குதிரைகள் எப்போதும் மனிதர்களோடு நெருங்கிப்பழகும் சமூக விலங்காகும். இதுவரை பராமரிப்பின்றி சாலைகளில் விடப்பட்ட 100 குதிரைகளை காப்பாற்றியுள்ளேன்.

மதுரை அவனியாபுரம் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகன் சண்முகசுந்தர் (வயது 24). மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. படித்துள்ள இவர், சரஸ்வதி நாடார் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் பயின்றார்.

சிறுவயது முதலே கால்நடைகள், செல்லப்பிராணிகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர் காலப்போக்கில் அதனுடன் ஒன்ற தொடங்கினார். முதலில் மகனின் நடவடிக்கைகளை பெற்றோர் வெறுத்த போதிலும் நாளடைவில் அவர்களும் மகனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். அதன் பலனாக தனது வீட்டில் நாய், கோழி உள்ளிட்டவைகளையும் வளர்த்தார்.

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பதற்கேற்ப எம்.ஏ. ஆங்கிலத்துடன் படிப்பை நிறுத்தாமல், அடுத்தகட்டமாக சட்டம் படிக்க விரும்பினார். இதற்காக சிவகங்கையில் செயல்பட்டு வரும் தனியார் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி. படிப்பில் சேர்ந்தார்.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நம்முடைய தேர்வாக இருப்பது இருசக்கர வாகனம், பேருந்து உள்ளிட்டவைதான். ஆனால் சண்முகசுந்தர் தேர்வு செய்ததோ குதிரை.

கேட்கவே சற்று வினோதமாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஆம், தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு குதிரையில் தான் பயணம் செய்து வருகிறார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பே ஆசை ஆசையாய் வாங்கி வளர்த்த குதிரையை தற்போது ஒரு வாகனமாக பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

இதுபற்றி சண்முகசுந்தர் கூறுகையில், சிறு வயதில் இருந்தே வளர்ப்பு பிராணிகளான நாய்கள், ஆடு, மாடுகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. குதிரை வளர்க்க ஆசைப்பட்டு கிடைத்த வேலைகளை பார்த்து ரூ.75 ஆயிரம் சேமித்து குதிரை ஒன்றை வாங்கி வளர்த்தேன்.

குதிரைகள் எப்போதும் மனிதர்களோடு நெருங்கிப்பழகும் சமூக விலங்காகும். அதன் மூலம் பல அனுபவங்கள் கிடைக்கின்றன. குதிரை சவாரி செய்தால் மன அழுத்தம் குறையும். மேலும் மன தைரியமும் அதிகரிக்கும். பண்டைய மன்னர்கள் பெரும்பாலும் குதிரைப்படையை வைத்திருக்க காரணமும் இதுவேதான்.

கால்நடை மருத்துவர்கள் மூலம் குதிரை பராமரிப்பு குறித்து அறிந்துகொண்டேன். இதன்மூலம் இதுவரை பராமரிப்பின்றி சாலைகளில் விடப்பட்ட 100 குதிரைகளை காப்பாற்றியுள்ளேன். சாலையோரங்களில் அடிபட்டு கிடக்கும் கால்நடைகளை மீட்டு உரிய சிகிச்சை கிடைக்கச் செய்துள்ளேன். கபடி, கிரிக்கெட் போல குதிரையேற்றத்தையும் பரவலாக்க வேண்டும்.

குதிரைகள் பயன்பாட்டை அதிகரித்தால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம். மேலை நாடுகளில் சில கிராமங்களில் இப்படி வாகனப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து குதிரையை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் அழியும் நிலையில் உள்ள குதிரை இனத்தை நாம் பாதுகாக்கலாம்.

குதிரைக்கு தீவனமாக கோதுமை, கானப்பயறு, சுண்டல் தோல், நவதானியம், பெல்லட், குச்சி, கூஷா, தவிடு, கம்பு, கேழ்வரகு, பச்சரிசி போன்றவற்றை அளித்து வருகிறேன். நாள் ஒன்றுக்கு ரூ.400 வரை செலவாகும். தினமும் குதிரையில் 10 கி.மீ. தூரம் பயணம் செய்வேன். இதன் மூலம் மன தைரியம் அதிகரிக்கிறது. மேலும் மன அழுத்தமும் குறைகிறது.

சாலையில் என்னை ஆச்சரியத்தோடு பார்ப்பவர்கள் ஆர்வமாக விசாரிக்கிறார்கள் என்றார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். சாலையில் திரியும் குதிரைகளுக்கெல்லாம் வாழ்வளிக்கிறேன் என்கிறார் சண்முகசுந்தர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version