அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகக் கூறி அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னதாக மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளுமே ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட தீர்ப்பை அளித்தனர்.
இந்நிலையில் தற்போது மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
அதேநேரத்தில், சென்னை காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: நீதிபதி சி.வி. கார்த்திகேயன்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தற்போது மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார்.
முன்னதாக, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் செந்தில் பாலாஜி கைது செல்லும் எனத் தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் தான் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த எந்தத் தடையும் கோர முடியாது எனவும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்தார்.
திடீர் நெஞ்சு வலி – காவேரி மருத்துவமனையில் சிகிச்சை
அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, ஓட்டுநர், நடத்துநர், உதவியாளர் பணி நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் சோதனையிட்ட அமலாக்கத்துறை கடந்த மாதம் 14-ம் தேதி அதிகாலை அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
அப்போது, காருக்குள்ளேயே திடீர் நெஞ்சுவலியால் அலறித் துடித்த செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
நீதிமன்ற காவலில் அவருக்கு அங்கேயே இதயத்தில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையிலேயே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓமந்தூரார் மருத்துவமனைக்கே நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியை நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம், அவரது கைதுக்கான காரணங்கள் சொல்லப்படவில்லை என்று கூறி அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
சட்டவிரோத காவலில் உள்ள செந்தில் பாலாஜியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு கடந்த மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி, அமலாக்கத்துறை ஆகிய இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜூலை 4ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் நிஷா பானுவும், பரத சக்கரவர்த்தியும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
நீதிபதி நிஷா பானு தீர்ப்பு விவரம்
செந்தில்பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும், சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் விசாரணைக் காவல் கோர அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், அமைச்சர் செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காலத்தை விசாரணைக் காவல் நாட்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தும் அவர் உத்தரவிட்டார்.
நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பு விவரம்
அமர்வின் மற்றொரு நீதிபதியான பரத சக்கரவரத்தி, மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தீர்ப்பளித்தார்.
கைதோ அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்பதோ சட்டவிரோதமாக இல்லாத பட்சத்தில் இதுபோன்ற ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கைப் பொருத்தவரை, நீதிமன்ற காவலை சட்டவிரோதமானது எனறு மனுதாரர் கோரவில்லை என்பதால் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டது முதலே மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருநாள்கூட அமலாக்கத்துறை காவலில் இருந்ததே இல்லை என்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருந்த காலத்தை விட்டுவிட்டே, அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் நாட்களைக் கணக்கிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் வரையிலான காலகட்டத்தை அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் நாட்களில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பு விவரம்
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை ஆகிய தரப்பினரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, பிற்பகலில் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
அதில், செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்த கருத்துகளைச் சுட்டிக் காட்டினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியே அமலாக்கத்துறை ஜூன் 13ஆம் தேதி செந்தில்பாலாஜியிடம் சோதனை நடத்தியது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புதான் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தது என்று நீதிபதி கார்த்திகேயன் குறிப்பிட்டார்.
மேலும், தனது தீர்ப்பில் அமலாக்கத் துறை விதிகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கப்படுகிறது எனத் தீர்ப்பளித்தார்.
செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில் அமலாக்கத் துறை ஒருவரைக் கைது செய்ய வேண்டுமென்றால் போதிய ஆதாரம் அவர்களிடம் இருக்க வேண்டும், கைது செய்யப்படும் நபர் தப்பி ஓடுவதைத் தடுப்பதற்காக மட்டுமே அவரைக் கைது செய்ய முடியும், செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கக் கோர முடியாது என்று வாதிடப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி கார்த்திகேயன், கபில் சிபில் வாதத்தில் சிறு தவறு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், “சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் 5ஆவது அத்தியாயம் சம்மன், சோதனை, கைப்பற்றுதல்கள் பற்றி விளக்குகிறது. அதில், அமலாக்கத் துறை அதிகாரிகள் எந்த இடத்துக்கும் சென்று எந்த நபரையும் சோதனையிட்டு அவர்களிடம் இருக்கும் பதிவுகளை ஆய்வு செய்வதற்கும், குற்றம் நடந்ததைப் பற்றி சரி பார்ப்பதற்கும் அல்லது அவர்களது பரிவர்த்தனை பற்றி ஆராய்வதற்கும் அனுமதி அளிக்கிறது.
இந்த தகவல் சட்டப்பிரிவு 16ல் உள்ளது. கைதுக்கான காரணமான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்தது சட்டப்பிரிவு 17 என்பது தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் தொடர்பானது. சொத்துக்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றலாம்.
கைப்பற்றப்பட்ட தகவலையும் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்று சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17 கூறுகிறது,” என்று சுட்டிக்காட்டி, செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து அவர் தீர்ப்பளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?
2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்த போது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்ட போது முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார்.
முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சுமத்தப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியது.
மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதே சமயம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டது.