படகு என்ஜின் பழுதடைந்ததால் எல்லை தாண்டி தமிழகத்தின் ஆறுகாட்டுத்துறை கடல் பகுதிக்கு சென்ற இலங்கை மீனவர்கள் 3 பேரை வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து 2 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகொன்று நிற்பதாக வேதாரண்யம் கடலோர பொலிஸாருக்கு நேற்று புதன்கிழமை (9) தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், கடலோர பொலிஸார் படகொன்றில் சென்று, அங்கு நின்றிருந்த இலங்கை ஃபைபர் படகை கைப்பற்றி, அதிலிருந்த 3 பேரையும் வேதாரண்யம் கடலோர பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன்(40), சிவக்குமார் (25), ஸ்ரீகாந்தன் (37) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது அவர்களின் படகு என்ஜின் பழுதடைந்ததால், கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலில் தத்தளித்ததும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடலோர பொலிஸார், கியூ பிரிவு பொலிஸார் மற்றும் தனிப் பிரிவு பொலிஸார் மீனவர்கள் 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அதனை தொடர்ந்து, எல்லை தாண்டி வந்ததாக 3 பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version