட்ட மாணவரணி செயலாளரானவர் 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தார். 2007ல் கரூர் மாவட்டச் செயலாளராகவும் ஆனார்.

இதற்குப் பிறகு, ஜெயலலிதா மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினருடனும் மிகவும் செல்வாக்கான நபராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி. இதையடுத்து 2011லும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா.

2015ஆம் ஆண்டுவரை பல முறை அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியபோதும், செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவில்லை.

கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தனது செல்வாக்கை வளர்த்துவந்ததோடு, அதைத் தக்கவைக்க மாவட்டத்தில் இருந்த தனது அரசியல் எதிரிகளையும் மெல்லமெல்ல ஓரம்கட்ட ஆரம்பித்தார் செந்தில் பாலாஜி.

அ.தி.மு.கவில் இருந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தி.மு.கவுக்குச் சென்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பிதுரைக்கு பல இடங்களில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்குப் பின்னால், செந்தில் பாலாஜியின் கரம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

கட்சி சசிகலா – ஓ.பி.எஸ் என இரு தரப்பாகப் பிளவுபட்டபோது, சசிகலா பிரிவுக்கு ஆதரவாக இருந்தார்.

ஆனால் அந்த நேரத்திலும்கூட, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக ஒரு அதிரடியைக் கிளப்பினார் செந்தில் பாலாஜி.

அந்த நேரத்திலேயே, அதாவது 2017 ஏப்ரலிலேயே, அவர் தி.மு.க.வுக்கு வரப்போவதாக செய்திகள் அடிபட்டன.

அவர் மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தி.மு.க.வுக்கு அழைத்துவருவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பிலிருந்து டிடிவி தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டபோது அவர் பக்கம் சென்றார் செந்தில் பாலாஜி.

ஆனால், டிடிவி தரப்பிலிருந்து அவருக்கு பல்வேறு விதங்களில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் இருந்த நிலையிலேயே அவர் தி.மு.க பக்கம் சென்றார் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு முக்கியத் தேர்தல்களில் தனது பலத்தை அவர் நிரூபித்திருக்கிறார்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version