நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு (60900) ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.

இதில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவான நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 21999 ஆகும். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, 70238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அதற்காக இருநூற்றுக்கும் மேற்பட்ட பவுசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காலை மற்றும் மாலை வேளைகளில் வாகனங்களை கழுவுவதை தவிர்க்குமாறும், தண்ணீரை கவனமாக பயன்படுத்துமாறும் வாஷிங் மெஷின் மூலம் கழுவுவதை முடிந்தவரை குறைப்பதும் முக்கியம் என்றும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை வனவிலங்குகள் தண்ணீர் இன்றி கிராமங்களில் நடமாடுவதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version