வெளிநாட்டுக்கு செல்வோருக்கு போலியான சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நபரொருவர் வைத்திருந்த சாரதி அனுமதிப்பத்திரம் போலியானது என பொலிஸாரினால் கண்டறியப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

அதன்படி, போலி அனுமதிப்பத்திரம் வைத்திருந்த நபரை புலனாய்வுப் பிரிவினர் விசாரித்தபோது, அந்த நபர், தனக்கு சமூக வலைத்தளமொன்றின் ஊடாக போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கியவர்களோடு தொடர்புகொள்ள கிடைத்தது எனவும், அவர்கள் போலியான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தன்னிடம் அறவிட்டார்கள் எனவும், அவர்கள் தனது வீட்டுக்கு வாகனமொன்றில் வந்து கைரேகை மற்றும் பிற ஆவணங்களை பெற்றுச் சென்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை தொடர்ந்த பொலிஸார், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை கைதுசெய்துள்ளனர்.

அதனையடுத்து, கைதான இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்கள் போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிப்பதற்காக வைத்திருந்த உபகரணங்களை கைப்பற்றவும் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து போலியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் தொடர்பிலும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version