மோட்டார் சைக்கிளில் இயந்திர, அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்கு பாவித்து மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் நீதிமன்றினால் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் முச்சக்கர வண்டி ஒன்றினை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்காக யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அதிகாரிகள் முச்சக்கர வண்டியின் இயந்திர மற்றும் அடிச்சட்ட இலக்கத்தை பரிசோதித்த போது , சந்தேகம் ஏற்பட்டு , அது தொடர்பில் ஆராய்ந்த போது , அவை மோட்டார் சைக்கிள் ஒன்றினுடையது எனவும் , வாகன புத்தகமும் போலியானது என கண்டறிந்துள்ளனர்.

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் வாகனத்தை பதிவு செய்தவற்கு கொண்டு சென்ற நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது , தனக்கு கிளிநொச்சி பகுதியை சேர்ந்த நபரே முச்சக்கர வண்டியை விற்பனை செய்ததாக கூறியதை அடுத்து பொலிஸார் கிளிநொச்சி வாசியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது அவர் , தான் ஒரு இடைத்தரகர் எனவும் வாகனங்களை வாங்கி விற்பனை செய்பவர் எனவும் , முச்சக்கர வண்டியை மருதங்கேணி பகுதியை சேர்ந்த நபரே விற்பனை செய்தார் என கூறியுள்ளார்.

அதனை அடுத்து மருதங்கேணி நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் மூவரையும் முற்படுத்திய வேளை , முச்சக்கர வண்டியை பதிவு செய்ய சென்ற நல்லூர் பகுதியை சேர்ந்தவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று , ஏனைய இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version