உலகமானது நகராக்கம் எனும் விருத்தியில் வானை எட்டிப் பிடிக்கும் நோக்கில் இன்று சிறிதளவும் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளாமல் கட்டுப்பாட்டை இழந்து நகர்ந்து கொண்டுள்ளது. என்னதான் உலகம் இயல்புக்கு மாறாக தன்னை விருத்தி செய்து கொண்டு நகர்ந்தாலும் அதன் பின்னணியில் மறைக்கப்பட்ட சில அவலங்களும் காணப்படுகின்றன என்று தான் கூற வேண்டும்.
உயர் மாடி கட்டிடங்களில் உல்லாசமாக சுகாதார வளத்துடன் சுதந்திர காற்றினை சுவாசித்த வண்ணம் பணம் படைத்தோர் ஒரு பக்கம் இருக்க, மறுப்பக்கம் வறுமையின் உச்சத்தில் தனது ஒவ்வொரு நாளையும் கடத்துவதற்கு இன்னல்படுகின்ற மக்கள் சமூகமும் இருக்கத்தான் செய்கின்றது.
அந்தவகையில், இலங்கையை பொருத்தமட்டில் பல்வேறு மக்கள் தங்களது அடிப்படை தேவைகளைக்கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையில் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக சேரி புற மக்களை பொருத்தவரையில் இன்றளவும் தமது அடிப்படை தேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத இக்கட்டான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சனத்தொகை வளமானது இன்றியமையாததாக காணப்படுவதோடு அதிகமான கரிசனையை கொண்டு நகர்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அண்மைய காலங்களில் வேலை வாய்ப்பு, பொதுச் சேவை, மற்றும் கல்வி போன்ற வளங்களை மையப்படுத்தி பெரும்பான்மையான மக்கள் நகரங்களை நோக்கி நகர்கின்றனர்.
அவ்வாறு நகர்கின்ற மக்கள் வீட்டு வசதியின்றி அவதியுறுகின்றனர். இந்நிலையில், சேரி குடியிருப்பானது கிராமப்புறவாழ் மக்களின் வாழ்வியலை விட பின்னடைவான சூழலையே கொண்டுள்ளது என்றே கூற வேண்டும்.
சேரி என்பது மனிதர்கள் வாழ்வதற்கான ஏதுவாய்கள் எதுவும் கொண்டிராத பகுதியாகும். இந்த சேரி குடியிருப்பானது முறையாக கட்டப்பட்ட வீடு, கழிப்பறை வசதி, வெளிச்சம், காற்றோட்டம், தண்ணீர் குழாய் வசதிகள், முறையான கழிவறை வசதிகள் என எவ்விதமான வசதிகளும் அற்ற ஒரு முறைப்படுத்தப்படாத குடியிருப்பு ஆகும். இச்சேரி குடியிருப்புகள் யாவும் நகரின் ஒதுக்குப்புறத்திலேயே அமைந்து காணப்படும்.
ஆரம்ப காலங்களில் ஒதுக்கு புறங்களை மையப்படுத்திய சேரி குடியிருப்புகள் யாவும் மிகவும் வளம் குன்றிய குடியிருப்புகளாக இருந்ததுடன் இன்றைய காலங்களில் சற்று விருத்தி அடைந்த குடியிருப்பாக மாறி உள்ளது.
இருப்பினும் இது வலுவற்ற சமூகத்தினை உருவாக்கும் ஒரு பரப்பாகவே காணப்படுகின்றது. பெரும்பாலும் கொழும்பில் பம்பலபிட்டிய, கொலன்னாவ, கம்பஹா, அவிசாவல, வெல்லம்பிட்டிய போன்ற பிரதேசங்களிலே சேரி குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றன.
கொழும்பு முழுவதிலும் வாழும் மக்களின் வீடில்லா பிரச்சினையின் தீர்வாகவே இந்த சேரி குடியிருப்புகள் அமையப்பெறுகின்றன. பெரும்பாலும் இந்த சேரி குடியிருப்பு பிரதேசங்களில் வாழும் மக்கள் வாடகை வீடுகளிலேயே வாழுகின்றனர். அதுவும் எவ்வித வசதி வாய்ப்புமற்ற வீடுகளுக்கு பணம் கொடுக்கின்றார்கள் என்பதுதான் சற்று சிரமமாக உள்ளது. இரண்டு அறைகளைக் கொண்ட மின்சாரம், குழாய் நீர் வசதி உள்ள சேரி வீட்டின் வாடகை 8,000 ரூபாவாக அங்கு வாடகை வசூலிக்கப்படுகின்றது.
சேரியில் வாழும் மக்கள் நாளுக்கு நாள் பல்வேறு வகையில் துன்பப்பட்டு தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர் என்பது கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது. இந்த சேரி குடியிருப்பில் வாழும் மக்களும் அந்த சமூகத்தினரும் பல்வேறு வகையான சமூக, பொருளாதார சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.
