முல்லைத்தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின.
முல்லைத்தீவு நீதவான்(நீதிபதி) முன்னிலையில் இன்று முற்பகல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக கடந்த 29ஆம் தேதியன்று ஒரு குழி தோண்டப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் மனித எச்சங்கள் மாத்திரமன்றி, ஆடைகள் சிலவற்றையும் காணக்கூடியதாக இருந்தது என அந்த இடத்திலிருந்தவர்கள் கூறினர்.
விளம்பரம்
வீதியோரத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து மனித எச்சங்கள், பெண்களின் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆடைகளில் பெண்களின் உள்ளாடைகள், விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த உடைகள் காணப்பட்டதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று குறித்த பகுதி தோண்டப்பட்டதுடன், அதிலிருந்த எலும்பு எச்சங்களும் ஆடைகளும் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த எச்சங்கள் மூலம் என்ன தெரிய வந்துள்ளது?
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் புதைகுழி எப்படி வந்தது?
குறித்த மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டது.
பாதுகாப்பு பிரிவினர், ரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், நிலஅளவை திணைக்கள அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், நீர் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், தொலைபேசி நிறுவன அதிகாரிகள், மின்சார சபை ஊழியர்கள் எனப் பலரும் இந்த இடத்திற்கு இன்று வந்திருந்தனர்.
புதைகுழி கண்டறியப்பட்ட நேரத்தில் அங்கு நேரில் கண்டது குறித்து நம்மிடம் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவரித்தபோது, “அந்த இடத்தில் ஒன்று இரண்டு பேர் இல்லை. அதற்கும் கூடுதலானோரின் எலும்பு எச்சங்கள் காணப்படுவதாக” கூறினார்.
மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
“ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டதை அவதானித்து, மக்கள் கவலையடைந்திருந்தார்கள். அது விடுதலைப் புலிகளுடையது என்ற உறுதிப்பாட்டுடன் இருக்கின்றோம்.
இறுதி யுத்தத்தின்போது 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் வட்டுவால் பகுதியில் சரணடைந்த ஆட்களாக இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது,” எனவும் தெரிவிக்கின்றார் துரைராசா ரவிகரன்.
இன்று, புதைகுழி அகழ்வு நடந்த இடத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் வருகை தந்திருந்தது அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்த சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரைப் பல ஆண்டுகளாகத் தேடி வரும் மரியசுரேஷ் ஈஸ்வரி பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
”தொடர்ந்து 14 ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறோம். ராணுவத்திடமும் இந்த அரசிடமும் நம்பி ஒப்படைத்த எமது உறவுகள் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இன்று வரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்தப் புதைகுழி மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதைகுழியில் பெண் போராளிகளின் சீருடைகள் கிடைத்ததாகக் கூறுகிறார்கள். இந்தப் பிரதேசம் 24 ஆண்டுகளாக மக்கள் நடமாட்டமின்றிக் காணப்பட்டது. அப்படியிருக்க, இந்தப் புதைகுழி எப்படி வந்தது என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்,” என்கிறார் மரியசுரேஷ் ஈஸ்வரி.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பிரதேசத்தில் இந்தப் புதைகுழி எப்படி வந்தது, என்ற கேள்விகளோடு இன்று இந்த இடத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
“இறுதி யுத்தத்தில் வட்டுவாலில் ஏற்றப்பட்ட எமது உறவுகளோடு பின்னர் எந்தத் தொடர்புகளும் இல்லை. எங்கு கொண்டு போனார்கள் என்றும் தெரியவில்லை. அரசாங்கத்தின் எந்தப் பதிலும் தெளிவுபடுத்தவில்லை,” என்று தனது கணவரை தேடும் மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம்
இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பெரிய விஹாரைகளுக்குக் கீழேயும் உடல்கள் இருக்கக்கூடும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ராணுவத்திடம் சரணடைந்த ஆட்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்றைக்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று கூறுகிறார் துரைராசா ரவிகரன்.
