வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து சிலர் நடத்திய தாக்குதலில் கடும் காயங்களுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.

சுகந்திரன் எனப்படும் 35 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அவரது உறவினர்களினால் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்றைய தினம்(25) அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று(26) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் காயமடைந்த 2 வயது ஆண் குழந்தை, 7 மற்றும் 13 வயது சிறுமிகள், 4 பெண்கள் உள்ளிட்ட 08 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்திருந்த பெண்ணின் கணவரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வீட்டிற்கு தீ வைத்திருந்தது.

பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகக்கவசம் அணிந்த குழுவொன்று குறித்த வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக செல்லும் காட்சி அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் சம்பவத்தில் ஏற்கனவே 21 வயதான பெண்ணொருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version