வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இன்று (05) காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருணாகல் வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34வயதுடைய குறித்த பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச்சென்று இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் வன்னி இராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரர் ஒருவருக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. எனினும் சில வாரங்களாக குறித்த இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த குறித்த குடும்ப பெண் அவரை தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் குறித்த இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

குறித்த பெண்ணிக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version