ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் நாடு திரும்பும் வரை இது அமுலில் இருக்கும்.

ஜனாதிபதி பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

சிரேஷ்ட அரச அதிகாரியான சாந்தனி விஜேவர்தன தற்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார். 1994 ஆம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட திருமதி விஜேவர்தன, திறைசேரியில் 22 வருடங்களாக பல்வேறு பதவிகளை வகித்து வந்ததோடு இறுதியாக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார்.

2015 முதல் 2019 வரை அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளராகவும் சாந்தனி விஜேவர்தன பணியாற்றியுள்ளார்.

காலி சவுத்லண்ட் பெண்கள் கல்லூரியின் பழைய மாணவியான இவர், ருஹுணு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் முதுமானிப் பட்டம் பெற்றுள்ளதோடு நெதர்லாந்தின் ஹேக் நகரில் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பட்டப்பின் படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version