குகி சமூகத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரை போலீசார் மணிப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர்.

இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கக்கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. அதில் 160-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

மறுநாள் (அதாவது மே 4-ந் தேதி) குகி இனத்தவர்கள் வாழும் கிராமங்களுக்குள் புகுந்த சுமார் 1000 பேர் கொண்ட மைதேயி இனத்தவர்கள் மிக மோசமாக வன்முறையில் ஈடுபட்டனர்.

குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர். அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது.

அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பெண்கள் மீதான பாலியல் கொடூரம் பற்றிய வீடியோ காட்சிகள் கடந்த புதன்கிழமை திடீரென வெளியானது. 26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் 2 பெண்கள் ஆடைகள் இன்றி கொடுமைப்படுத்தப்படும் காட்சிகள் மனதை நொறுக்குவதாக இருந்தது.

நாடு முழுவதும் இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குகி சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு அவரது வீட்டு வேலியில் சொருகி வைக்கப்பட்டுள்ள கொடூர சம்பவமும் அங்கு நடைபெற்று உள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த டேவிட்தீக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2-ந்தேதி நடைபெற்று இருப்பது தெரியவந்தது.

அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஒரு கும்பல் டேவிட்தீக்கை கொலை செய்து தலையை துண்டித்து அவரது வீட்டு வாசலில் உள்ள தடுப்பு வேலியில் சொருகி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி அப்பகுதியில் பதட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது.

இதற்கிடையில் குகி சமூகத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் எங்கள் சமூகத்தை சேர்ந்த 114 பேர் இதுவரை வன்முறையால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு இம்பால் நகரில் கடந்த மே 4-ந்தேதி தங்கள் சமூகத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது லாங்கோ மற்றும் நகாரியன் மலைப்பகுதிகளில் உள்ள நர்சிங் மாணவிகள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இது தவிர மே 7-ந்தேதி அன்று 45 வயதான 2 குழந்தைகளின் தாய் ஒருவரையும் கும்பல் படுகொலை செய்தது உள்பட 4 சம்பவங்களை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒட்டுமொத்த நாடும் கைகோர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடைய மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரையும் போலீசார் மணிப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

அவர்களை 11 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்துள்ளது. இந்த விசாரணையின்போது யார்?யார்? இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என்ற விவரம் தெரியவரும். அதன் பேரில் மேலும் பலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் நுங்சி தோய் மேட்டேய் (வயது 19 ) இவரையும் சேர்த்து இதுவரை போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

மணிப்பூரில் சற்று கலவரம் ஓய்ந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் சூழ்நிலை உருவாகிய நிலையில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தபட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி மேலும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. மீண்டும் மணிப்பூரில் போராட்டங்கள் வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த சம்பத்தில் கைதான முக்கிய குற்றவாளி குய்ராம் ஹெராதாஸ் உள்ளிட்ட 2 பேரின் வீடுகளை கிராம பெண்கள் சூறையாடினார்கள். அந்த வீடுகளை தீ வைத்தும் எரித்தனர்.

இதன் தொடர்ச்சியாக தலைநகர் இம்பாலில் உள்ள காரி பகுதியில் இன்று பெண்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுரோட்டில் டயர்களை போட்டு எரித்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதுபற்றி அறிந்ததும் மணிப்பூர் ஆயுதபடை போலீசார், ராணுவ வீரர்கள், அதிவிரைவு படை போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தீயில் எரிந்து கொண்டிருந்த டயர்களில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் மணிப்பூரின் முக்கிய நகரங்களில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்க தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version