விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தில் நிலவும் சந்தேகங்களை அவ்வப்போது பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர் இன்னும் உயிரோடு இருக்கின்றார் என அண்மையில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்  கருத்துத் தெரிவித்து பலத்த சர்ச்சைகளை உருவாக்கினார்.

பிரபாகரன் தமீழீழம் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த  தகவல் இந்திய –இலங்கை அரசில் வட்டாரத்தில் பலத்த விமர்சனங்களையும் கண்டனங்களையும் உருவாக்கி விட்டிருந்தது.  அதே போன்று சந்தேகங்களையும் உருவாக்க தவறவில்லை.

அதற்குப் பிரதான காரணம் இலங்கை இராணுவமோ அல்லது அரசாங்கமோ பிரபாகரனின்  மரண சான்றிதழையும் பிரேத பரிசோதனை அறிக்கையையும் இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை.

ஆகவே பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா, அல்லது இறந்து விட்டாரா என்ற கேள்வி இன்று பலர் மத்தியில் உள்ளது.

எனினும் விடுதலை புலிகள் இயக்கம் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருப்பதால் அது குறித்து கேள்விகளை எழுப்பவும் பொது வெளியில் கதைக்கவும் பலரும் தயங்கி வருகின்றனர்.

பிரபாகரன் இறந்து 14 வருடங்கள் கடந்தும் அவரது மரபணு பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து

தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக ஊடகவியலாளர் மிதுன் ஜெயவர்தன என்பவர்  விடுத்திருந்த கோரிக்கையும் தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பதால், வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தில் நிலவும் சந்தேகங்கள் வலுத்து வருகின்றன.

மேற்படி ஊடகவியலாளர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை கேட்டே விண்ணப்பம் மேற்கொண்டிருந்தார்.

அதன் படி, பிரபாகரனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, DNA பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தது பிரபாகரன் என உறுதி செய்வதற்கு யாரிடமிருந்து DNA மாதிரிகள் பெறப்பட்டன? என்பது தொடர்பான தகவல்களை வழங்கக்கோரி இந்த தகவலறியும் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்,   பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகத்துக்கு தான் இந்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

எனினும் “தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்தத் தகவல்களை வழங்கினால் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று குறிப்பிட்டு இலங்கை இராணுவமும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் ஊடகவியலாளரின் தகவல் கோரிக்கையை நிராகரித்துள்ளன.

இலங்கை தகவலறியும் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாக  ஊடகவியலாளர் மிதுன் தெரிவித்தார்.

இந்த செய்திகள், பிரபாகரனின் மரணம் தொடர்பில் மீண்டும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன.

இது தொடர்பில் தற்போது அரசியல் பிரமுகர்களும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என பிரபாகரனின் நெருங்கிய உறவினராக முன்னாள் எம்.பி.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிரபாகரன் இறந்ததாகக் கூறப்படும் 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் மரபணு பரிசோதனைகளை நடத்துவதற்கான வசதிகளே இல்லை.

அதே வேளை பிரபாகரனின் தாய் மற்றும் தந்தை இருவருமே அரசாங்கத்தின் பாதுகாப்பிலேயே இருந்தனர். மூன்று நாட்களுக்குப்பின்னரே விடுவிக்கப்பட்டனர்.

அப்படியானால் இறந்தது பிரபாகரன் தானா என்பதை உறுதி செய்ய அவர்களிடம் இரத்த மாதிரிகள் பெறப்பட்டனவா என்பது குறித்து எமக்குத் தெரியாது.

ஏனென்றால் யாரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டன என்பது குறித்து அரசாங்கம் ஒன்றுமே கூறியிருக்கவில்லை என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதே வேளை பிரபாகரனின்  சகோதரர் ஒருவர் டென்மார்க்கில் வசித்து வருகிறார். அவரது இரு சகோதரிகளும் கனடா மற்றும் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களிடமும் மரபணு பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவில்லையென தெரிய வருகின்றது.

ஆகவே விடுதலை புலிகளின் தலைவரின் மரணத்தில் ஒளிந்துள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லையென்றே பலரும் கூறுகின்றனர்.

மரணம் ஒன்று சம்பவித்தால் அவ்விடத்துக்கு நீதிமான் ஒருவர் வருகை தருவது அவசியம். மேலும் சட்ட வைத்திய நிபுணர் ஒருவராலேயே உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

பிரபாகரன் விடயத்தில் இவை ஒன்றுமே இடம்பெறவில்லையே என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்புகிறார்.

இவை நியாயமான கேள்விகளாகவே உள்ளன. ஆனால் அரசாங்கத் தரப்பிடமிருந்து எந்த பதில்களும் இதற்குக் கிடைக்கவில்லை.

சட்டரீதியாக தகவல்களை பெறுவதற்கான அணுமுறைகளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது. அப்படியானால் பிரபாகரனின் மரணம் தொடர்பில் ஏன் அரசாங்கம் மெளனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயமானதாகவே உள்ளது.

இலங்கையில் வாழ்ந்து வரக் கூடிய சிங்கள மக்களும்  இந்த கேள்விகளை அரசாங்கத்திடம் எழுப்புதல் காலத்தின் தேவையாக உள்ளது.

பிரபாகரன் இறந்து விட்டதாக வந்த தகவல்களின் பின்னர் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பரிமாறி, யுத்த வெற்றி நாயகர்களாக அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர், இராணுவ வீரர்களை கடவுளர்களாக சித்திரித்து கொண்டாடிய அந்த மக்களுக்கு இந்த சம்பத்தின் பின்னணி தெரியத்தானே வேண்டும்?

உலகின் மிக மோசமான ஒரு  தீவிரவாத இயக்கத்தை அழித்து விட்டோம் என இலங்கை சர்வதேசத்துக்கும் அறிவித்தப் பிறகு, பயங்கரவாதத்தை எவ்வாறு தோற்கடிப்பது என சில நாடுகள் இலங்கை இராணுவத்தினரை அழைத்து வகுப்புகள் நடத்த எடுக்க சொன்னதையும் எப்படி மறக்க முடியும்?

பயங்கரவாதத்தை எப்படி அழித்தோம் என்றும் கூறும் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் அதன் தலைவரை யுத்தத்தில் வெற்றி கொண்டதை சர்வதேசத்துக்கும் காட்டியது.

அப்படியானால் அவர் இறந்த விடயத்தை சட்டரீதியான ஆவணத்தின்  மூலம் ஏன் நிரூபிக்க தயங்குகின்றது ? இதன் பின்னணியில் நிலவும் மர்மங்கள் என்ன?

எதை அடிப்படையாகக் கொண்டு நெடுமாறன் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி பிரபாகரன் உயிருடன் இருப்பதாக் கூறுகின்றார்?

அப்படியானால் பிரபாகரன் இறந்தமை உறுதி செய்யப்படவில்லையா? அதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா?

இப்படி பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடையாக இருக்கப்போவது வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இறப்பு சான்றிதலும் மட்டும ! இதை எப்போது அரசாங்கம் வெளிப்படுத்தப்போகின்றது?

Share.
Leave A Reply

Exit mobile version