யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் சனிக்கிழமை (12) நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் விஷேட குற்றதடுப்பு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான காவல்துறை குழுவினரால் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி (9வயது) ஒருவரை பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வரும் நிலையில் குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி தனது தாயாருக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த தகவலை தாயார் சித்தங்கேணியில் உள்ள சிறுமியின் மாமனுக்கு தெரிவித்திருந்த நிலையில், அவர் கோப்பாய் வந்து குறித்த நபரை சிந்தங்கேணி அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரித்த போது அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின் அந்த நபரை கோப்பாய் கொண்டுவந்து அவரது இல்லத்தில் விட்டுள்ளனர். அவ்வாறு வீட்டில் விடப்பட்ட நிலையில் அவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிந்த நபரின் உடலில் அடிகாயங்கள் காணப்பட்ட பொழுதும் உயிர் பிரியக் கூடிய வகையில் காயங்கள் பாரதூரமானதாக இல்லை எனவும், குறித்த நபர் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட சிறுமி இன்று திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.