ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையிலேயே இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்க்க விரும்புகிறாரா? அந்த ஆர்வத்தில், அவர் தமது அரசியல் எதிர்காலத்தையும் ஆபத்துக்குள்ளாக்கிக் கொள்கிறாரா என்று சிலர் சிந்திக்கும் வகையிலேயே அவர் நடந்து கொள்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவோ வேறு எந்தவொரு தலைவரோ இனப்பிரச்சினையை தீர்ப்பதாக இருந்தால், தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பல உத்தரவாதங்களை வழங்கும் வகையில், நாட்டின் அரசியலமைப்பில் பல மாற்றங்களை செய்ய வேண்டும்.

அதனை அவருக்கு எதிரான சக்திகள், சிங்கள மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளாகவே எடுத்துரைப்பர். அது நிச்சயமாக அவரது அரசியல் எதிர்காலத்தைப் பாதித்துவிடும்.

ஏற்கெனவே தமது வாக்கு வங்கியை சஜித் பிரோமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடம் பறிகொடுத்துவிட்டு, தமது கடசிக்கு ஒர் ஆசனத்தை மட்டுமே பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினை என்ற ஆபத்தான விடயத்தில் கைவைத்து, மேன்மேலும் சிங்கள மக்களிடமிருந்து விலகிச் செல்ல விரும்புவாரா?

அவர் தமிழ் மக்களுக்கு சாதகமான வகையில் இனப்பிரச்சினையை தீர்த்தால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். ஆயினும், அதே காரணத்தால் அவரை சிங்கள மக்கள் மேன்மேலும் வெறுப்பார்கள். சிங்கள மக்களின் வாக்குகளின்றி, இந்நாட்டில் எவரும் ஜனாதிபதியாக பதவிக்கு வரமுடியாது.

ரணில் விக்கிரமசிங்க போன்ற மூத்த அரசியல்வாதி ஒருவருக்கு அதை விளங்கிக் கொள்ள முடியாமல் இல்லை.

அவ்வாறு இருக்க அவர் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அரசியலமைப்பை மாற்றி அமைப்பதாக இருந்தால், அவர் மிகப் பெரும் தியாக சீலராக இருக்க வேண்டும்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது அவர் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தைப் பற்றியும் பொதுவாக இனப்பிரச்சினையை தீர்ப்பது பற்றியும் பேசிக் கொண்டு இருக்கிறார்.

கடந்த புதன்கிழமை (09), அவர் முன்கூட்டியே அறிவித்துவிட்டு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைப் பற்றி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

“அதிகாரப்பகிர்வு பற்றிய சட்டத்தில் தெளிவு இல்லை. மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் சில அதிகாரங்களை பொதுவாக வைத்துக் கொண்டு இருக்கின்றன.

இதனால் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. அதேவேளை, பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்குப் பதிலாக மென்மேலும் உக்கிரமடைகின்றன” என்று ஜனாதிபதி தமது அந்த உரையில் குறிப்பிட்டார்.

மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்பில் உள்ள மாகாண சபை பட்டியல், ஒதுக்கப்பட்ட பட்டியல் (மத்திய அரசாங்கத்தின் அதிகார பட்டியல்) மற்றும் பொதுப் பட்டியல் ஆகியவற்றை ஆராய்து, அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையே தெளிவாக பகிர்ந்தளிப்பதற்காக பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம், அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சட்டத் திருத்தங்களை செய்துவிட்டு, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன.

அந்த விடயத்தில் ஏற்கெனவே மூன்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மீண்டும் மாவட்ட விகிதாசார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தல், மாகாண சபைத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களும் போட்டியிட வசதி செய்து கொடுத்தல், மாகாண சபைகளில் 25 சதவீதம் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல் என்பவையே அந்த மூன்று ஆலோசனைகளாகும்.

இந்த ஆலோசனைகளுக்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்று, அவற்றை சட்டத்தில் சேர்த்து, மாகாண சபைகள் முறையாக நிறுவப்படும் வரை ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோனை சபையை நியமிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாலோசனை சபையில் உறுப்பினர்களாவர்.

ஆளுநரும் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் அச்சபையின் இணை தவிசாளர்களாக கடமையாற்றுவர்.

ஆளுநர் மாகாண நிர்வாக விடயங்களில் நிறைவேற்றுத்துறைக்கு பொறுப்பாக இருப்பார். பாராளுமன்ற உறுப்பினர் சட்டமியற்றும் விடயங்களில் தலைமை தாங்குவார்.

ஐந்து அமைச்சுகள் வீதம் ஓன்பது மாகாண சபைகளிலும் 45 அமைச்சுகள் இருக்கின்றன. அவற்றுக்கு பாராளுமன்றத்தைப் போல் மேற்பார்வைக் குழுக்கள் நியமிக்கப் போவதாக ஜனாதிபதி கூறினார்.

