இலங்கையில் முதன்முறையாக அம்பாந்தோட்டையில் உள்ள பறவைகள் சராணாலயத்தில்  (பெரும் பூநாரை) பிளமிங்கோ (Greater flamingo) முட்டையொன்று குஞ்சு பொரித்துள்ளதாக தலைமைக் கண்காணிப்பாளர் சுரங்க பண்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது ஒரு தனித்துவமான பறவை இனம். அதாவது, புதிதாகப் பொரித்த தங்களின் குஞ்சின் வாயில் தாய் மற்றும் தந்தைப் பறவை தங்களுக்குள் உற்பத்தியாகும் பாலை ‘கிராப் மில்க்’ எனப்படும் ஒரு வகை திரவத்தை ஊட்டி விடுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பிளமிங்கோ தொண்டைப் பகுதி ‘கிராப்’ (Crop)எனப்படும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவருவதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பிருந்தே, இந்தப் பையின் உட்புறத் திசுக்களில் பால் போன்ற திரவம் சுரக்கிறது.

திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்று கெட்டியாக இருக்கும் இது ‘கிராப் மில்க்’ (Crop Milk) எனப்படும். இது புரதம், கொழுப்புச் சத்து நிறைந்த பால் பிரகாசமான சிவப்பு நிறத்தில் உள்ளது.

“விலங்கு உலகில், பெண்கள் மட்டுமே தங்கள் பிறந்த குழந்தைகளுக்கு பால் கொடுக்கிறார்கள். பிளமிங்கோவைப் பொறுத்தவரை, ஆண் பறவைகளும் குஞ்சுகளுக்கு உணவளிக்க ‘கிராப் மில்க்’ என்று அழைக்கப்படுவதை உற்பத்தி செய்கின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

புதிதாகப் பொரித்த பிளமிங்கோ குஞ்சிற்கு அதன் பெற்றோர்கள் குறைந்தது மூன்று மாதம் வரை உணவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version