கடுமையான வெப்ப அலைகள் காரணமாக உலகின் 4 கண்டங்களைச் சேர்ந்த கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத் தீ போன்றவை காரணமாக பல நாடுகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களிலுள்ள பல நாடுகளிலுள்ள மக்கள் கடுமையான வெப்பத்தினால் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் காட்டுத் தீயினால் குறைந்தபட்சம் 10 இராணுவ சிப்பாய்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 25 சிப்பாய்கள் உட்பட 80 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளனர்.
கிறீஸின் றோட் தீவுகளில் காட்டுத்தீ பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் 30,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இத்தாலியின் சிசிலி தீவில், சுமார் 3 இலட்சம் மக்கள் வசிக்கும் கெட்டேனியா நகரில், வீதிகளின் கீழாக செல்லும் மின்சாரக் கம்பிகள் உருகியதால், அந்நகரிலுள்ள மக்களுக்கு 48 மணித்தியாலங்ளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன்;, நீர்விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
இத்தகைய வெப்ப அதிகரிப்பினால் காடுகள் தீப்பற்றுவதுடன், குழந்தைகள், முதியவர்கள் போன்றோர் நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. மக்களின் மனநிலையிலும் இதனால் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெப்பத்தின் சாதனைகள்
இத்தாலியின் சிசிலி தீவில் 2021 ஆம் ஆண்டு 48.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. இது ஐரோப்பிய கண்டத்தின் வரலாற்றில் அதிகூடிய வெப்பநிலையாகும். அச்சாதனை இவ்வருடம் முறியடிக்கப்படக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ஐரோப்பிய நகரங்கள் உட்பட உலகின் பல நகரங்களில் இவ்வருடம் வெப்பநிலையில் ஏற்கெனவே பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
இத்தாலியின் பலேர்மோ நகரில் நேற்றுமுன்தினம் 47 பாகை செல்சியஸ், (116 பாகை பரனைட்) வெப்பநிலை பதிவாகியது. இது அந்நகரில் 1790 ஆம் ஆண்டின் பின்னலான அதிகூடிய வெப்பநிலையாகும்.
சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள சன்பாவோ நகரில் கடந்த 16 ஆம் திகதி 52.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. இது சீனாவில் இதுவரை பதிவான ஆகக்கூடுதலான வெப்பநிலையாகும்.
அமெரிக்காவில், பல மாநிலங்களில் 40 பாகை செல்சியஸுக்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது.
அரிஸோனா மாநிலத்தின் பீனிக்ஸ் நகரில் தொடர்ச்சியாக 25 நாளாக 110 பாகை பரனைட்டுக்கு (43.3 பாகை செல்சியஸ்) அதிக வெப்பநிலை நிலவுகிறது. அந்நகரில் 1974 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 18 நாட்களுக்கு இத்தகைய வெப்பநிலை நீடித்தமையே முந்தைய சாதனையாக இருந்தது.
கடலின் வெப்பநிலை அதிகரிப்பு
தரையில் மாத்திரமல்லாமல், கடற்பரப்பிலும் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.
மத்திய தரைக்கடலின் கடல்மட்டத்தில் நாளாந்த இடைநிலை வெப்பநிலையானது 28.71 பாகை செல்சியஸாக கடந்த திங்கட்கிழமை அதிகரித்திருந்தது. இதில் புதிய சாதனை படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்பெய்னின் கடல் விஞ்ஞான நிறுவகம் தெரிவித்துள்ளது. இதற்குமுன் மத்திய தரைக்கடலில் அதிகபட்சமாக 28.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை 2003 ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது எனவும் அந்நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் புளோரிடா கீஸ் தீவுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அத்திலாந்திக் சமுத்திர கடல்மட்டத்தின் வெப்பநிலை 38.43 பாகை செல்சியஸாக பதிவாகியிருந்தது. இது கடல் மட்டத்தின் வெப்பநிலையில் புதிய உலக சாதனையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சமுத்திரங்களில் இவ்வாறு வெப்பநிலை அதிகரிப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஜுலை மாதமானது வெப்பநிலையில் மிக அதிக வெப்பநிலை நிலவிய மாதமாக, சிலவேளைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மிக அதிக வெப்பமான மாதமாக, பதிவாகக்கூடும் என நாசாவின் காலநிலையியல் நிபுணர் கெவின் ஷ்மித் தெரிவித்துள்ளார்.
தரையிலும் கடலிலும் வெப்பநிலை அதிகரிப்பில் சாதனை படைக்கப்படுவதற்கு மனிதர்களுடன் தொடர்படுத்தப்படுத்தக்கூடிய காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
காலநிலை மாற்றம்
இந்த வெப்ப அலைகளுக்கு காலநிலை மாற்றமே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பருவநிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனினும் அண்மைக் காலத்தில் பூமியின் வெப்பநிலை முன்னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பசுமை இல்ல விளைவுடன் இது இணைத்து பார்க்கப்படுகிறது.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் பலவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. சூழல்பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுட்டுவதன் முக்கியத்தும் வெகுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, காலநிலை மாற்றத்தை தடுப்பதற்குப் பதிலாக அதனை தாமதப்படுத்தல் மாத்திரமே இதுவரை நடந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சுட்டிக்காட்டியதுடன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனத் தெரிவித்தார்.
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (சேது)