வடகொரியாவின் நவீன ஆயுதங்களை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவிடம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் காட்டினார்.

ஷோய்கு தலைமையிலான ரஷ்ய பிரதிநிதிகளையும், சீன அதிகாரிகளையும் கிம் ஜோங் உன் தங்கள் நாட்டுக்கு அழைத்திருந்தார்.

கொரிய சண்டை நிறுத்தத்தின் 70-ஆவது ஆண்டு விழாக்களில் அவர்கள் கலந்துகொள்வார்கள். இதில் பொதுவாக மிகப்பெரிய ராணுவ அணிவகுப்புகள் நடைபெறும்.

ரஷ்ய அமைச்சரிடம் காட்டிய முக்கிய ஆயுதங்களில் ஹ்வாசாங் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் (ICBM) அடங்கும்.

இந்த ஏவுகணை கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இது திட எரிபொருளை பயன்படுத்தும் நாட்டின் முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்று கருதப்படுகிறது. இது திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் ராக்கெட்டுகளை விட மிக விரைவாகச் செல்லக்கூடியது.

வட கொரியாவை தொடர்பான செய்திகளை வெளியிடும் சிறப்பு இணையதளமான என்.கே. நியூஸ் இதுபற்றி தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவின் விமானப்படையால் பயன்படுத்தும் ஆளில்லா விமானத்தைப் போன்ற இரண்டு புதிய ஆளில்லா விமான வடிவமைப்புகளையும் காட்சிப்படுத்தியதாக அந்த இணையதளம் கூறியுள்ளது.

யுக்ரேன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதங்களை வழங்குவதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில் ஷோய்குவின் வருகை நடந்திருக்கிறது. ஆனாலும் இந்த ஆயுதப் பரிமாற்ற குற்றச்சாட்டை இருதரப்புமே மறுத்து வருகின்றன.

இந்த வருகையின் போதும் கிம் ஜோங் உன்னும் ஷோய்குவும் பாதுகாப்பு மற்றும் சர்வதேசச் சூழல் போன்ற பரஸ்பர அக்கறை கொண்ட அம்சங்கள் குறித்து விவாதித்தாக கேஜிஎன்ஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

வட கொரியாவின் வெற்றி தினம் என்று கொண்டாடப்படும் நாளுக்கான இந்தக் குழுவின் வருகை வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1953 ஆம் ஆண்டு கொரியப் போர், ஒரு சண்டை நிறுத்தத்தின் மூலமாக முடிவுக்கு வந்த நாளை இது குறிக்கிறது. முழுமையான போர் நிறுத்தம் அறிவிக்கப்படாததால் இன்றும் இரு கொரிய நாடுகளும் போரில் ஈடுபட்டுள்ளதாகவே பொருளாகிறது.

வியாழன் அன்று ஒரு மாபெரும் அணிவகுப்புடன் இந்தக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவும் சீனாவும் நீண்ட காலமாக வடகொரியாவின் நட்பு நாடுகளாக உள்ளன. கோவிட் பரவலுக்குப் பிறகு கிம் வெளிநாட்டுத் தலைவர்களை இப்போதுதான் முதல் முறையாக தனது நாட்டுக்குள் அனுமதித்திருக்கிறார்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகளை கடந்த 2018-ஆம் ஆண்டுதான் கடைசியாக வடகொரியா அழைத்திருந்தது.

கிம் ஜோங் உன்னுடன் ஷோய்கு நட்பு ரீதியிலான பேச்சு நடத்தியதாகவும், புதின் கையெழுத்திட்ட கடிதம் கிம்மிடம் வழங்கப்பட்டதாகவும் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் கூறுகிறது.

இதே போல சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் லீ ஹாங்ஜோங் தலைமையிலான சீனக் குழு, கிம்மிடம் ஸி ஜின்பிங்கின் தனிப்பட்ட கடிதத்தையும் வழங்கியது.

“சீன மக்கள் தன்னார்வலர் படையின் துணிச்சலான வீரர்கள் வெற்றிக்காக தங்கள் ரத்தத்தைச் சிந்தியதை கொரிய மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்” என்று லீயிடம் கிம் தெரிவித்தார்.

1950-ஆம் ஆண்டு தென்கொரியாவுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக வட கொரியாவுக்கு சீனா படைகளை அனுப்பியது. அப்போதைய சோவியத் ஒன்றியமும் வடகொரியாவை ஆதரித்தது.

1991-இல் சோவியத் ஒன்றியம் சிதறிய பிறகு, அமெரிக்கா மீதான பரஸ்பர வெறுப்பின் காரணமாக, ரஷ்யா வட கொரியாவுக்கு இயற்கையான நட்பு நாடாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு வெற்றி தின அணிவகுப்பில் சீன மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகள் பங்கேற்பது, வட கொரியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைக் குறிக்கிறது என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

வட கொரியர்கள் முகக் கவசம் இன்றி பொதுவெளியில் நடமாடும் புகைப்படங்கள் அந்நாட்டு ஊடகங்களில் காட்டப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது.

வட கொரியா கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து வர்த்தக ராஜதந்திர நடவடிக்கைகளில் இருந்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டது. நெருங்கிய கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் சீனாவுடனும் கூட தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version