ஆந்திர பிரதேசத்தில் 16 வயது சிறுவன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அந்தச் சிறுவன் வீட்டைவிட்டுச் சென்று இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. தினமும் காலை 5 மணிக்கு டியூஷன் செல்வதற்காக அவன் வீட்டை விட்டு கிளம்புவான்.

கடந்த வெள்ளியன்று காலையும் அவன் அப்படித்தான் கிளம்பினான். ஆனால் அதன்பின் அவன் வீடு திரும்பவேயில்லை.

அன்று வீட்டிலிருந்து கிளம்பிய அரை மணிநேரத்திற்குள், குடும்பத்தினரை தொலைப்பேசியில் அழைத்த சிறுவன் அமர்நாத், யாரோ சிலர் தன்னைத் தாக்குவதாகக் கூறியுள்ளான்.

“அவனை யாரோ அடிக்கிறார்கள் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால் அவனது உயிரையே எடுத்துவிடும் அளவுக்கு இப்படியொரு கொடூர சம்பவம் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் உயிரிழந்த சிறுவன் அமர்நாத்தின் உறவினர் லக்‌ஷ்மி தெரிவித்தார்.

ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் உள்ள செருக்குப்பள்ளி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன் உப்பல்லா அமர்நாத். ராஜவொலு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இவர், உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்று காலை 5 மணியளவில், டியூஷன் சென்றுகொண்டிருந்த சிறுவன் அமர்நாத் வழிமறித்து தாக்கப்பட்டது மட்டுமல்லாமல், பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிக்கப்பட்டிருக்கிறான்.

தன்னுடைய தந்தை மறைவிற்குப் பின், தனது தாய் மற்றும் சகோதரியுடன் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தான் அமர்நாத். வீட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள ராஜவொலு மேல்நிலை பள்ளியில் படித்த வந்த சிறுவன், டியூஷனுக்காகவும் தினமும் காலை பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

சிறுவனின் கடைசி வார்த்தைகள்

கடந்த வெள்ளியன்று காலை வீட்டிலிருந்து கிளம்பிய அமர்நாத்தை, அடுத்த 10 நிமிடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர் ரெட்டி (23) என்னும் இளைஞன் வழிமறித்துள்ளார்.

உயிருடன் இருக்கும்போதே கைகள் கட்டப்பட்டு, உடலில் தார்ப்பாய்கள் சுற்றப்பட்டு, கொடூரமாக எரிக்கப்பட்டிருக்கிறார் சிறுவன் அமர்நாத்.

சிறுவன் அமர்நாத் பேசியுள்ள கடைசி வீடியோவில், தான் தாக்கப்படுவதாகவும், தன் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு, தீ வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

“நான் சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்போது என்னை வழிமறித்தனர். சாலையில் என்னை நிறுத்திய அவர்கள் என் வாயில் துணிகளை வைத்து அடைத்தனர். என் கைகளைப் பின்னால் வைத்துக் கட்டினர். எனது உடலை தார்பாய் வைத்து சுற்றியதுடன், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

என்னைத் தாக்கிய வெங்கடேஸ்வருடன், மற்றொரு 3 நபர்கள் இருந்தனர். அவர்கள் யாரென்றே எனக்கு தெரியவில்லை. எனக்கு இப்போது நடந்திருப்பது அவர்களுக்கும் நடக்கவேண்டும். அவர்களை விட்டுவிடாதீர்கள்,” என்பதுதான் சிறுவன் அமர்நாத்தின் கடைசி வார்த்தைகள்.

சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸில் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டபோது, அமர்நாத் கொடுத்த வாக்குமூலங்கள் இவை.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அமர்நாத்தின் உயிர் பிரிந்திருக்கிறது. குண்டூர் மருத்துவமனையில் அவரது உடலின் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அமர்நாத்தின் சொந்த ஊரான செருக்குப்பள்ளி கிராமத்திற்கு உடலை எடுத்துச் சென்றபோது, வழியிலேயே உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசி யூனியன் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சகோதரிக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்

அமர்நாத் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தொடர்பாக செருக்குப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் அமர்நாத்தின் தாய் உப்பல்லா மாதவி கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், போக்சோ உள்ளிட்ட 302, 323, 34, 301, 504, 354 D ஆகிய பிரிவுகளில் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் அமர்நாத்தின் சகோதரி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேஸ்வர் என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் சகோதரி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து அவர் அமர்நாத்திடம் எதுவும் கூறவில்லை. அமர்நாத் வீட்டில் யாரிடமாவது கூறிவிட்டால், அது பெரிய பிரச்னையாக மாறிவிடும் என்று பயந்த அவர், வெளியே இதுபற்றி காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

ஆனால் தனது சகோதரியின் மொபைலில் இருந்த மெசேஜ்கள் மூலம் நடந்த சம்பவங்கள் குறித்து சிறுவன் அமர்நாத்திற்கு தெரிய வந்தன. அமர்நாத் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

“பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்ட வெங்கடேஸ்வர், கட்டட வேலைக்கு கூலித் தொழிலாளியாகச் சென்று வருவது வழக்கம்.