இந்த சேரி குடியிருப்புகளை பார்த்தோமாயின், அவற்றின் கட்டமைப்பு மிக நெருக்கமாக அடுத்தடுத்து வீடுகள் என அமைக்கப்பட்டு இருப்பதுடன் அவை மரப்பலகைகளினால் அமைக்கப்பட்டிருப்பதனால் அவ் வீடுகள் வாழ்வதற்கு ஏதுவான ஒரு வீடமைப்பாக அமைவது கிடையாது.
இச்சேரிப்புறத்தை பொருத்தவரை சுகாதார தன்மை மிகவும் கீழ் நிலையிலேயே காணப்படுகின்றது. ஏனெனில் இங்கு சுத்தமான பராமரிப்புகள் எதுவுமே காணப்படுவது கிடையாது. இவை ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றது. மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகளையும் இந்த சேரி குடியிருப்புகள் கொண்டிருப்பது கிடையாது.
சேரி குடியிருப்பை சுற்றி அவை கழிவுகளால் நிரம்பிய ஒரு கழிவு நிலமாக, பார்ப்பதற்கு சஞ்சலத்தை ஏற்படுத்தும் இடமாகவே அது காணப்படுகின்றது. அப்புறப்படுத்தப்படாத குப்பைகள் யாவும் மழைக் காலங்களில் வீதிகளில் ஒதுங்குகின்றன. மற்றும் பிரதானமாக அங்கு 13% பொதுக்கழிப்பறையை பயன்படுத்துவதோடு நீர் பற்றாக்குறையின் காரணமாக அவற்றை ஆரோக்கியமற்ற முறையில் பேணுகின்றனர். இதனால் பல தொற்று நோய்களுக்கு தொடர்ச்சியாக உள்ளாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் இப்பிரதேசங்களில் வாழும் பெரும்பான்மையான சிறுவர்களும், பெரியவர்களும் அதிகளவான நோய் தொற்றுகளுக்கு உள்ளாகுவதோடு, தோல் சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர். இவ்வாறான எவ்விதமான சுகாதார ஒழுங்கும் அற்ற இந்த சேரிப்புறங்களின் காரணமாக நோய் தொற்றுகள் அதிகரித்து அச்சமூக மக்கள் மத்தியில் மரணங்களும் அதிகரித்ததாகவே காணப்படுகின்றன.
அடுத்தபடியாக பொருளாதாரம் என்பது அடுத்த கட்ட வாழ்க்கையின் விருத்திக்கு பங்களிக்கும் என்ற வகையில் இச்சமூக மக்கள் மத்தியில் பெரும்பான்மையினர் வேலை வாய்ப்பின்றி பொருளாதார ரீதியாக அல்லல்படுபவர்களாகவே காணப்படுகின்றனர்.
அத்தோடு எதிர்கால சமூகத்தின் உயிர்நாடியாக உள்ள இந்த சிறுவர்கள் இச்சமூகத்தில் பெருவாரியாக துஷ்பிரயோகங்களுக்கு உட்படுகின்றனர் என்பது கவலைக்குரிய விடயமாகும். ஏனெனில் இங்கு நெருக்கமான வீடுகளாக இந்த சேரிப்புறம் காணப்படுவதனால், அங்கு வாழும் சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சுமார் வருடம் ஒன்றுக்கு சராசரியாக பத்தாயிரம் சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதோடு அவற்றில் 6,200 சிறுவர்கள் சேரிபுறத்தில் வாழும் சிறுவர்களாகவே காணப்படுகின்றனர் (2020 அறிக்கை)
அடுத்ததாக சேரி புற வாழ் மக்களின் மிகப்பெரிய சவாலாக இருப்பது பாதுகாப்பும் சுதந்திரமும் தான். ஏனெனில் இங்கு வாழும் மக்களிடம் வதிவிடம் சார்ந்த உரித்து இன்மையினால் அவர்கள் இந்த அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்தும் சமாளித்து வருகின்றனர்.
ஏனெனில் முறையான கட்டமைப்பற்ற வீடுகளில் இவர்கள் வாழ்வதுடன் பெரும்பாலும் கொழும்பு நகரை அண்டிய பிரதேசமாகிய புகையிரதப் பாதையின் ஒதுக்குப்புறத்திலும், கால்வாய்களின் அருகாமையிலும் குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் அம்மக்கள் தங்களுக்கு சொந்தமான ஒரு பதிவிடத்தினை கொண்டிராமல் இருப்பது அவர்களுக்கு பாதுகாப்பு குறித்த பிரச்சினையாகவே காணப்படுகின்றது.
