2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்றதைப் போன்று பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (ஆக. 08) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேலும் இது குறித்து தெரிவிக்கையில் :
நிலவும் வறட்சி, மின்சார நெருக்கடி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களை முன்னிறுத்தி அரகலய இயக்கத்தில் ஈடுபட்டுள்ள சிலர் எதிர்கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரின் வீடுகளை சுற்றி வளைக்கும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான தாக்குதல்களை தடுக்க விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
வறட்சியால் ஏற்பட்ட தண்ணீர் நெருக்கடி மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி வன்முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு சில ஊடக நிறுவனங்களும் பின்னணியில் இருப்பதாக குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.