இந்த பிரச்னை தொடர்பாக வெங்கடேஸ்வர் ஏற்கெனவே ஒருமுறை அமர்நாத்தை தாக்க முயன்றான். ஆனால் அப்போது அமர்நாத் தப்பி வந்துவிட்டான். அப்போதே வெங்கடேஸ்வரை எச்சரித்த நாங்கள், இனி எங்கள் பெண்ணிடம் பிரச்னை செய்தால் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிடுவோம் என்று கூறிவிட்டு வந்தோம்.

அதன்பின் எல்லா பிரச்னைகளும் முடிந்துவிட்டதாக நினைத்தோம், ஆனால் இப்படி ஆகும் என நாங்கள் நினைக்கவில்லை,” என்று அமர்நாத்தின் பாட்டி லக்‌ஷ்மி பிபிசியிடம் தெரிவித்தார்.

“அமர்நாத்தின் பிறந்தநாள் முடிந்து 15 நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள் அவனுக்கு இப்படியொரு அநீதி நடந்திருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என்று லக்‌ஷ்மி ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

உயிரைக் காப்பாற்ற நடந்த போராட்டம்

சம்பவத்தன்று அமர்நாத்தைக் காப்பாற்ற முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி ரெட்டி பிபிசியிடம் பேசினார்.

“அன்று நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன். திடீரென ஒரு பெரும் அலறல் சத்தம் கேட்டது. நாங்கள் வந்து பார்த்தபோது, அங்கே எரிந்துகொண்டிருப்பது யாரென்று தெரியவில்லை.

அப்போது எங்களிடம் பேசிய அமர்நாத் ‘தான் அண்ணா ரெட்டியின் பேரன்’ என்று கூறினான். நாங்கள் போர்வையை எடுத்து வந்து அவனது உடலை மூட முயன்றோம்.

அவன் உடல் முழுவதும் எரிந்துகொண்டிருந்தது. என் மீது தண்ணீரை ஊற்றுங்கள் என்று அமர்நாத் கூறினான். ஆனால் நாங்கள் அதைச் செய்யவில்லை. உடனடியாக அவனது வீட்டிற்குத் தகவல் தெரிவித்தோம். அவர்கள் வரும்வரை அவன் எங்களுடன் பேசிகொண்டிருந்தான்.

ஆம்புலன்ஸ் வந்த பிறகு அவனுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. ஆனால் அவனது உடலில் அப்போது 90 சதவீதம் தீக் காயங்கள் ஏற்பட்டிருந்தன,” என்று சம்பவம் குறித்து மிரட்சியுடன் விவரிக்கிறார் ராமமூர்த்தி ரெட்டி.

சம்பவ இடத்திற்குத் தாங்கள் வந்தபோது அங்கே அமர்நாத் மட்டுமே இருந்ததாகவும், அவனது உடலில் இருந்த தீ அருகிலிருந்த தானிய மூட்டைகளிலும் பரவியது என்றும் ராமமூர்த்தி குறிப்பிடுகிறார்.

தீவிரமடைந்திருக்கும் விசாரணை

இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேஸ்வர் உயர் சாதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அதேபோல் உயிரிழந்த அமர்நாத் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுவதால், இந்த வழக்கு அரசியல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலை சம்பவம், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என, ஆந்திராவின் எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

“இந்த அரசில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பில்லை,” என்று தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அங்கனி சத்யபிரசாத் கூறியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி வெங்கடேஸ்வரை தீவிரமாக தேடி வருகிறோம். அவர் விரைவில் கைது செய்யப்படுவார்,” என்று டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் கிராமத்தில் நிலவும் பதற்றம்

உயிரிழந்துள்ள சிறுவன் அமர்நாத்தின் சொந்த ஊரான ராஜவொலு கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட உப்பல்ல வரி பாலம் கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மோப்பிதேவி வெங்கட்ரமனா, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தைச் சந்திக்க வந்தபோது அங்கு பதற்றம் அதிகரித்தது. இதை எதிர்த்து தெலுங்கு தேச கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேஸ்வரின் குடும்பம், அந்தப் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் குடிசையைக் காலி செய்துவிட்டு போய்விட்டதாகத் தெரிய வருகிறது. அவர்களைத் தொடர்புகொள்ள பிபிசி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version