ஆண்ட்ராய்டு செல்போன்களின் ஆதிக்கம் அதிகமான பிறகு சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நாம் செல்போனில் வாட்ஸ் அப் டிபியாக வைக்கும் நமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை திருடி அதனை ஆபாசமாக சித்தரித்த வக்கிர வாலிபர் சிக்கி உள்ளார்.
இவர் இதுவரை 926 பேரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது தெரியவந்தது. சேலம் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக அவரை கைது செய்து உள்ளனர். இதற்காக போலீசார் தங்கள் பாணியில் செயல்பட்டு முதலில் அவரது வங்கி கணக்கில் இருந்த சுமார் 3 லட்சம் ரூபாயை முடக்கி அவரை நேரில் வர வழைத்து பிடித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார்த்திக் இவரது செல்போனுக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவரின் செல்போனில் இருந்து ஹாய் என்று மெசேஜ் வந்துள்ளது. இதை பார்த்ததும் நீங்கள் யார் என்று கார்த்திக் கேட்டுள்ளார். தற்போது எதிர்மறையில் இருந்த நபர் யு.பி.ஐ.டி. ஒன்றை அனுப்பி பணம் அனுப்புமாறு மிரட்டி உள்ளார்.
ஆனால் கார்த்திக் பணம் தர முடியாது என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கார்த்திக்கின் டி.பி.யில் இருந்த அவரது மனைவி மற்றும் தங்கையின் புகைப்படங்களை ஆபாச புகைப்படங்களாக சித்தரித்துள்ளார்.
இதன் பிறகு கார்த்திக்கின் செல்போன் என்னுடன் அந்த ஆபாச புகைப்படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து பலர் கார்த்திக்கின் செல்போன் எண்ணுக்கு போன் செய்து மனைவி மற்றும் தங்கையை தவறான உறவுக்கு அழைத்திருக்கிறார்கள்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக் இது பற்றி சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதோடு கார்த்திக் தனது மனைவியையும் தங்கையையும் ஆபாசமாக சித்தரித்த நபரை தொடர்பு கொண்டு உங்களது வங்கிக் கணக்கை அனுப்புங்கள். நான் பணம் அனுப்புகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
வங்கி கணக்குத் தெரிந்தால் உடனடியாக அவர் யார் என்பதை கண்டு பிடித்து விடலாம் என்கிற எண்ணத்தில் கார்த்திக் செயல்பட்டு உள்ளார்.
இதை அறியாத மர்ம நபர் தனது வங்கி கணக்கை கார்த்திக்கின் செல்போனிற்கு அனுப்பி இருக்கிறார். இதை வைத்து தான் சேலம் சைபர் கிரைம் போலீசார் ஆபாசமாக சித்தரித்த நபரை கண்டுபிடித்தனர்.
அவரது பெயர் சரத்கு மார் என்பதும் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரது வங்கி கணக்கில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாக முடக்கினர் சைபர் கிரைம் போலீசார் இதனால் அவர் அலறி அடித்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து சேலத்துக்கு ஓடினார். அப்போது தான் போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சரத்குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் இது போன்று 900க்கும் அதிகமான பெண்களின் புகைப்ப டங்களை வாட்ஸ் அப் டி.பி.யில் இருந்து திருடி ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.
சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ள போலீசார் வாட்ஸ் அப் டி.பி.யில் இருக்கும் புகைப்படங்களை யாரும் திருட முடியாத வகையில் எப்படி செயல்படுவது என்பதையும் விளக்கி இருக்கிறார்கள்.
வாட்ஸ் அப் மற்றும் முக நூல் பக்கங்களில் பிரைவசி என்ற பகுதி இருக்கும் அதன் உள்ளே நுழைந்தால் உங்கள் வாட்ஸ் அப் டி.பி. யில் உள்ள புகைப்படங்களை யார் யார் பார்க்க வேண்டும், யார் யார் பார்க்க கூடாது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
இனி செல்போன் டிபியில் தங்களது குடும்பத்தினரின் புகைப்படங்களை வைக்கும் அனைவரும் இதனை பின்பற்றி சரத்குமார் போன்ற நபர்களின் பிடியில் இருந்து தங்களது குடும்பத்தினரை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
உங்களது செல்போன்களில் உங்கள் குழந்தைகளின் புகைப்படமோ அல்லது மனைவி மற்றும் உறவுக்கார பெண்களின் புகைப்படமும் இருந்தால் இப்போதே எச்சரிக்கையாகி விடுங்கள். இல்லை என்றால் நீங்களும் சேலம் கார்த்திக் போல நிச்சயம் பாதிப்புக்குள்ளாகலாம் உஷார்.