தெருவில் செல்லும் போது, நாய்கள் குரைக்கும். சில நாய்கள் துரத்தும். ஆனால் யாருமே, அந்த நாய்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. அவற்றுக்குப் போட்டியாக குரைத்துக் கொண்டிருப்பதுமில்லை.
அது கடிக்குமா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருப்பதில்லை, பயணத்தை தொடர்வதிலேயே அனைவரின் கவனமும் இருக்கும்.
இப்போது, தெற்கில் இருந்து எழுகின்ற கூச்சல்கள் எல்லாமே, வழிநெடுக குரைக்கும் நாய்களின் குரைப்புகளைப் போலத் தான் இருக்கிறது.
வடக்கில் விகாரைகளின் மீது கைவைப்பவர்களின் தலையை எடுத்து வருவேன் என்கிறார் மேர்வின் சில்வா.
இது சிங்கள பௌத்த நாடு, எந்த இடத்திலும் புத்தர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வோம் என்கிறார் சரத் வீரசேகர.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த விடமாட்டோம் என்கிறார் உதய கம்மன்பில.
இராவணன் தமிழ் மன்னன் அல்ல, அவன் இயக்கர் குல சிங்கள மன்னர் என்று கூறுகிறார் சரத் வீரசேகர.
இப்படி தெற்கின் இனவாத அரசியல்வாதிகள் எல்லோருமே, தமிழருக்கு விரோதமான கருத்துக்களை வெளியிடத் தொடங்கி விட்டனர்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் பலன்கள் தமிழருக்கு மட்டுமானதல்ல. அது சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கூட பொதுவானது.
ஆனாலும், 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் வடக்கு, கிழக்கு பிரிந்து விடும், தனிநாடு உருவாகி விடும் என்கிறார் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்.
13 ஆவது திருத்தத்துக்குள் தனிநாடு, தமிழீழம் இருக்கிறது என்றால், புலிகள் மட்டுமல்ல, மிதவாத தமிழ்த் தலைமைகளும் ஏன் அதனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தார்கள்?
எதற்காக தொடர்ந்தும் வீணாகப் போராடி, ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் துறந்தார்கள்?
13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தனிநாட்டை, தமிழீழத்தை அடைய முடியும் என்றால், அவர்கள் போராடியிருக்கமாட்டார்கள்.
இந்த உண்மையைக் கூட புரிந்து கொள்ள முடியாதபடி, சிங்கள பௌத்த பேரினவாதம், சிங்கள மக்களை தவறான வழிக்குத் திருப்பிக் கொண்டிருக்கிறது.
வடக்கில் உள்ள ஆலயங்களை அழித்து விட்டு அவற்றுக்கு மேல் விகாரைகளை அமைத்தவர்கள், விகாரைகளில் மீது கைவைப்பவர்களின் தலையைக் கொண்டு வருவேன் என்று சூளுரைக்கிறார்கள்.
இப்படி தமிழருக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் இப்போது மோசமடைந்திருக்கிறது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கூறத் தொடங்கியதை அடுத்து இந்த இனவாதக் கூச்சல் தொடங்கியது.
இந்தக் கூச்சல்கள் எமக்குப் பழக்கப்பட்டவை தான்.இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து காலத்துக்குக் காலம் சிங்கள பௌத்த பேரினவாதிகள் இப்படித் தான் நடந்து கொண்டார்கள், இப்படித் தான் கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
தங்களை தூய சிங்கள பௌத்த தேசியவாதிகளாக காட்டிக் கொள்ளும் தலைவர்கள் காலத்துக்குக் காலம் தோற்றம் பெற்றுக் கொண்டே இருந்தார்கள்.
அது இப்போது, சரத் வீரசேகர, ஜகத் டயஸ், மேர்வின் சில்வா, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றவர்களின் உருவில் இருக்கிறது. இன்னும் பலர் இந்த வரிசையில் இருக்கிறார்கள்.
நாளை வேறு பலர் வருவார்கள். அவர்களும் இதையே கூறுவார்கள். இதை விட இன்னும் அதிகமாகவும் கூறுவார்கள்.
இதுதான் திட்டமிட்டு நிறுவனமயப்படுத்தப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதம். அது காலத்துக்குக் காலம் புதுப்பிக்கப்படுகிறது. உருமாற்றம் செய்யப்படுகிறது.
ஆட்கள் மாறிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களின் இலக்கு மாறாது. இனவாதக் குரல்களில் மாற்றம் இருக்காது. அஞ்சலோட்டம் போல அவர்கள் தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருப்பார்கள்.
ஏனென்றால், சிங்கள பௌத்த பேரினவாதிகள் மத்தியில் இனவெறுப்பு ஊறிக் கிடக்கிறது. தமிழருக்கு எதிரான மனநிலை, தமிழர்கள் மீதான அச்சம், வெறுப்பு என்பன நீக்கமற நிறைந்து கிடக்கிறது.