இந்தப் புதைகுழி வெளியே தெரிய வந்த நேரத்தில் நேரில் பார்த்ததை விவரித்தபோது, விடுதலைப் புலிகளின் ஆடைகள் என்பது தம்மால் உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்ததாக ரவிகரன் குறிப்பிட்டார்.
“விடுதலைப் புலிகளின் ஆடை என்பதை என்னால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது. பச்சை நிற உடுப்பு. ராணுவ ஆடையிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.
பெண்களின் ஆடைகளும் காணப்பட்டன. குறிப்பாக பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டன,” என்றும் அவர் விளக்கினார்.
தற்போது நடந்துவரும் அகழ்வில் கிடைத்துள்ள எச்சங்கள் குறித்துப் பேசியவர், ”இந்த பிரதேசமானது 1984ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சூனிய பிரதேசமாக(இந்தக் காலகட்டத்தில் மக்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ராணுவம் மாத்திரமே பயன்படுத்தியது) ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு சரணடைந்தவர்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து, கொன்று விட்டு, அல்லது அடித்து விட்டு புதைகுழி வெட்டிப் புதைத்துள்ளனர்,” என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
சர்வதேச நியதிகள் பின்பற்றப்படவில்லையா?
ஏனென்றால், இந்த இடத்தில் அப்போது மக்கள் இருக்கவில்லை. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இறுதி யுத்தம் இடம்பெற்ற இடங்களில் மக்கள் சரணடைந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள விஹாரைகளின் கீழும் சடலங்கள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.
“வட்டுவால் பகுதியில் பெரிய விஹாரை கட்டப்பட்டுள்ளது. அதேபோல கேப்பாபிலவு பகுதியில் பெரிய விஹாரை கட்டப்பட்டுள்ளது.
இந்த பெரிய விஹாரைகளின் கீழ் ஏன் சடலங்கள் இருக்க முடியாது என்ற ஐயப்பாடு இந்த மக்கள் மத்தியில் தற்போது தோன்றுகின்றது.
உடல்களைப் புதைத்து, அதற்கு மேல் விஹாரைகளை கட்டியிருக்கலாம்,” என்ற ஐயப்பாடு காணப்படுவதாக அவர் கூறுகிறார்.
சர்வதேச நியதிகள் பின்பற்றப்படவில்லையா?
இந்த மனித புதைகுழி சர்வதேச நியதிகளுக்கு அமைவாகத் தோண்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
”இந்த அகழ்வுகள் குறித்த முறைப்படி செய்யப்படுவதாகத் தெரியவில்லை. சர்வதேச ரீதியில் இது எப்படி செய்யப்பட வேண்டும் என்ற பல நியதிகள் காணப்படுகின்றன. அது பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை.
மருத்துவர் இருக்கின்றார், ஒரு குழியை தோண்டி ஒரு சடலத்தை எடுத்து செய்கின்ற பரிசோதனைகளிலும், இவ்வாறான மனித புதைகுழியைத் தோண்டிச் செய்கின்ற பரிசோதனைகளிலும் வித்தியாசம் காணப்படுகின்றது. சர்வதேச நியதிகள் பின்பற்றப்படுவதில்லை,” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான சாட்சியங்கள் வருகின்றபோது, அது சர்வதேச நியமங்களுக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
சர்வதேச நியதிகள் பின்பற்றப்படவில்லையா?
இலங்கை ராணுவத்தின் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி தமிழ், ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் வினவியது.
”எம்மால் அப்படிக் கூற முடியாது. ஏனெனில், அதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லை. மக்கள் குற்றம் சுமத்துவதில் அர்த்தம் கிடையாது.
யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல, ராணுவத்தினரின் உடல்களும் தற்போது கிடைக்கின்றன,” என்கிறார் அவர்.
மேலும், சரியான விசாரணைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகே இது எந்த காலப்பகுதியைச் சேர்ந்த எச்சங்கள் என்பதைக் கூற முடியும் என்றார் பிரிகேடியர் ரவி ஹேரத்.
அடுத்ததாக, “இது மனித எலும்பு எச்சங்களா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.
விசாரணைகளுக்குப் பிறகே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்,” என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவிக்கின்றார்.