தற்போது பாராளுமன்றத்தில் விசேட பொறுப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவற்றின் தவிசாளர்களாக நியமிக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரம் பற்றிய விடயம் மிகவும் கடினமானதாகவும் சர்ச்சைக்கு உரியதாகவும் இருப்பதால், அந்த விடயத்தில் இப்போதைக்கு கைவைக்காமல், ஏனைய விடயங்கள் தொடர்பாக இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நடைமுறைசாத்தியமானது என்று அவர் வாதிடுகிறார்.

அவரது உரையை அடுத்து, தமிழ் உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் முன்னர் ஏற்கெனவே ஆறு வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய போது, இந்த மாற்றங்களைச் செய்துவிட்டே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

அதிகாரப்பகிர்வு பற்றிய சட்டத்தில் தெளிவு இல்லை. எனவே மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்பில் உள்ள மாகாண சபை பட்டியல், ஒதுக்கப்பட்ட பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றை ஆராய்ந்து, அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையை தெளிவாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் வாதத்தை ஏற்கத்தான் வேண்டும்.

ஆயினும், இது ஆயிரம் புதிய சர்ச்சைகளை மோற்றுவிக்கும் நடவடிக்கையாகும். ஆகவே, இது பல வருடங்கள் நீடிக்கும் விடயமாகும்.

அதேவேளை, இந்தச் சட்டத் திருத்தங்களை செய்துவிட்டு, மீண்டும் மாவட்ட விகிதாசார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தல், மாகாண சபைத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களும் போட்டியிட வசதி செய்து கொடுத்தல், மாகாண சபைகளில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல் போன்ற நோக்கங்களுக்காக, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவிருக்கிறது.

அந்தத் திருத்தங்களிலும் மாகாண சபைத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடுவது என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும்.

இதுபோன்ற இழுபறியான விடயங்களுக்குப் பின்னரே, மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி கூறும் போது, அதன் மூலம் அவரது நோக்கம் தெளிவாகிறது. அவர் மாகாண சபைத் தேர்தலை மேலும் ஒத்திப்போடவே முயல்கிறார்.

இந்தச் சட்டத்திருத்தங்களில் உள்நோக்கம் இல்லாவிட்டால், ஏற்கெனவே ஆறு வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்திவிட்டு படிப்படியாக இந்தச் சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம்.

விகிதாசார முறைப்பபடி அத்தேர்தலை நடத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் முன்வவைத்த தனிநபர் சட்டமூலத்துக்கு உயர்நீதிமன்றத்தின் அங்கிகாரமும் கிடைத்திருக்கிறது. அதனை நிறைவேற்றி தேர்தலை நடத்தலாம்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, 2017ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமொன்றின் விளைவாகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை ஒத்திப்போடவே அவர் அன்றும் அந்தச் சட்டமூலததை சமர்ப்பித்தார்.

எனவே, தாமதமின்றி மாகாண சபைத் தேர்தலை நடத்தும் தார்மிகக் கடமை அவருக்கு இருக்கிறது.

இந்த நிலையிலேயே, அவர் இப்போது அத்தேர்தலை மேலும் ஒத்திப்போடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்போகிறார்.

ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்க ஆலோசனை சபை அமைக்கும் அவரது திட்டத்தின் மூலமும், மாகாண சபைத் தேர்தல் நீண்ட காலத்துக்கு ஒத்திவைக்கப்படப் போகிறது என்பது தெளிவாகிறது. விரைவில் தேர்தல் நடைபெறும் சாத்தியங்கள் இருந்தால், அவ்வாறான சிக்கல் நிறைந்த ஓர் அமைப்பு அவசியமாகாது.

ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏன் தேர்தல்களை ஒத்திவைக்க முயல்கின்றன என்பது ஒன்றும் புரியாத புதிர் அல்ல.

ஐக்கிய தேசிய கட்சியும் ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் தேர்தல்களுக்கு அஞ்சுகின்றன. அவ்விரு கட்சிகளினதும் வாக்கு வங்கி தற்போது வெகுவாக சரிந்துள்ளது.

எனவே, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைக் காட்டி, அரசாங்கம் மூன்று நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறது.

முதலாவது, மாகாண சபைத் தேர்தலை நீண்ட காலத்துக்கு ஒத்திப் போடுவதாகும்.

இரண்டாவது, அதன் மூலம் நாட்டில் சர்ச்சைகளையும் இன முரண்பாடுகளையும் உருவாக்கி, தற்போதைய பொருளாதார பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதாகும்.

மூன்றாவது, இந்தச் சர்ச்சைகள் மூலம், எதிர்க்கட்சிகளிடையே பிளவுகளை தோற்றுவிப்பதாகும்.

-எம்.எஸ்.எம் ஐயூப்

Share.
Leave A Reply

Exit mobile version