அவ்வப்போது அதனை அவர்கள் மறைத்துக் கொள்வார்கள். நெருக்கடிகளை சமாளிப்பதற்கு தமிழர்களின் உதவி தேவைப்படும் போது, உருமாற்றம் அடைந்திருப்பார்கள். அது நீண்டகாலம் இருக்காது.
பின்னர் தமிழர்களை உதறித் தள்ளி விட்டு இனவாதத் தீ பற்றியெரியும். இதுதான் 75 வருட இலங்கையின் வரலாற்றில் நாம் கண்ட உண்மை.
தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனவாதத்தின் நீட்சியாகத் தான் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் தமிழர் தரப்பு ஒன்றை மறந்து விட முடியாது, சிங்கள பௌத்த பேரினவாதம் ஒருபோதும் தன்னை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதே அந்த உண்மை.
காலத்துக்குக் காலம் தமிழர் தரப்பு பகைமையை மறந்து, நல்லெண்ணத்துடன், நல்லிணக்கத்துடன் பேச முயன்றிருக்கிறது.
அவ்வாறான ஒவ்வொரு அனுபவமும் தமிழர்களுக்கு பின்னடைவையே கொடுத்து வந்திருக்கிறது.
ஆக, சிங்கள பௌத்த பேரினவாதம் ஒருபோதும் மாறா முகம் கொண்டது, அதன் சிந்தனை எப்போதும், மாற்றம் அடையப் போவதில்லை.
இவ்வாறான நிலையில் தமிழர் தரப்பு என்ன செய்ய வேண்டும்?
ஒன்றில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு அடிபணியும் வகையில் தமிழர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தெருவில் நாய்கள் குரைக்கின்ற ஒவ்வொரு முறையும் எங்களின் பயணத்தை நிறுத்தி விட்டு, திரும்பிப் போக வேண்டும்.
திரும்பி ஓட முனையும் போது நாய்கள் துரத்தும். மீண்டும் தெருவுக்கு வரத் துணியாத அச்சம் மனதுக்குள் ஏற்படும்.
அல்லது குரைத்துக் கொண்டிருக்கின்ற நாய்களைப் பற்றி கவலைப்படாமல், பதிலுக்கு நாங்களும் குரைத்து நேரத்தை வீணடிக்காமல், எங்களின் பயணத்தை தொடர வேண்டும்.
அது புத்திசாலித்தனமானது.
தமிழர் தரப்பு இதுவரை எங்கெங்கு தவறிழைத்திருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த தவறுகள் மீண்டும் நிகழாத வகையில் திட்டமிடல்களைச் செய்து கொண்டு இலக்கை நோக்கி நகர வேண்டும்.
இலங்கைத் தீவு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது, சிங்களத் தரப்பில் இருந்து இனவாதம் பேசும் நபர்கள் அடக்கி வாசித்தனர்.
அப்போது தமிழர்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டனர்.
நாட்டுக்குத் தேவையான டொலர்களைக் கொண்டு வர தமிழர்கள் தேவைப்பட்டார்கள். பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு தமிழர்களின் நிதி தேவைப்பட்டது.
பொருளாதார ரீதியாக வீழ்ந்து கிடந்த நாடு, இன்று எழுந்து நிற்க கூடிய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இப்போது தமிழர்களின் தயவும், தேவையும் இனவாதிகளுக்குத் தேவைப்படவில்லை. அவர்களுக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் தமிழர்கள் தங்களின் பாரம்பரிய தாயகம் என உரிமை கோருகின்ற வடக்கும் கிழக்கும் தான்.
வடக்கு, கிழக்கும் சிங்கள பூமி, பௌத்த மரபுரிமைகள் நிறைந்த இடம் என்று பறைசாற்றுவது தான் அவர்களின் இலக்கு.
இந்த இலக்கில் அவர்கள் தெளிவாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வப்போது சிங்களத் தலைவர்கள், 13 என்பார்கள். 13 பிளஸ் என்பார்கள். அதிகாரப் பகிர்வு என்பார்கள். ஆனால் ஒன்றையும் அமுல்படுத்த மாட்டார்கள்.
எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழர்களின் சார்பில் பண்டாரநாயக்கவுடனும், டட்லி சேனநாயக்கவுடனும் செய்து கொண்ட உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டது போலத் தான், 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் கிழித்தெறிவதற்கு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
அவர்களின் இந்த இலக்குகளை தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்னரும், குரைத்துக் கொண்டிருக்கும் நாய்களைப் புறக்கணித்து பயணத்தை தொடரப் போகிறோமா, பயந்து ஓடப் போகிறோமா, அல்லது தெருவில் இருந்து குரைத்துக் கொண்டிருக்கப் போகிறோமா?
கபில்