‘மலையகம் 200’ஐ முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையான நடைபவனி இன்று சனிக்கிழமை (29) காலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக, தலைமன்னாரின் நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபவனி தலைமன்னாரிலிருந்து 15 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து, இன்று மாலை 3 மணியளவில் பேசாலையை அடையும்.

16 நாட்கள் தொடரும் இந்நடைபவனி நிகழ்வு நேற்று (28) தலைமன்னாரில் உள்ள புனித லோரன்ஸ் தேவாலய வளாகத்தில் கலையம்சங்களை தாங்கிய ஒன்றுகூடலோடு, ‘மலையகம் 200’ நினைவுத்தூபிக்கான அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.

நேற்று 28ஆம் திகதி ஆரம்பமான இந்த நடைபவனி நிகழ்வானது ஆகஸ்ட் 12ஆம் திகதி சனிக்கிழமை மாத்தளையை அடைவதோடு நிறைவுபெறும்.

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் சக சகோதர பிரஜைகளுடனான ஓர் உரையாடலாக அமையும் இந்த ‘மலையக எழுச்சிப் பயணம்’ மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் சமூக அமைப்புகளை கொண்ட பரந்த குழுவினர், மலையக சமூகத்தை சேர்ந்த – அதனோடு இணைந்து பணியாற்றும் தனிநபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version