கருங்கடலில் உள்ள தனது துறைமுகங்கள் ஊடாக உக்ரைன் பாதுகாப்பாக தனது தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்கும் சர்வதேச உடன்படிக்கையை நீடிக்கப்போவதில்லை என ரஸ்யாஅறிவித்துள்ளது.
திங்கட்கிழமையுடன் காலாவதியாகியுள்ள இந்த உடன்படிக்கை கடந்தவருடம் ரஸ்யாஉக்ரைன் மீது போர் தொடுத்ததை தொடர்ந்து சர்வதேச அளவில் உணவுப்பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரிப்பதை தடுத்தது என்ற கருத்து காணப்படுகின்றது.
உலகில் அதிகளவு விவசாய உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் பட்டியலில் ரஸ்யாவும் உக்ரைனும் உள்ளன.
கடந்த வருடம் ஐக்கியநாடுகளும் துருக்கியும் இணைந்து முன்னெடுத்த முயற்சிகளால் உடன்படிக்கை சாத்தியமானதை தொடர்நது உக்ரைன் 33 மில்லியன் மெட்ரிக்தொன் தானியங்களை ஏற்றுமதி செய்திருந்தது.
எனினும் இந்த உடன்படிக்கையை தற்போதைக்கு பின்பற்றப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.தனது தானிய ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.
கருங்கடல் தானிய உடன்படிக்கை என்பது என்ன?
2022 பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் உலக நாடுகளில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதுடன் பணவீக்கத்தையும் அதிகரித்தது.
2021 இல் உக்ரைனும் ரஸ்யாவும் கோதுமையை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலாவதாகவும் ஐந்தாவதாகவும் காணப்பட்டன.
கடந்த வருடம் ஜூலை மாதம் உக்ரைன் கருங்கடல் ஊடாக தனது தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதில் ஐநாவும் துருக்கியும் வெற்றிகண்டன.
இத்துடன் ரஸ்யாவின் உரங்கள் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டது.
இந்த உடன்படிக்கையில் தனது ஏற்றுமதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உரிய விதத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ரஸ்யா குற்றம்சாட்டி வந்துள்ளது.
எனினும் ஒக்டோபர் 31ம் திகதி செவெஸ்டபோலில் உள்ள தனது கருங்கடல் கடல்கலங்கள் மீது ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றதாக தெரிவித்து ரஸ்யா இந்த உடன்படிக்கையிலிருந்து விலகியது.
எனினும் நவம்பர் 20 திகதி ரஸ்யாஇந்த உடன்படிக்கையில் மீண்டும் இணைந்துகொண்டது.
மார்ச் 2023 இல் மேலும் 60 நாட்கள் உடன்படிக்கையில் நீடித்திருக்க இணங்கிய ரஸ்யா மே மாதத்தில் அதனை மறுபரிசீலனை செய்தது.
எவ்வளவு தானியங்கள் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன?
இந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது முதல் கருங்கடல் பகுதியிலிருந்து 32.9 மில்லியன் தானியங்கள் கப்பல் மூலம் சென்றுள்ளன என ஐநா மதிப்பிட்டுள்ளது.
சோளம் மற்றும் கோதுமையே பெருமளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவின் தானியக்களஞ்சியம் என உக்ரைன் குறிப்பிடப்படுகின்றது ,அதன் நிலத்தில் 55வீதத்திற்கும் அதிகமானது விவசாயத்திற்குரியது.
யுத்தத்திற்கு முன்னர் உலகில் அதிகளவு கோதுமையை உற்பத்தி செய்த நாடுகளில் 9வது இடத்திலும் சோளத்தை உற்பத்தி செய்த நாடுகளில் 8 வது இடத்திலும் உக்ரைன் காணப்பட்டது.
மூன்று கண்டங்களை சேர்ந்த 45 நாடுகள் இந்த உடன்படிக்கையின் கீழ் உணவுப்பொருட்களை பெற்றுள்ளதாக ஐநாதெரிவித்துள்ளது.
கருங்கடலில் இருந்து கப்பல் ஒன்று வழமையாக 32000 தொன் பொருட்களுடன் புறப்படுவது வழமை.
சீனாவிற்கே அதிக தானியங்கள் இதுவரை சென்றுள்ளன( 7.96 தொன்) ஸ்பெயின் துருக்கி இத்தாலி நெதர்லாந்து எகிப்து ஆகிய நாடுகளிற்கும் பெருமளவு தானியங்கள் சென்றுள்ளன.