கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் சிறுமியின் உடலின் சில இடங்களில் சிகரெட்டினால் சூடுவைத்த சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (22) நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சிறுமியை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸாரால் பெறப்பட்ட சட்ட வைத்திய அறிக்கைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொண்டு, சிறுமியை அவரது தாயின் பராமரிப்பில் வைத்தியசாலையில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட வகுப்பு ஆசிரியர் சிறுமியை வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் அழைத்துச்சென்றார்.
இதன்படி, சிறுமியை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, சிறுமி எட்டு தடவைகள் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.