பழனி கோவிலில் “இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி” என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஆனால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பான்மை கோவில்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்து கோவில்களில் வேறு மதத்தினரை அனுமதிக்கக்கூடாதா? அவர்கள் கோவில்களுக்கு வருவது குறித்து நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது?

தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்திய மாநிலங்களில் இருந்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் அங்கு வைக்கப்பட்ட “இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி” என்ற பெயர்ப்பலகை சமூக ஊடகங்களில் பரவியது. ஆனால், இது முன்பு வைக்கப்பட்டிருந்த பலகைதான் என்றும், இந்து கோவில்களில் காலங்காலமாக இது கடைபிடிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டன.

இதைத் தொடர்ந்து இந்து கோவில்களில் வேறு மதத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுவது பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும், புகழ்பெற்ற பழைமையான கோவில்களில் வேறு மதத்தினருக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

பழனி கோவிலில் அறிவிப்புப் பலகை பிரச்னை ஏன் வந்தது?

பழனி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல் என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம், சென்னையிலிருந்து வந்திருந்த அவரது உறவினர்கள் பழனி மலைக்கோவிலைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆகையால், அவர்களை சாகுல் பழனி மலை அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு டிக்கெட் எடுக்கச் சென்றபோது, வேறு மதத்தினர் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு, “நீங்கள் அறிவிப்புப் பலகை வைத்திருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம். சுற்றுலா தலம்தானே, ஏன் அனுமதிக்கவில்லை,” என சாகுல் அதிகாரிகளிடம் சாகுல் கேட்டதற்கு, அதிகாரிகள், “இது சுற்றுலா தலம் அல்ல, வழிபாட்டுத் தலம்” என்று கூறியுள்ளனர்.

இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மின் இழுவை ரயில் நிலையத்தில் குவிந்ததால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மலை அடிவாரப் பகுதிக்கு வந்த போலீசார் இந்து அமைப்பினரை சமாதானம் செய்ததோடு, மலைக் கோவிலுக்குச் செல்ல வந்த மாற்று மதத்தினரை அனுமதிக்க முடியாது எனவும் திருப்பி அனுப்பினர்.

கும்பாபிஷேகத்திற்கு முன்பு வரை இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்புப் பலகை இருந்த நிலையில், பராமரிப்புப் பணிகளுக்காக அந்தப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

பிறகு இந்தப் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பழனி கோவில் நிர்வாகம், வேறு மதத்தினர் யாரும் உள்ளே வரக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையை மீண்டும் வைத்தனர்.

இந்நிலையில், பழனி கோவிலின் புனிதம், பாதுகாப்பு கருதி, மின் இழுவை ரயில், ரோப் கார், பட்டி வழிப்பாதை ஆகியவற்றில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் இந்து அல்லாதோர் மற்றும் வேறு மதத்தினர் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்புப் பலகையை உடனடியாக கோவில் நிர்வாகம் வைக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்த நிலையில், மீண்டும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.

‘மெக்காவில் எப்படியோ அப்படியே இந்து கோவில்களிலும்…’

விஷ்வ இந்து பரிஷத்தின் திருக்கோவில் திருமடம் அமைப்பின் மாநில அமைப்பாளரான அடிவாரம் செந்தில் பிபிசி தமிழிடம் இதுகுறித்துப் பேசியபோது, “அனைத்து மத வழிபாட்டு தளங்களிலும், அந்தந்த மதத்தினருக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. பழனி கோவில், சுற்றுலாத் தலம் இல்லை, அங்கு சாமிக்கு அபிஷேகம் எப்படி செய்கிறார்கள் என்பதையெல்லாம் வேறு மதத்தினர் பார்க்கத் தேவையில்லை,” என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசியவர், “மெக்காவில் எப்படி இஸ்லாமியரை தவிர வேறு மதத்தினர் செல்ல முடியாதோ, அதே போலத்தான் இந்து கோவில்களிலும். வழிபாட்டுத் தளங்களைக் காட்சிப் பொருளாகப் பார்க்கக்கூடாது. இந்து கோவில்களுக்குள் பர்தா அணிந்து செல்ல அனுமதி இல்லை. அவர்களுடைய வழிபாட்டுத் தளத்திலேயே பெண்களை விடாதபோது, இந்து கோவில்கள் எப்படி அனுமதிக்க முடியும்?” என்றும் செந்தில் கேள்வியெழுப்புகிறார்.