அத்தோடு பெரும்பாலும் போதைப்பொருள் பாவனையை அதிகம் கொண்ட இடமாகவும் இந்த சேரி குடியிருப்புகள் காணப்படுகின்றன. கொழும்பு மாவட்ட பொறுத்தவரையில் அதிகமாக மேற்கத்திய கலாச்சாரத்தை அடியொட்டியதாக அங்கு வாழ் மக்களின் கலாச்சாரம் காணப்படுவதனால், போதைப் பழக்கமும் அவற்றை ஒத்திருப்பதாகவே காணப்படுகின்றது. இதனால் கொழும்பு பிரதேசத்தை பொறுத்தவரையில் அங்கு போதைப் பாவனையானது சமூக மதிப்பை தரும் என்ற நோக்கில் அதிகமாகவே உள்ளது. சேரிப்புறங்களில் வாழும் சமூகத்தினர் பெரும்பாலும் போதைக்கு அடிமையானவர்களாக காணப்படுகின்றனர்.
இங்கு வாழும் மக்களின் வீட்டு அமைப்புகள் குறுகிய ஒரு பரப்பிற்குள் அடங்குவதானால் அங்கு பெரியவருக்கும் சிறியவர்க்கும் எவ்விதமான இடைவெளிகளும் அற்ற தன்மை போதை பாவனைக்கு இலகுவான சூழலை உருவாக்கி தருகிறது. மற்றும் போதைப் பொருள் பரிமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவதற்கு ஏதுவான இடமாக அவை அமையபெற்றிருப்பதனால் அங்கு போதை பாவனையும் அதிகரித்ததாகவே காணப்படுகின்றது. குறிப்பாக 2016ம் ஆண்டு இடம்பெற்ற போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் படி 36% கொழும்பில் உள்ளன. அவற்றுள் 4% சேரிபுரத்திலிருந்தே உள்ளது.
என்னதான் அடுக்கு மாடி கட்டிடங்களால் வடிவமைக்கப்பட்ட பிரதேசமாக இந்த கொழும்புப் பிரதேசம் காணப்பட்டாலும் அங்கு பின்தங்கிய சேரி புறவாழ் மக்கள் இருப்பதுடன், இங்கு வாழும் மக்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை கருத்திற் கொண்டு கல்வி கற்க சென்றாலும் அவர்களின், வாழ்விடம் அவர்களுக்கு சவாலாக அமையப்பெறுவதுடன் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதிலும் அவை சற்று சிரமத்தை தருகின்றன எனலாம்.
கொழும்பை அண்டிய பகுதிகளில் அதிகரித்த சேரி புற குடியிருப்பு தொடர்பாக அரசும் தனியார் நிறுவனங்களும் அதிகம் கவனம் எடுத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக தொடர்ந்தும் காணப்படுகின்றது.
குறிப்பாக 1994 பொதுஜன முன்னணி ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் “ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு வீட்டை வழங்குவதற்கான நடவடிக்கை நாம் எடுப்போம் வீட்டு உரிமையை உறுதி செய்வோம், நிலுவையில் உள்ள வீட்டுக் கடன்கள் இரத்து செய்வோம்” என புனை வசனங்களை பேசி மக்களின் வாக்குகளை தம் வசம் பறித்துக் கொண்டதுடன் அது பற்றிய எவ்விதமான முயற்சிகளையும் எடுப்பதில்லை.
இவ்வாறாக பல்வேறு சிக்கலுக்கு மத்தியில் தங்கள் வாழ்நாளை கடத்துகின்ற இந்த சேரி குடியிருப்பு மக்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தி ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாக காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதுடன் அவர்களது திறன்களை வெளிப்படுத்துவதற்கான களத்தையும் வழங்குதல் வேண்டும்.
பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும், அத்தோடு நீர் குழாய் வசதிகளையும் கழிப்பறை வசதிகளையும், கழிவுகளை அகற்றுவதற்கான முறையான கழிவகற்றல் செயல்பாட்டினையும் ஆரம்பிப்பது அவசியமாகும்.
மேலும், போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள பிரதேசங்களை சிறை பிடித்து அங்கு போதைப்பொருள் பரிமாற்றம் இடம்பெறாதவாறு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படல் அவசியம். அத்தோடு பொருளாதாரம் இவர்களின் வாழ்க்கைச் சூழலை வலுவூட்டுவதற்கு பங்காற்றும் என்ற வகையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வளங்களை பெற்றுக்கொடுத்தலும் அவசியம்.
எல்லாவற்றிற்கும் முதன்மையாக இங்கு வாழும் மக்களுக்கு முறையான சாதாரணமாக வாழ்வதற்கு ஏற்ற ஒரு வீடமைப்பு திட்டத்தையும் உருவாக்கி அவர்களுக்கு வாழ்வதற்கான ஒரு சூழலை அமைத்துக் கொடுத்தல் என்பது அம் மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் மிக முக்கிய தேவைப்பாடாக காணப்படுகின்றது.
சு. ஜனுர்ஷா
ஊடக கற்கைகள் துறை
யாழ். பல்கலைக்கழகம்