மைதேயி இன மக்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கார்கில் போர் களத்தில் நின்றதை விட சொந்த மண்ணில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை இப்போதுதான் நான் உணர்ந்தேன்.

மணிப்பூரில் மைதேயி இனத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் கொண்ட கும்பல் குகி இனத்தவர்களின் பைனோம் கிராமத்துக்குள் புகுந்து 64 நாட்களுக்கு முன்பு நடத்திய வெறியாட்டம் நாடு முழுவதும் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் அந்த கும்பலில் இருந்தவர்கள் ஈவு, இரக்கம் இல்லாமல் 3 பெண்களின் ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தினார்கள்.

அதில் ஒரு பெண் கை குழந்தையுடன் இருந்ததால் அவரை மட்டும் விட்டு விட்டனர். மற்ற 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலம் நடத்தினார்கள். அந்த 2 பெண்களில் 21 வயது இளம்பெண்ணும் ஒருவர் ஆவார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரரை ஈவு, இரக்கமின்றி அடித்து கொன்றனர்.

வெறிப்பிடித்த அந்த கும்பலிடம் சிக்கிய 2 பெண்கள் தான் வீடியோ காட்சிகளில் இடம்பெற்று இருந்தனர். கைக்குழந்தையுடன் சிக்கிய 3-வது பெண்ணை ஆடைகளை கலைந்துவிட்டு விட்டுவிட்டதால் அவர் வீடியோ காட்சியில் இடம் பெறவில்லை.

அந்த 3-வது பெண்ணின் கணவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். கார்கில் போரில் முன்களத்தில் நின்று போராடிய வீரர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரச்சந்துபூர் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் அவர் மே 4-ந் தேதி நடந்த காட்டுமிராண்டிதனமான வன்முறை பற்றி கூறியதாவது:-

மைதேயி இன மக்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பயங்கரமான ஆயுதங்களுடன் வந்து அவர்கள் தாக்கினார்கள். எங்களது வீடு, உடமைகள், கவுரவம் அனைத்தும் சூறையாடப்பட்டு விட்டன.

வீடுகளை தீ வைத்து எரித்தனர். கால்நடைகள் அனைத்தையும் கொன்று குவித்தனர். அவர்களது வெறியாட்டத்தால் 9 கிராமங்களில் இருந்த மக்கள் அனைத்தையும் இழந்து அகதிகள் போல மாறிவிட்டனர்.

பயத்தில் அருகில் உள்ள காடுகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். அதன்பிறகும் மைதேயி இன மக்கள் விடவில்லை. துரத்தி துரத்தி வேட்டையாடினார்கள். துப்பாக்கி முனையில் மிரட்டிதான் பெண்களின் ஆடைகளை கலைந்தனர். சில பெண்களை பிடித்து சென்று வயல்வெளியில் நிற்க வைத்து நடனமாட சொன்னார்கள். பெண்களை அடித்து கை தட்டி சிரித்தனர். எதற்காக இவ்வளவு கொடூர மனதுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க முடியாமல் இருந்தது.

கார்கில் போர் களத்தில் நின்றதை விட சொந்த மண்ணில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை இப்போதுதான் நான் உணர்ந்தேன்.

வன்முறை நடந்தபோது எப்படியோ என் மனைவி என்னிடம் இருந்து தனியாக பிரிய நேரிட்டது. அதனால் தான் அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டது. அவள் இன்னமும் தனக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவில்லை. மிக மிக கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்.

பட்டப்பகலில் கும்பலாக வந்து நடத்திய வெறியாட்டம் இன்னமும் மனதுக்குள் வந்துகொண்டே இருக்கிறது. மனிதாபிமானமே இல்லாமல் பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆறாத வடுவாக மாறிவிட்டது.

தற்போது எங்களது 9 கிராமங்களிலும் யாரும் இல்லை. பல்வேறு திசைகளில் சிதறிவிட்டனர். நாங்களும் உடைமைகளை இழந்துதான் பல மணி நேரம் நடந்து முகாமுக்கு வந்து சேர்ந்துள்ளோம்.

எனது வீடு முழுமையாக தீ வைத்து எரிக்கப்பட்டு விட்டது. அந்த வீடு எனது மனைவி கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்த பணத்தில் இருந்து கட்டியதாகும். இப்போது நிவாரண முகாம் மட்டுமே எங்களுக்கு தஞ்சம் தந்துள்ளது. இவ்வாறு அந்த கார்கில் வீரர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version