வடமாகாண மாவட்டங்களில் இருந்து நாளாந்தம் சேகரிக்கப்படும் 14,000 லீற்றர் திரவப் பால் ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை நிறுத்தி அந்த திரவப் பாலை வடக்கில் பால் தொடர்பான பொருட்களுக்கு பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் தலைமையில் அரச அதிகாரிகள் மற்றும் வடமாகாண விவசாய, கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமிய கைத்தொழில் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் பலர் மாடு மற்றும் ஆடுகளை வைத்து அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில், நாளாந்தம் கிடைக்கும் பாலில் பல்வேறு பொருட்களை தயாரிக்கும் அறிவை அவர்களுக்கு வழங்கினால், மேலும் முன்னேற்றம் அடைய வாய்ப்பு இருப்பதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.
கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி தொடர்பில் இந்தியாவுடன் ஒப்பந்தம்
இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் பால் உற்பத்திகளின் தரப்பண்பை அதிகரித்தல், பால் உற்பத்தியில் தன்னிறைவடைதல் மற்றும் சிறியளவிலான பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரித்தல் போன்ற இலக்குகளை அடைவதற்கு இணைந்து செயலாற்றுவதற்காக இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்காக வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கமைய, குறித்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.