கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர், 15 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த மகேஷ் கே.பி.நாயக் (வயது 35) என்ற நபர், திருமண தகவல் இணையதளங்களில் போலியான சுய விவரத்தை உருவாக்கி வரன் தேடி உள்ளார்.
பெண்களை கவருவதற்காக பெரும்பாலான சமயங்களில் டாக்டர், என்ஜினீயர் என பதிவிட்டுள்ளார். துமகூருவில் கிளினிக் இருப்பதாக ஒரு போலியான தகவலை பதிவிட்டு, ஒரு செவிலியரையும் நியமித்துள்ளார்.
இதை நம்பி பல பெண்கள் இவரிடம் ஏமாந்துள்ளனர். 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை 15 பெண்களை திருமணம் செய்து சில காலம் குடும்பம் நடத்திவிட்டு அவர்களின் பணம், நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் மகேஷ். அத்துடன், இந்த பெண்களுடன் குடும்பம் நடத்தி 4 குழந்தைகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவரை திருமணம் செய்து கொண்ட மைசூரைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் அளித்த புகாரைத் தொடர்ந்து மகேஷ் வசமாக சிக்கி உள்ளார்.
போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து, நேற்று துமகூருவில் வைத்து அவரை கைது செய்தனர். இதேபோல் அவரிடம் ஏமாந்த மற்றொரு பெண்ணும் புகார் அளித்துள்ளார்.