2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் மத்தள சர்வதேச விமான நிலையம் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 2 ஆயிரத்து 221 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் கணக்காய்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் விமான நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு 203 கோடி ரூபா என்றும், இது அதன் இயக்க வருமானத்தை விட 26 மடங்கு அதிகம் என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரிக்குப் பிந்திய நட்டம் 2,221 கோடி ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 3, 656 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், அதற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடன் தொகை 1,900 கோடி ரூபாவாகும்.

எவ்வாறாயினும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் பெற்ற வெளிநாட்டு கடனுக்காக 2022 ஆம் ஆண்டு 184 கோடி ரூபாய் கடன் தவணை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version