போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதியினர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் போலி வீசாவும் இந்த இளைஞனிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த யுவதியை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இத்தாலி வீசா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வட பிராந்தியத்தில் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் போலியான தகவல்கள் அடங்கிய பொய்யான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version