ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் சந்த் பாஷா. இவர் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சபிஹா. இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது.

இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். மனைவிக்கு அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் பிறந்ததால் சந்த் பாஷாவுக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

சந்த் பாஷா அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் என குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சபிஹாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். இதனால் சபிஹா அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். மேலும் கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்வது குறித்து அவரது பெற்றோர் போலீசில் 3 முறை புகார் அளித்தனர்.

போலீசார் 3 முறையும் இவரது குடும்பத்தாரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களுக்கு ஆண் வாரிசு ஒன்று தேவை என்ற கட்டாயத்திற்கு வந்தனர்.

இதனால் சந்த் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சபிஹாவை மொட்டை மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று கைவிரல்களை உடைத்தனர். பின்னர் அந்த அறையிலேயே அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்தனர். சபிஹா கழிவறையில் தண்ணீரை குடித்து உயிர் பிழைத்து வந்தார்.

சிறிது நாட்களாக சபிஹா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் சந்த் பாஷா வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போது சபிஹாவை சிறிய அறையில் அடைத்து வைத்து கை விரல்களை உடைத்து உணவு கூட வழங்காமல் சித்ரவதை செய்தது தெரியவந்தது.

மனைவியை சித்ரவதை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து சந்த் பாஷா அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version