பிரான்சின் பாரிஸ் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரே நகரில் காரில் சென்ற 17 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறி, போலீசாரின் உத்தரவை மீறி காரை இயக்க முயற்சித்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட சிறுவனின் பெயர் நிஹெல் என தெரியவந்துள்ளது. சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நான்டெர்ரே நகரில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது.
கடந்த 5 நாட்களாக நிகழ்ந்த இந்த போராட்டத்தின்போது, ஏராளமான வாகனங்கள், அரசு கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. வன்முறையை ஒடுக்க பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சில இடங்களில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. முக்கிய நகரங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
வன்முறை தொடர்பாக 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நிஹலின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது.
நிஹலின் உடல் நான்டெர்ரே நகரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டு தொழுகை செய்யப்பட்டது. பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நான்டெர்ரேயில் உள்ள ஒரு மலை உச்சியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இதில், நிஹெலின் தாயார் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். ஊர்வலம் வந்தபோது நூற்றுக்கணக்கானோர் சாலையோரம் நின்று அஞ்சலி செலுத்தினர்.
கல்லறை பகுதியில் பத்திரிக்கையாளர்கள் தடை செய்யப்பட்டனர். சில பத்திரிகையாளர்கள் செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர்களை வெளியேற்றினர்.
நிஹல் இறுதிச்சடங்கின் போது வன்முறை அதிகரிக்கலாம் என்பதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.