கோவிலுக்குள் நாங்கள் பக்தியோடு செல்லும்போது, சுற்றிப் பார்க்க வந்ததாகச் சொல்வது வேதனை அளிப்பதாகக் கூறும் செந்தில், அவர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது எந்தவிதத்தில் தவறு என்றும் கேள்வியெழுப்புகிறார்.

இந்து சமய அறநிலையத்துறை என்ன சொல்கிறது?

பழனி கோவில் விவகாரம் குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கதில், “பழனி முருகன் கோவில் இந்துக்களின் வழிபாட்டுத் தலம். அது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்கள் கோவிலுக்குள் செல்ல எத்தனிக்கிறார்கள்.

அறநிலையத்துறை இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லையென்ற அறிவிப்புப் பலகையை வைத்துவிட்டு, பிறகு மிரட்டலுக்குப் பயந்து அகற்றியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற அறிவிப்புப் பலகை அனைத்து கோவில்களிலும் வழக்கமான ஒன்றுதான். பழனியைப் போர்க்களமாக்க முயலும் சேகர் பாபுவின் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(ஜூன் 25) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பழனி கோவிலில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்தவர், ‘இந்துக்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இல்லை. இந்து கோவில்களின் வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டு வழிபட வருவதற்குச் சம்மதம் தெரிவித்தால், எந்த மதத்தினராக இருந்தாலும் கோவிலில் வழிபாடு மேற்கொள்ளலாம். அதற்குத் தடை ஏதுமில்லை,” என்று தெரிவித்தார்.

“ஒரு சில மத அடையாளங்களோடு வரும்போது இதுபோன்ற பிரச்னைகள் எழுகின்றன. அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்வதால், இப்படி பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. திராவிட மாடலை பொறுத்தவரை, அனைவரும் ஒன்றிணைந்து, சகோதரர்களைப் போல் வாழ வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு,” என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

இந்து கோவிலுக்குள் வேறு மதத்தினர் நுழைய அனுமதிக்கும் நீதிமன்ற தீர்ப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கில், வேறு மதத்தைச் சேர்ந்த எவரும் இந்து கடவுளை நம்பினால், கோவில் வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாலில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது, இந்துக்கள் அல்லாதோரை கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீதிபதிகள் இந்தத் தீர்பை வழங்கினர்.

அதில், வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்ட இந்து கடவுளை நம்புவதைத் தடுக்கவோ, கோவிலுக்குள் நுழைவதைத் தடுக்கவோ முடியாது என்றும் கூறப்பட்டது.

பிறப்பால் கிறிஸ்தவரான டாக்டர்.கே.ஜே.யேசுதாஸின் பக்திப் பாடல்கள் பல்வேறு இந்துக் கடவுள்களின் கோவில்களில் எந்தத் தடையும் இல்லாமல் இசைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “நாகூர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம் போன்றவற்றில் ஏராளமான இந்துக்கள் வழிபடுகின்றனர்,” என்றும் குறிப்பிட்டு, அந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கினர்.

இந்து கோவில்களுக்கு சொத்துகளை எழுதி வைத்து முஸ்லிம் மன்னர்கள்

பல இந்து கோவில்களுக்கு நிறைய சொத்துகள் திப்பு சுல்தான், ஹைதர் அலி காலத்தில் வழங்கப்பட்டுள்ளன என்று கூறும் தொல்லியல் ஆய்வாளர் முனைவர்.ஜெகதீசன், “பேரூர் கோவிலில் தீவட்டிச்சலாம் என்ற வழிபாட்டை திப்புசுல்தான்தான் உருவாக்கியதாக வரலாறு உண்டு. இன்று வரை அது நடைமுறையிலும் உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆட்சியராக இருந்த வில்லியம் ஹாரோ, பவானி சங்கமேஷ்வரர் கோவிலுக்கு யானை தந்தத்தால் ஆன ஊஞ்சலை கொடுத்துள்ளார்,” என்று கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, அனைத்துக் கோவில்களிலும் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி என்று சுதந்திரத்திற்கு முன்பு அறிவிப்புப் பலகை வைக்கப்படவில்லை என்றும் கூறுகிறார் தொல்லியல் ஆய்வாளர் முனைவர். ஜெகதீசன்.

