மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியும் சாகசம் புரிந்தும் சென்ற இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை தாக்கப்பட்ட சம்பவம் வாத்துவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 7ஆம் திகதி மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனின் இறுதிக் கிரியைகள் நேற்று (09) வாதுவ வெரகம பொது மயானத்தில் இடம்பெற்றது.

இதற்காக சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் குழு ஒன்று ஊர்வலமாக வந்து, இறந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாகக் கூறி, ஆபத்தான ஒற்றைச் சக்கரத்தில் சாகசம் புரிந்தும் உள்ளனர்.

பலர் அதை வெறுப்புடன் பார்த்தார்கள். ஆனால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்போது அங்கிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்தார்.

இதனால் கோபமடைந்த சுமார் 30 இளைஞர்கள் அந்த நபரை கை, கால் மற்றும் தலைக்கவசங்களால் தாக்கியதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பெரும் முயற்சி எடுத்து அவரை காப்பாற்றியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version