தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கக்கூடும்?
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஜூலை நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். செந்தில் பாலாஜியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல் ஆஜரானார்.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு அளித்ததை எதிர்த்து முதலில் துஷார் மேத்தா வாதிட்டார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41 ஏ-வின் கீழ் நோட்டீஸ் வழங்காமல் கைதுசெய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என செந்தில் பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தில் வாதிட்டதை சுட்டிக்காட்டிய துஷார் மேத்தா, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதைத் தடைசெய்யும் சட்டத்தின் கீழ் வரும் நடைமுறைகளுக்கு 41 – ஏ பிரிவு பொருந்தாது என விஜய் மதன்லால் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், செந்தில் பாலாஜி தரப்பின் ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றதே சட்டவிரோதமானது என்றும் துஷார் மேத்தா வாதிட்டார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனு சரியானது என இன்னும் உத்தரவிடவில்லை என்றும் மனுவை விசாரணைக்கு ஏற்றதாலேயே, அது சரியானது என உயர்நீதிமன்றம் முடிவுசெய்ததாகாது என்றும் கூறினர்.
சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனு சரியானது என ஏற்று தீர்ப்பளித்ததாகக் கருதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியுமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் மேலும் சில வழக்குகளைச் சுட்டிக்காட்டி, துஷார் மேத்தா ஆட்சேபம் எழுப்பியபோது, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியிருப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும்போது, அங்கே இந்த வழக்குகளை அமலாக்கத் துறைச் சுட்டிக்காட்டலாம் என நீதிபதிகள் கூறினர்.
அடுத்ததாக, செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டதன் மூலம், அமலாக்கத் துறையின் காவலில் அவரை அனுப்பியதே அர்த்தமற்றதாகிவிட்டது எனக் கூறினார் துஷார் மேத்தா.
கைது செய்யப்பட்டு பதினைந்து நாட்களுக்குப் பிறகு போலீஸ் காவலைக் கோர முடியாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்த நாட்கள் கழிந்த பிறகே பதினைந்து நாட்களைக் கணக்கிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்றும் கோரினார்.
இந்த விவகாரமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றம் ஏதாவது தவறிழைத்தால் அப்போது நாங்கள் தலையிடுகிறோம் என்று தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை முடிவடைந்து, அதற்குப் பிந்தைய கண்காணிப்பில் இருப்பதாகக் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், “ஆட்கொணர்வு மனுவை ஏற்கலாமா, மருத்துவ சிகிச்சையில் உள்ள நாட்களை கைது செய்யப்பட்ட நாட்களாக கருதாமல் இருக்க வேண்டுமா ஆகிய விவகாரங்களை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 22ஆம் தேதி விசாரிக்கிறது.
ஆகவே இந்த மனுவை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதைக் காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தள்ளிவைக்கக் கோரக்கூடாது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் கூறப்பட்ட விஷயங்களோ, உச்ச நீதிமன்றம் தற்போது விவாதத்தின் போது தெரிவித்த கருத்துகளோ அந்த வழக்கின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது. தகுதியின் அடிப்படையிலேயே அந்த வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி
தமிழ்நாட்டின் மின்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவர் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தபோது, பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாரில் ஜூன் 13ஆம் தேதியன்று அமலாக்கத் துறை கைதுசெய்தது.
அவர் கைதுசெய்யப்பட்ட விதத்தை எதிர்த்தும் அவரைத் தனியார் மருத்துவமனையான காவிரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமென்று கோரியும் அவரது குடும்பத்தினர் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது. ஆனால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற ஒப்புக் கொண்டது.
ஜூன் 13ஆம் தேதியன்று செந்தில் பாலாஜியின் வீடு அலுவலகங்களில் நடந்த சோதனைக்குப் பிறகு அவரைக் கைது செய்ததாக அறிவித்தது அமலாக்கத் துறை. 2011-16ல்அ.தி.மு.க. ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் போக்குவரத்துத் துறையில் பலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முறைகேடுகள் இருக்கலாம் எனத் தோன்றுவதால், புதிதாக விசாரணை நடத்த கடந்த நவம்பரில் உத்தரவிட்டது.
அமலாக்கத் துறையின் விசாரணைக்கும் தடை விதித்தது. இதையடுத்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைக்குத் தடை விதித்தது. ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கை விசாரிக்க அனுமதியும் அளித்தது.
செந்தில் பாலாஜியின் உடல்நிலை
அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்ட பிறகு தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறிய செந்தில் பாலாஜி முதலில் அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்குப் பிறகு நீதிமன்ற உத்தரவைப் பெற்று காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவரது இதயத்தில் இருந்த அடைப்புகளுக்கு இன்று காலை நான்கு மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது தொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு நான்கு வால்வுகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அறுவை சிகிச்சையை மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.ஆர். ரகுராம் மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவரது உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் பல்வேறு நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு அவரைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக என்ன?
“அறுவை சிகிச்சையை காரணம் காட்டி அவர் மேலும் சில மாதங்கள் ஓய்வைக் கோரலாம். அதற்குப் பிறகு கைதானாலும்கூட, பிணையில் வெளிவந்த பிறகு அவர் அமைச்சராகவே தொடர முடியும்.
அமலாக்கத் துறை வழக்குகளை நடத்தும் விதத்தைப் பார்க்கும்போது, இந்த வழக்கு அவ்வளவு சீக்கிரம் முடியாது.
அதுவரை அவரது அரசியல் எதிர்காலத்திற்குப் பாதிப்பில்லை. அரசியல் ரீதியாகப் பார்த்தால், கட்சியும் மு.க. ஸ்டாலினும் அவர் பின்னால் இருக்கும்வரை, அவருக்கு பாதிப்பு இருக்காது.
கட்சி தன்னை கைவிடும்வகையில் செந்தில் பாலாஜி நடந்துகொள்ளாதவரை இது நீடிக்கும்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கின் விசாரணை மீண்டும் நாளை சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெறவுள்ளது.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்தும் அவர் மருத்துவமனையில் இருந்த நாட்களை கைதுசெய்யப்பட்ட நாட்களாக கருத வேண்டுமா என்பது குறித்தும் நாளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தும்.