அதோடு, கிராமப்புற கோவில்களில் இஸ்லாமியர்களும் காணிக்கை கொடுத்து வருவது, இன்று வரை வாடிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்தார் ஜெகதீசன்.

பள்ளிவாசல்களில் வேறு மதத்தினருக்கு அனுமதி உண்டா?

இந்த விவாதம் குறித்து ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஹக்கீம் பிபிசி தமிழிடம் பேசும்போது, “அனைத்து வழிபாட்டுத் தளங்களும் புனிதமானவை. அவற்றுடைய மாண்பைக் கெடுக்கும் வகையில் யாரும் நடந்துகொள்ளக்கூடாது,” என்று தெரிவித்தார்.

மெக்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் இஸ்லாமியர் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறும் ஹக்கீம், “சில இடங்களில் பழைமைவாதிகளால் பிரச்னை இருக்கிறது என்றாலும், மெக்கா தவிர்த்து மற்ற பள்ளி வாசல்களில் அனைத்து மதத்தினரும் அனுமதி உண்டு” என்று கூறினார்.

அதோடு, “இந்து கோவில்களில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மந்திரித்துக்கொள்வதும், தாயத்து கட்டுவதும், அதேபோன்று பள்ளிவாசல்களிலும் வேறு மதத்தினர் மந்திரித்து, தாயத்து கட்டுவதும் காலம், காலமாய் நடந்து வருகிறது. வழிபாட்டுத் தளங்களின் சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு வழிபட வேண்டும் என்பதே இங்கு முக்கியம்,” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஹக்கீம்.

இந்த பிரச்னைகள் கிறிஸ்தவ ஆலயங்களில் வருவதில்லை. வேறு மதத்தினர் கிறிஸ்தவ ஆலயங்களுக்குள் செல்ல எந்தவித தடையும் விதிக்கப்படுவதில்லை. அதுகுறித்து பாதிரியார் டே.வி. கருணாகரன் பேசும்போது, “கிறிஸ்தவத்தின் கொள்கையே அனைவரிடமும் அன்பு காட்டுவதுதான் என்பதால் யாரையும் ஒதுக்குவதில்லை,” என்று கூறினார்.

“தேவாலயத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். பிரார்த்தனையில் கலந்துகொள்ளலாம். மத நல்லிணக்கஹ்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து மதத்தினரோடும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அனைத்து சமய நண்பர்களுடன் நட்புறவு, தேசிய ஒற்றுமையை மையமாகக்கொண்டு , அனைவருக்கும் உதவுவதோடு, மற்ற மதத்தினரைக் குறை சொல்லாமல், அந்த மதத்திற்கு உரிய மரியாதையைக் கொடுப்பதோடு, புனிதத்தன்மை கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்தார்.

கோவிலுக்கு ஏன் வரவேண்டும் எனக் கேள்வியெழுப்பும் இந்து முன்னணி

ஆனால், கோவிலுக்குள் போகிறவர்கள் திருநீறு வைப்பார்களா, சந்தனம் வைத்துக்கொள்வாகளா என்று கேள்வி எழுப்புகிறார் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, “கடந்த வாரம் இஸ்லாமிய குடும்பத்தினர் சுற்றுலா என்ற பெயரில் பழனி கோவிலுக்கு வந்துள்ளனர். அங்கே போகவேண்டிய தேவை இல்லையே? மசூதிக்குள் வழிபாடு நடத்த பெண்களை அனுமதித்துவிடுவார்களா?” என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.

மேற்கொண்டு பேசியவர், “கடந்த வாரம் வந்த இஸ்லாமிய நபர், வேறு மதத்தினர் வரக்கூடாது என்று பெயர்ப்பலகை வைத்திருந்தால் வந்திருக்க மாட்டேன் என்கிறார். அதிகாரிகள் ஏற்கெனவே இருந்த பெயர்ப்பலகையை எடுத்ததால்தான் பிரச்னை வந்தது,” என்று கூறினார்.

இந்த சர்ச்சை குறித்துப் பேசிய சமூக ஆர்வலர் ஸ்ரீகுமார், “கோவிலின் நடைமுறை சட்டங்களைக் கடைபிடித்துத்தான் அனைவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். அதேநேரம், வெளிநாட்டினரை மதம் பார்க்காமல், கோவிலுக்குள் அனுமதிக்கும் இந்து சமய அறநிலையத்துறை வேறு மதத்தினரையும் கோவிலின் பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு அனுமதிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்,” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version